Published:Updated:

மூன்றரை வயதில் இரண்டு சர்வதேச தங்கம்! - 'ஸ்கேட்டிங் சாம்பியன்' நேத்ரா

மூன்றரை வயதில்  இரண்டு சர்வதேச தங்கம்! - 'ஸ்கேட்டிங் சாம்பியன்' நேத்ரா
News
மூன்றரை வயதில் இரண்டு சர்வதேச தங்கம்! - 'ஸ்கேட்டிங் சாம்பியன்' நேத்ரா

மூன்றரை வயதில் இரண்டு சர்வதேச தங்கம்! - 'ஸ்கேட்டிங் சாம்பியன்' நேத்ரா

துறு துறு கண்கள்... பறக்கத் துடிக்கிற கால்கள்... காற்றில் அலையும் கைகள் என வசீகரிக்கிறார் நேத்ரா. மாஸ்டர் விசில் ஊதியதும் மின்னல் வேகத்தில் ஸ்கேட்டிங்கில் பறக்கிறார். வளைவில் சர்ரென்று திரும்பி, நம்மை நோக்கி வரும் நேத்ரா முகமெல்லாம் புன்னகை. நம் மீது மோதுவது போல வந்து சட்டென்று திரும்பிச் செல்கிறார்.

இரண்டரை வயதிலேயே தனது கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்ட நேத்ரா, தாய்லாந்து வரை சென்று சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அதுவும் இரண்டு தங்கப்பதக்கங்கள். சேலம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த நேத்ராவின் தந்தை பார்த்திபனிடம் பேசும் போது, "வீட்டுல ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டா. ஏதாவது ஒண்ணு செஞ்சிட்டே இருப்பா. ஸ்கேட்டிங் பழகட்டும்னு சேர்த்துவிட்டேன். ஆரம்பத்தில அவளுக்கு ஸ்கேட்டிங்கில ஆர்வம் இல்ல. ஒரு மாசம் ஆன பிறகு, ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு எனக்கு முன்பே கிளம்பி ரெடியா இருப்பா... மற்ற எல்லா வெற்றிக்கும் அவளோடு கோச் மேகலாதான் காரணம்" என்றார் பார்த்திபன். நேத்ராவின் சாதனைகள் பற்றி அவரின் பயிற்சியாளரான மேகலாவிடம் பேசினோம்.

''இது, தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி. தற்போது மூன்றரை வயதாகும் நேத்ரா, நான்கு முதல் ஆறு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். வயதில் மூத்தவர்களுடன் போட்டியிட்டு சாதனைப் படைத்த நேத்ரா, வருங்காலத்தில் பல்வேறு உலக சாதனை படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வருடம் ஸ்கேட்டிங் பயிற்சியை ஆரம்பித்த நேத்ரா, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஸ்கேட்டிங்கில் இந்தியா சார்பில் சர்வதேச அளவில், நான்கு வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்ற சிறுமி என்ற பெருமை நேத்ராவையே சாரும்.

''நேத்ரா ஸ்கேட்டிங்கில் இவ்வளவு வேகமாக இருந்தது எங்களுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துச்சு. பயிற்சியின்போது தொடர்ந்து கைதட்டி ஊக்கப்படுத்திட்டே இருப்போம். ஒவ்வொரு பயிற்சியையும் வேகமாகப் புரிந்துகொண்டு சரியான முறையில் செய்வார். அந்தப் புரிதலும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்குக் காரணம். இந்த வருஷம்தான் மேடம் ஸ்கூலில் சேரப்போகிறார்" என்று சொல்லியவர், "ஒரு விஷயத்தை மறந்துட்டேன். நடிகர் விஜயின் தீவிர ரசிகை நேத்ரா. கோவாவில் நடந்த போட்டியின்போது தான் பெற்ற பதக்கத்துடன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தாய்லாந்து போட்டியில் வெற்றிபெறவும் விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார்'' என்கிறார் பயிற்சியாளர் மேகலா.

"விஜய்னா நேத்ராவுக்கு அவ்வளோ பிடிக்கும். வீட்டுலேயும் விஜய் மாதிரி நடிச்சி காட்டுவா... அவரைப் பார்த்த அன்னைக்கு முழுக்க அதைப் பத்திதான் பேச்சு. அவளோடு ஃப்ரெண்ட்ஸ்கிட்டேயும் சொல்லிட்டே இருந்தா" என்ற நேத்ராவின் அம்மா ராதாவின் மடியில் வியர்வை வழிய அமர்ந்தார் நேத்ரா.

பள்ளியில் அட்டெனன்ஸ் போடும் முன்பே, சர்வதேச அளவில் தன் பெயரைப் பதித்துவிட்ட நேத்ராவுக்கு சபாஷ்! இந்த வெற்றிப் பயணம் இன்னும் உற்சாகத்துடனும் வேகத்துடன் புதிய புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும். அதற்கான வாழ்த்துகளை அட்வான்ஸாக இப்போதே சொல்லி வைப்போம்!