Published:Updated:

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

Published:Updated:
வைரமுத்து ஜிப்பா கிழிய யார் காரணம்? கலகல கலைஞர்!

''சாணக்கியன் இன்று இருந்திருந்தால், கருணாநிதியிடம் ஆலோசனை கேட்க கோபாலபுரம் வாசலில் காத்துக்கொண்டிருந்திருப்பான்'' என்று  கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்டித்  தினப் பத்திரிகை ஒன்று எழுதியிருந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில்,  இந்தப் புகழாரம் நிச்சயம் கருணாநிதிக்கு மட்டுமே பொருந்தும்.

'' 'கருணாநிதி வாழ்க' என்றாலும், 'கருணாநிதி ஒழிக' என்றாலும் அதில், 'கருணாநிதி' என்ற என் பெயர் வருகிறதே'' என்று கருணாநிதியே அடிக்கடி சொல்வார். இப்படித் தமிழக அரசியலின் ஒவ்வோர் அசைவிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து செயல்படுபவர் அவர். தனது நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில், இதை அவர் நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.

இந்திய அளவில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ராஜாஜியை, 'அபிமன்யு' திரைப்படத்தில்... 'அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் சூழ்ச்சி' என்று வசனத்தின் மூலம் தொட்டுப்பார்த்த கருணாநிதிதான், பின்னர் நேரடி அரசியலில் ஈடுபட்டு விமர்சிக்கவும் செய்தார். சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்து 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட கருணாநிதி, இப்போது விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்துகொண்டிருப்பதையும் பார்க்கிறார்; சீமான் தன்மீது சீறிப்பாய்வதையும் சிரித்த முகத்துடன் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார். 

அகில இந்திய அளவில் இந்திரா காந்தியுடன் மோதியவர், பின்னர் 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக' என்று ஆதரிக்கவும் செய்தார். வாஜ்பாய், ஜோதிபாசு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், ஐ.கே.குஜ்ரால் என வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருடனும் அரசியல் செய்து, 'இந்திராவின் மருகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க' என்று இந்திரா காந்தியின் மருகமள் சோனியா காந்தியுடனும் அரசியல் கூட்டணி வைத்தார். 

அரசியலில், கருணாநிதியின் இத்தனை நெடுந்தூர பயணத்தில், அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம். அரசியல் பழிவாங்கல்கள் அதிகம். அவரை வானளாவப் புகழ்ந்தவர்களே பின்னர் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவரை விமர்சித்ததும் உண்டு. அத்தனையையும் தாங்கிக்கொண்டு தமிழக அரசியலில், இத்தனை ஆண்டுக்காலம் அவரால் கோலோச்ச முடிந்திருக்கிறது. பொதுவாழ்வில், விமர்சனமும் எதிர்ப்பும் சர்வ சாதாரணம் என்பதை அறியாதவரா கருணாநிதி? அதனால்தான், கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்த விஜயகாந்த், ''நான் ஏதாவது பேசியிருந்தால் மனசுல வெச்சுக்காதீங்க'' என்று சொல்ல, ''பரவாயில்லை, அதெல்லாம் விடுய்யா'' என்று கருணாநிதியால் சொல்ல முடிந்தது.

அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில், நால்வரான நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் ஆகியோரை எல்லாம் மீறி கருணாநிதியால் கட்சியின் தலைமை இடத்துக்கு எப்படி வர முடிந்தது? அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பேச்சு, எழுத்துத் திறனோடு, களத்தில் இறங்கிச் செயலாற்றும் திறனும் கருணாநிதிக்கு அதிகம் இருந்தது; அதுதான் காரணம்.

கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் பெற்றவர் கருணாநிதி. கல்லக்குடி போராட்டம் பற்றித் தன் 'வனவாசம்' நூலில் எழுதிய கண்ணதாசன், ''மூன்று குழுக்களாகச் சென்று ரயிலை மறிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஒரு குழு என் தலைமையிலும், இன்னொரு குழு கருணாநிதி தலைமையிலும் சென்றது. ரயிலை மட்டுமே மறிக்க வேண்டும் என்ற திட்டத்தை மாற்றி, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துவிட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அப்படிச் செய்ததன்மூலம் அப்போதே தன்னைப் பற்றிப் பரபரப்பாகப் பேசவைத்துவிட்டார்.

டைமிங் ஜோக் என்பார்களே, அது கருணாநிதிக்குக் கைவந்த கலை. அவர் முதல்வராக இருந்தபோது அவருடன் கவிஞர் வைரமுத்து, அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் உட்காரும்போது, வைரமுத்துவின் ஜிப்பா நுனியின் மீது டி.ஆர். பாலு உட்கார்ந்துவிட்டார். கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி வீடு வந்ததும், காரில் இருந்து வைரமுத்து முதலில் இறங்கினார். எனவே, அவரின் ஜிப்பா சற்று கிழிந்துவிட்டது. டி.ஆர்.பாலுவால்தான் ஜிப்பா கிழிந்தது என்பதை அறிந்த கருணாநிதி, ''இனிமே மத்திய அமைச்சர் பாலு, என்ன கிழிச்சார்னு யாரும் கேட்க முடியாது'' என்று சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

சட்டமன்றத்தில் ஒருமுறை, அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி., தனது துறைமீது பதிலளித்துப் பேச எழுந்தபோது, முதலமைச்சர் கருணாநிதி அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்தனுப்பினார். அதில் 'அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று எழுதியிருந்தார். இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வும் எழுத்தின் மீதான அவரின் தணியாத ஆர்வமும் அவரை அரசியல் அனலில் இருந்து காக்கும் அரணாக  இருக்கின்றன.

1957-ல் முதன்முதலில், சட்டமன்ற உறுப்பினராகி அதன்பிறகு இந்த 60 ஆண்டுகளில் தோல்வியே காணாமல், வைர விழா காணும் கருணாநிதியால், இப்போது தீவிர அரசியலில் இயங்க முடியவில்லை. கருணாநிதி மீது எத்தனையோ குற்றம் குறை சொல்லலாம். ஆனால், கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல், 50 ஆண்டுக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள் இல்லை. அந்த அளவுக்கு அவரின் ஆளுமை ஆழ வேரூன்றி இருக்கிறது.