செல்வாக்கை சரிக்கட்டுமா சசிகலா அணி..? தினகரன் ஜாமீன் பின்னணி!

ளும் கட்சியாக இருந்தாலும் இருவேறு அணிகளாகப் பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்றாக இணைக்கும் பணி, வேகமாக நடப்பது போல வெளியில் தெரிந்தாலும் உள்ளுக்குள் என்னவோ வேறு கதை ஓடுகிறது. அவரவர் பலத்தைக் காண்பித்து கட்சி, ஆட்சி, இரட்டை இலைச் சின்னம் ஆகிய மூன்றையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில்தான்  இரண்டு அணிகளுக்குள்  பந்தயம் நடக்கிறது.  பந்தயத்தில் முந்திக்கொள்ளும் பாய்ச்சலில், சசிகலா அணியே முதலில் இருப்பதாகத் தெரிகிறது.

sasi

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட குளறுபடிகள் ஊரறிந்த ஒன்றே. அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா என்று இருந்துவந்த நிலை மாறி, சசிகலா, நடராஜன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் எனப் பலரது பெயர்களே ஊடகங்களை கடந்த சில மாதங்களாக ஆக்கிரமித்துவருகின்றன. இரு அணிகளாகப் பிரிந்ததிலும், இப்போது இணைவதிலும் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவும் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், டி.டி.வி தினகரனுக்கு தற்போது கிடைத்திருக்கும் ஜாமீன், விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதனால், சசிகலா அணி வலுப்பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், முதல்வர் பதவியில் சசிகலா அமர முயன்றபோது, அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டார். டி.டி.வி தினகரனும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம்  என எதிர்பார்த்திருந்த நேரத்தில் , பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இரட்டை  இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள், அ.தி.மு.க-வை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் குரல்கள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தினகரனுக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன், சசிகலா அணியின் கை மீண்டும் ஓங்குகிறதோ என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.  

டி.டி.வி தினகரன் சொன்னால்தான், அ.தி.மு.க எம்பி., மற்றும் எம்எல்ஏ-க்கள் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நிலை வலுவாக உள்ளது. அதனை மிகவும் தாமதமாக உணர்ந்த தினகரன் தரப்பு, 'நமது எம்.ஜி.ஆர்.' அஸ்திரத்தை எடுத்துள்ளது.  நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் எழுதப்படும் அரசியல் விமர்சனங்கள்,  பா.ஜ.க-வுக்கு எதிராகப் போகிற  விஷயம், தமிழக பா.ஜ.க. மூலமாக டெல்லி தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது என்றும், அதன் விளைவாக  டி.டி.வி தினகரன் அணியைக் கொஞ்சம்  விட்டுப்பிடிக்கலாம் என்றும்  டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக, கமலாலய வட்டாரம் தெரிவிக்கிறது. பா.ஜ.க-வுடன் சசிகலா அ.தி.மு.க-வின் உறவு எப்படி உள்ளது என்பது இப்போதைக்கு பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆனால், பா.ஜ.க-வை எதிர்க்க எப்படி நமது எம்.ஜி.ஆர் இதழுக்குத் துணிச்சல் வந்தது என்பதற்கு, ஜனாதிபதி தேர்தலைச் சுட்டிக்காட்டுகிறார்கள், அரசியல் நோக்கர்கள்.

ttv

மேலும், இரட்டை இலை விவகாரத்தில் இரு அணிகளும் பிரமாணப் பத்திரங்களை லாரிகளில் கொண்டுவந்து தாக்கல்செய்யும் கூத்துகளும் நடந்துவருகின்றன. சசிகலா அணியின் சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம்,  பிரமாணப் பத்திரங்களை இரண்டு லாரிகளில் கொண்டுவந்து தேர்தல் ஆணையத்திடம்  ஒப்படைத்தார். பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னர் மைத்ரேயனும், இப்போது மனோஜ் பாண்டியனும் ஆவணங்களை மாறி மாறி தாக்கல்செய்துவருகின்றனர். இவர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை அள்ளிக் கொண்டுவந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர். இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றுவதில், சசிகலா - பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தப் போட்டி, அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து, தற்போது பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்வதில் வந்து நிற்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க,  ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ., எஸ்.எஸ்.சரவணன், சசிகலா அணிக்குத் தாவத் தயாராகிவிட்டார் என்ற தகவலும் அலையடிக்கிறது. 'கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து தப்பித்து வந்தேன்' என்று உருக்கமாகப் பேட்டியளித்து பரபரப்பைக் கிளப்பிய சரவணன், அணி மாற முடிவெடுத்துள்ளதாகப் பரவும் தகவல், சசிகலா அணிக்கு தெம்பைக் கொடுத்துள்ளது. அதற்கு அச்சாரம் போடும் வகையில்,  ஜூன் 1 ஆம் தேதி, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த சரவணன், செல்லப்பாவுடன்  முன்பைவிட நீண்ட நேரம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது,அவரிடம் மனு ஒன்றையும் அளித்தார். விரைவில் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்க, ராஜன் செல்லப்பா போகும்போது கூடவே எஸ்.எஸ். சரவணனும் போவார் என்று  சொல்லப்படுகிறது. இப்படியான தகவல் பரவுவதைத் தெரிந்துகொண்ட எஸ்.எஸ்.சரவணன், 'நான் எப்பவுமே ஓ.பி.எஸ் அணிதாங்கோ' என அறிக்கை விட்டிருக்கிறார். ஓ.பி.எஸ். அணியில் இருக்கிற    எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராக இந்தப் பக்கம் வந்துவிடுவார்கள் என்கிறார்கள், விஷயம் அறிந்தவர்கள், அதில் ஒருவர், கட்சி தாவி வந்து மந்திரி சபையை அலங்கரித்தவராம்.

ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்காக சசிகலா பேனரை எடப்பாடி அண்-கோ அகற்றியிருந்தாலும், அ.தி.மு.க இன்னும் மன்னார்குடி கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்கிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!