'நான்  எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை; இது இறைவன் மீது ஆணை!'- தமிமுன் அன்சாரி திட்டவட்டம்

சசிகலா அணியில் எம்.எல்.ஏக்களை சேர்க்க பல கோடி பேரம் பேசப்பட்டதாக அ.தி.மு.க எம்.ஏல்.ஏ. சரவணன் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தெரிவித்திருந்தார். இதில் அதிகபட்சமாக எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் தர பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

தமிமுன்  அன்சாரி 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு தன் கண்டனத்தையும் மறுப்பையும் தெரிவித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான எம்.தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

' 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் சரவணன் எம்.எல்.ஏ., அவர்கள் பல அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறியுள்ளதாகவும் அதில் எனக்கும் 10 கோடி ரூபாய்  கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் .

நோன்பு துறந்துவிட்டு வீட்டில் அமர்ந்திருந்த எனக்கு இச்செய்தி வந்ததும் மிகுந்த வேதனையடைந்தேன். அ.தி.மு.க எதிர்ப்பு என்ற அடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியும் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது.

நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும்.

செங்கோட்டையன் 

மேலும், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்துக்கு வந்தபோது 'கரண்ஸி பாலிடிக்ஸ்' எங்களுக்கு பிடிக்காது என்பதையும் கூறினோம். அவரும் எங்களைப்பற்றி முழுமையாக தெரிந்தவர் என்பதால் சிரித்துக்கொண்டே அதை ஆமோதித்தார். எங்களிடம் நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.
உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம்.

உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின்  தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

அப்போது இதைத்தவிர நாங்கள் எதுவும் பேசவில்லை. எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை. இது இறைவன் மீது ஆணையாகும்! இது அ.தி.மு.க தலைவர்களும் அறிந்த உண்மையாகும்.

இப்படியிருக்க சமீப காலமாகவே எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இடையில் சில முரண்பாடுகள் நிலவி வருகிறது.
அ.தி.மு.க அரசுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு செய்யும் சூழ்ச்சிகளை நாங்கள் உரத்த குரலில் கண்டித்து வருகிறோம்.

இந்நிலையில், 'டைம்ஸ் நவ்' வழக்கமான விளம்பர பரபரப்புக்காக ஊடக அறத்தை மீறி செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இதற்கு 'பின்னணி' என்ன என்பது டெல்லியை கவனிப்பவர்களுக்குப் புரியும்.

சரவணன் எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டை 100 சதவிகிதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். இது தொடர்பாக ம.ஜ.க சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நான் உடல் நலம் குன்றி, இப்போது தான் தேறி வந்த நிலையில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் அரசியலுக்கு வந்தோம்? நமக்கு இதுவெல்லாம் தேவையா ? என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது. தமிழக ஊடக நண்பர்களும், சமூக, இணையதள செயல்பாட்டாளர்களும் தயவுசெய்து இவ்விஷயத்தில் உண்மையாகவும் விசாரித்தும் கருத்துகளை வெளியிடும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!