Published:Updated:

தமிழ் மண்ணே வணக்கம்!

Vikatan Correspondent
##~##

ஜூனியர் விகடனின் 'தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செந்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

 முதலில் பேசிய மருத்துவர் கு.சிவராமன், ''உழவே தலை என்று இருந்த சமூகத்தில், இன்று விவசாயம் செய்யப்போவதாகக் கூறினால் ஏளனமாகப் பார்க்கிறார்கள். பிரதமரே விவசாயம் செய்ய வேண்டாம் என்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிக்கன்பூர் செல்லக் கூடிய ரயிலை கேன்சர் எக்ஸ்பிரஸ் என்கிறார்கள். ஏன் இந்தப் பெயர் என்றால், பஞ்சாப் மாநிலத்தில் பாஸ்மதி அரிசி விளைவிக்கிற பெருவாரியான விவசாயிகளுக்கு கேன்சர். அவர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக அந்த ரயிலில் பிக்கன்பூரில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர். ஏன் அந்தப் பகுதியில் மட்டும் கேன்சர் வருகிறது? பாஸ்மதி அரிசி உற்பத்தியைப் பெருக்க ஏராளமாகக் கொட்டப்படும் உரங்களும் பூச்சி மருந்துகளும்தான் காரணம்.

தமிழ் மண்ணே வணக்கம்!

இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் பல வெடி மருந்து தொழிற்சாலைகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன. எக்கச்சக்கமான ரசாயனங்கள் கிடங்கில் தேங்கி நின்றன. இதனை எப்படியாவது விற்பனை செய்தாக வேண்டும் என்று யோசித்து உரங்களாக மாற்றியதன் விளைவுதான் ரசாயன உரங்கள். வறுமை காரணமாகத்தான் பசுமைப் புரட்சி கொண்டுவந்தனர் என்று கூறுவது சுத்தப் பொய். பசுமைப் புரட்சியால் நம்மிடம் இருந்த இரண்டு லட்ச அரிசி ரகங்கள் 35 ஆக குறைந்துவிட்டன. முதலில் நன்றாக விளைச்சல் கொடுத்த நிலமெல்லாம் இன்று மலடாகிவிட்டன. பசுமை புரட்சியால் விவசாயம் செழிக்கும்; வறுமை ஒழியும் என்று கூறிய அரசு, இப்போது உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் பதிலாக மரபணு மாற்று பயிரைக் கொண்டுவருவதாகக் கூறி மொத்தமாக நமக்கு உலை வைக்க தயாராகி வருகிறது'' என்றார்.

தமிழ் மண்ணே வணக்கம்!

'வரலாறு வழிகாட்டுகிறது’ என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ''இது விழுப்புரம் என்பதால் உங்கள் ஊரில் உள்ள சிறப்புகளைச் சொல்கிறேன். கண்டாச்சிபுரம் அருகே கீழ்வாளை என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள மலை குகையில் 3,000 வருடங்களுக்கு முன் நாம் முன்னோர்கள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. கலையிலும் இலக்கியத்திலும் ஓவியத்திலும் நம் மூதாதையர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கான சான்று இந்த ஓவியங்கள். விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறப்பு வாய்ந்த ஊர் திருவக்கரை. இந்தியாவிலே அஸ்ஸாமிலும், திருவக்கரையிலும் மட்டுமே கல்மரம் உள்ளது. ஒரு மரம் கல்லாக மாற இரண்டு லட்சம் வருடங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கீழ்வாளையும் திருவக்கரையும் விழுப்புரத்தில் உள்ளவர்களுக்குக்கூட தெரியவில்லை.

20 வருடங்களுக்கு முன் திருவக்கரையில் இருந்த கல்மரங்கள் பாதிக்குமேல் இன்று காணாமல் போய்விட்டன. சமீபத்தில் சென்னை மியூசியத்தில் உள்ள வரலாற்று பொக்கிஷங்கள் திருடு போயின. நமக்கு அதில் அக்கறை இல்லை. இது நம் முன்னோர்களின் சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டும்.

சென்னை ராஜதானியில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தார். திண்டிவனம் பக்கத்தில் உள்ள ஓமந்தூர்தான் அவரது சொந்த ஊர். இன்று கெஜ்ரிவாலை பார்த்து முன்மாதிரி முதல்வர் என்கிறார்கள். இவருக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தவர், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான். இவர் முதல்வரானதும் அரசு வழங்கிய பங்களாவை ஒதுக்கிவிட்டு, கூவம் நதி பக்கத்தில் ஐந்து ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்தார். அவர் விவசாயி என்பதால் ஞாயிற்றுக்கிழமையானால் விவசாயம் பார்க்க அவருடைய சொந்த ஊருக்கு சென்றுவிடுவார். நிலத்தில் விளைந்த பொருட்களை அவரே விழுப்புரம் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பார்.

ஓமந்தூர் கிராமத்தில் முதன்முதலாக மின்சார பம்ப் செட் பொருத்தினார்கள். இதைப் பார்த்துவிட்டு முதல்வரின் தம்பி தங்களது தோட்டத்து பம்ப் செட்டுக்கும் மின் இணைப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். முதல்வரின் தம்பி என்பதால் அதிகாரிகளும் உடனே அளித்துவிட்டனர். வார இறுதியில் ஓமந்தூரார் தன் தோட்டத்துக்கு வரும்போது பம்ப் செட் ஓடுவதைப் பார்த்து அதிகாரிகளை அழைத்து, 'பம்ப் செட் மின் இணைப்புக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும்போது எனக்கு மின் இணைப்பு அளித்தது தவறு. 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பை அகற்றுங்கள்’ என உத்தரவிட்டதுடன், தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய தம்பிக்கு ரூ.120 அபராதமும், மின் இணைப்புக்குக் காத்திருந்த மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இன்று அரசு அதிகாரி தவறுசெய்தால் இடமாற்றம் செய்வார்கள். ஆனால், ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது ஒரு அதிகாரி தவறுசெய்தால், மரம் வைத்து பராமரிக்க வேண்டும். அப்படி அதிகாரிகள் பராமரித்த மரம் வளரவில்லை என்றால் அவர்களுக்குப் பதவி உயர்வு கிடையாது'' என்றார்.

அடுத்த பயணம் திருவண்ணாமலை...