வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (17/06/2017)

கடைசி தொடர்பு:16:35 (17/06/2017)

மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு...அரசியல் தலைவர்கள் கண்டனம்!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன்  உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல்

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், கன்னியாகுமரி மேல்புறத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதுக்கு ஸ்டாலின், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்,திருமாவளவன்  உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஸ்டாலின், 'சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை அரசு வேடிக்கை பார்க்க கூடாது. பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார். மேலும், வைகோ கூறுகையில், 'காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில் 'இந்த தாக்குதலை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு வகுப்புவாதிகள் இங்கே காலூன்ற  முயற்சிக்கிறார்கள். அதற்கு  வன்முறையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கட்சி அலுவலகத்தைத் தாக்கிய  வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்து அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.