இரட்டை இலைச் சின்னம்... இருவருக்கு ஜாமீன்! | Bail granted for 2 accused in ADMK symbol case

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (06/06/2017)

கடைசி தொடர்பு:15:49 (06/06/2017)

இரட்டை இலைச் சின்னம்... இருவருக்கு ஜாமீன்!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாபு பாய் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி

ஆர்.கே.நகர் தேர்தலின் போது இரு அணிகளாக அ.தி.மு.க பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டி.டி.வி.தினகரனுடன் சேர்த்து அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹாவாலா ஏஜெண்டுகள் நரேஷ் என்கிற நாதுசிங் மற்றும் லலித் என்கிற பாபு பாய் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே இன்று டெல்லி குற்றவியல் நீதிமன்றம் பாபு பாய் மற்றும் நாதுசிங் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 1-ம் தேதி முன்னர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணை நாளை நடைபெறவுள்ளது.