Published:Updated:

’கலைஞர்’ எனப் பெயர் சூட்டியது நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா? - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 2

’கலைஞர்’ எனப் பெயர் சூட்டியது நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா? - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 2
’கலைஞர்’ எனப் பெயர் சூட்டியது நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா? - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 2

2. நாடகக் கலைஞர்

குங்குமம் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். வயதான ஒரு மனிதர், காவலாளியிடம் `கலைஞரைப் பார்க்க வேண்டும்' என மன்றாடிக்கொண்டிருந்தார். காவலாளிக்கு அவரை எப்படி டீல் செய்வது எனத் தெரியவில்லை. அது கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரம் என்பதால், கெடுபிடி அதிகம் இருந்தது. இதுபோன்ற நேரங்களில் கொஞ்சம் காதுகொடுத்து கேட்பவன் என்ற ரீதியில் அவரை என்னுடைய அறைக்கு அனுப்பிவைத்தார் காவலாளி.

அவர் கலைஞரை `அது' என்றே அழைத்தார். அப்போதே அவரை ஆபத்தானவராக நினைக்கும் எண்ணம் போய்விட்டது.
அவர் பேசுவதை ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

''என் பேர் பாஸ்கருங்க. ராதா அண்ணன்கிட்ட  எலெக்ட்ரீஷியனா வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் திருச்சியில் அதிகமா நாடகம் போடுவாங்க. ஒரு பக்கம் அண்ணாவின் நாடகம் நடக்கும். இன்னொரு பக்கம் கலைஞரின் நாடகம் நடக்கும். அண்ணாவின் நாடகம் போடுறவங்க, அறிஞர் அண்ணாவின் `நீதிதேவன் மயக்கம்'னு விளம்பரப்படுத்துவாங்க. ராதா அண்ணன், கலைஞரின் நாடகத்தைப் போடுவாங்க. மு.கருணாநிதியின் 'தூக்குமேடை'னு மொட்டையா போட்டுவுட்டுவாங்க. ராதா அண்ணன்கிட்ட போய் `அண்ணாவுக்கு `அறிஞர் அண்ணா'னு போடுற மாதிரி, கருணாநிதிக்கு `கலைஞர் கருணாநிதி'னு போட்டா நல்லாருக்கும்ணே'ன்னு சொன்னேன். ராதா அண்ணன் சிரிச்சுக்கிட்டே `சரிடா'ன்னார். அன்றைக்கு நடந்த நாடகத்துக்கு போர்டு வைக்கும்போது, நான்தான் என் கையால 'கலைஞரின் தூக்குமேடை'ன்னு எழுதிப் போட்டேன். ராதா அண்ணனும் `கலைஞர் கருணாநிதி'ன்னு மேடையில அறிவிச்சார்'' என்று பேசிக்கொண்டே போனார். ராதா அண்ணன் எதற்கெல்லாம் கோபப்படுவார்; எப்படி எல்லாம் சிரமப்பட்டு நாடகம் நடத்தினார் என்றெல்லாம் அவருடைய பேச்சு இருந்தது.

`உலகத் தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயராக மாறிப்போயிருக்கும் `கலைஞர்' என்ற பெயரைச் சூட்டியவர், இந்த பாஸ்கர் என்ற நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா?' அது எனக்கு பிரமிப்பாக இருந்தது. கலைஞரின் உதவியாளர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, `கலைஞரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?' எனக் கேட்டேன். அவர் போய் கலைஞரிடம் சொல்லத் தயங்கினார். சிறிது நேரத்தில் கலைஞர் புறப்பட்டுவிட்டார். பாஸ்கர், 'கலைஞர் என்னை அடையாளம் கண்டுகொண்டால், காரை நிறுத்திப் பேசுவார்' எனச் சொன்னார். கருணாநிதியின் பார்வையில் அந்த பாஸ்கர் படுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட்டம் கும்பிடு போட்டுக்கொண்டிருந்தது. கலைஞரின் கார் கேட்டைத் தாண்டி போனதும் அந்த பாஸ்கர் கேட்டார், ''அது போறது சொந்தக் காரா... கவர்ன்மென்ட் காரா?''

''சொந்த கார்தான்'' என்றேன்.

''சொந்தமாவே வாங்கிடுச்சா?'' என்றார் பெருமையாக.

கருணாநிதி குறித்து அவர் மனதிலிருந்த பிம்பம் எனக்குப் புரிந்தது. மேடைப் பேச்சு, நாடகம் என்றிருந்த அவருடைய இளமைக்காலப் போராட்டத்தை நேரில் பார்த்த சாட்சியாக அவர் தெரிந்தார். கருணாநிதி எழுதிய பல நாடகங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். பக்கம் பக்கமாக அடுக்குமொழி வசனங்கள் அணிவகுக்கும். திராவிடர் கழகக் கொள்கைகளில் வாழைப்பழத்தில் ஊசி செருகினாற்போல் இருக்கும். 'துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை... அரசனை மட்டும் அல்ல; ஆண்டவனையும் எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள் மக்கள்' என்றெல்லாம் வசனம் அனல் பறக்கும்.

அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பற்றிய விமர்சனம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கைக்கு எதிர்ப்பு, பெண் சுதந்திரம் எல்லாவற்றையும் வரிசைப்படுத்திவிட்டு, அதற்கு நடுவே ஒரு கதையையும் சொல்லும் சாதுர்யம் அது. சாக்ரடீஸ் நாடகம், சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சுவை எல்லாம் இழையோடும்.

வெள்ளிக்கிழமை, தூக்குமேடை, சிலப்பதிகாரம், உதயசூரியன், மணிமகுடம், நச்சுக்கோப்பை போன்றவை கருணாநிதி எழுதிய நாடகங்கள். இவற்றில் சில, திரைப்படங்களாகவும் வெளிவந்தன. தி.மு.க-வின் பிரசாரம் எங்கெல்லாம் பலிக்குமோ அங்கெல்லாம் கருணாநிதியின் அஸ்திரங்கள் செயல்பட்டன. மேடைப்பேச்சு, சினிமா, இலக்கியம்போல மேடை நாடகத்திலும் அவருடைய பங்களிப்பு செறிவாகவே இருந்தது.