Published:Updated:

''தமிழக லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் விரைவில்..'

Vikatan Correspondent

தடதடக்கும் தமிழக மீட்சி இயக்கம்

##~##

பெருகிவிட்ட லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராக மக்கள் கொந்தளித்ததன் விளைவுதான் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆகி இருப்பது! டெல்லியில் மட்டும்தான் மக்களிடம் அந்தக் கோபம் இருக்குமா..? தமிழகத்திலும் ஊழலுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். 'தமிழ் மீட்சி இயக்கம்’ அவர்களை ஒருங்கிணைக்கிறது.

 இந்த இயக்கத்தின் மாநிலக் கலந்தாய்வு கருத்தரங்கம் ஈரோட்டில் கடந்த 29-ம் தேதி நடந்தது. தலைவிரித்தாடும் லஞ்சத்தை சகித்துக்கொள்ளாமல் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கியவர்கள் பலர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். கிராமப்புற இளைஞர்களையும் இங்கே காண முடிந்தது.

இந்தக் கருத்தரங்கில் லஞ்சம் மற்றும் பணியில் நேர்மையற்ற முறையில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பட்டியலை தமிழ் மீட்சி இயக்கம் வெளியிட்டது. அதில், ஈரோடு மாநகராட்சியில் கமிஷனர்களாக இருந்த இருவர் மட்டுமே 36 லட்சம் லஞ்சம் வாங்கி இருக்கின்றனர் என்பதை பகிரங்கமாக அறிவித்தனர். இதற்கு பை நிறைய வைத்திருந்த ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்கள். தவிர, மாநகராட்சியில் ஒவ்வொரு பொறியாளரும் எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலும் வெளியிட்டனர். மாநகராட்சி கமிஷனர்களுக்கும் பொறியாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்த மணி என்பவரும் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்.

''தமிழக லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் விரைவில்..'

அவர் பேசும்போது அந்த நிகழ்வை விவரித்தார். ''ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் நான் பங்குதாரராக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் ஈரோட்டில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியை

''தமிழக லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் விரைவில்..'

டெண்டர் எடுத்தது. அதற்காக ஒவ்வொரு கட்டப் பணியும் முடிந்தவுடன் அதற்கான பில்லை சமர்ப்பிப்போம். ஒவ்வொரு பில்லும் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று இருக்கும். இதற்கெல்லாம் அதிகாரிகள் கேட்கும் லட்சங்களைக் கொடுத்தால்தான் எங்களுடைய பில்லுக்கு செக் வழங்குவார்கள். இல்லையென்றால் வேலையில் ஏதாவது குறை சொல்லி பில் தொகையைப் பாதியாகக் குறைத்துவிடுவார்கள். ஒருகட்டத்தில் எங்களை இந்தப் பணி செய்வதில் இருந்தும் நீக்கிவிட்டனர்.  இதெல்லாம் கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்தது. எங்கள் உரிமையைக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறோம். நாங்கள் லஞ்சப் பணம் கொடுத்ததை வீடியோவும் எடுத்து வைத்து இருக்கிறோம். அதனால்தான், இப்போது இருக்கும் நிர்வாகமும் எங்களுக்கு  டெண்டர் வழங்காமல் வேறு ஒரு புதிய கான்ட்ராக்டரை நியமிக்க முடிவுசெய்து இருக்கிறது. நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று பொங்கினார்.

தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகோபால், ''லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடித்துக்கொடுத்த மூன்று பேருக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கி இருக்கிறோம். ஜனவரி மாதம் 27-ம் தேதி கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒருவருக்கு ஒரு லட்சம் வழங்கப் போகிறோம். இன்னும் ஆறு பேருக்கு இதுபோல் பரிசு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமூக நலன் சார்ந்த 10 அமைப்புகள் இதற்காகவே தலா ஒரு லட்சம் வழங்க முன்வந்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் பட்டியலை விரைவில் வெளியிடப்போகிறோம்.

லஞ்சத்துக்கு எதிராக மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் லஞ்சம் வாங்கியவர்களைப் பிடித்துத் தருபவர் களுக்குப் பரிசுத் தொகையை வழங்கி வருகிறோம். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைப் பிடித்துக்கொடுப்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகம் முழுவதும் அமைப்பை ஏற்படுத்தியவுடன், அரசியல்வாதிகளின் ஊழலையும் ஆதாரத்துடன் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவோம். நேர்மையை விரும்பும் மக்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். நேர்மையான அதிகாரிகளும் நிறைய பேர் இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து என்னிடம் பேசினார். லஞ்ச அதிகாரிகள் பற்றி ஆதாரத்துடன் தகவல் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்.

நாங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் பேசுகிறார்கள். எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டோம். அது எங்கள் இயக்கத்தின் நோக்கம் அல்ல' என்றார்.

கெஜ்ரிவாலும் இப்படித்தான் சொன்னார்!

-எஸ்.கோபாலகிருஷ்ணன்

படம்: ரமேஷ் கந்தசாமி