ஜெயக்குமாரை அதிர வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி!

'ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்' எனத் தினகரன் அணியிலுள்ள எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தங்க

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், சில நாள்களுக்கு முன்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்து பல அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சென்னை அடையாறில் இருக்கும் அவரது வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பேசி வருவது பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

ஜாமீனில் வெளியில் வந்தவுடன், "நான் ஒதுங்கியிருந்தும் கட்சி ஒற்றுமை ஆகவில்லை. அதனால் நான் இன்னும் துணைப்பொதுச்செயலாளராகத் தொடர்கிறேன். என்னை நீக்கும் அதிகாரம் யாருக்குமில்லை" என்று அறிவித்தார். இதனால் கட்சியில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது.

இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார், "தினகரன் பக்கம் யாரும் போக மாட்டார்கள்" என்று தினகரனை விமர்சித்துப் பேட்டியளித்தார். இந்த நிலையில் இன்று காலையிலிருந்து சென்னையிலுள்ள தினகரன் வீட்டில் 24 எம்.எல்.ஏ.க்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று  ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் பல எம்.எல்.ஏக்கள் இந்தப்பக்கம் வருவார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கலைராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தினகரனைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வரின் ஆலோசனையிலும் பங்கேற்பர். 30 எம்.எல்.ஏ.க்கள் அண்ணன் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். சென்னையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த அவர், 'ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்' எனக் கூறியுள்ளார். மேலும் 'ஓ.பி.எஸ் போல கட்சியையும், ஆட்சியையும் கவிழ்க்க முயல மாட்டோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தினகரனை ஒதுங்கச் சொல்ல அமைச்சர் ஜெயக்குமாருக்கு என்ன அதிகாரம் உள்ளது; எதன் அடிப்படையில் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!