ஆளுங்கட்சிக்கு ஆட்டம் காட்டுவோம்'- 3 எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பின் பின்னணி!

தனியரசு

“ஆதரிக்கவேண்டிய விவகாரங்களை ஆதரிப்போம்; எதிர்க்க வேண்டியவற்றை எதிர்ப்போம். இனி சட்டசபையில் எங்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கப்போகிறது” என ஆளும் கட்சியினருக்கு 'ஷாக்' கொடுக்க ஆரம்பித்துள்ளனர் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர். 


அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், மற்றும் தனியரசு . கடந்த ஓர் ஆண்டாக அ.தி.மு.க ஆட்சிக்கு ஆதரவாகவே இவர்கள் இருந்துவந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டு அணியாக உடைந்தபோது, இந்த மூவரும் சசிகலா அணியை ஆதரித்தனர். சட்டசபையிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவே இதுவரை செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 'மாட்டிறைச்சி விவகாரத்தில், முதல்வரின் பதில் திருப்தி தரவில்லை' என்று கூறி முதல்முறையாக 3 பேரும் இணைந்து வெளிநடப்பு செய்திருப்பது தி.மு.க-வினருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆளும்கட்சிக்கு எதிராக திடீர் என இந்த 3 பேரும் கைகோத்த பின்னணி இதுதான்...

''அ.தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டு இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தபோது அ.தி.மு.க-வின் ஆதரவில் வெற்றிபெற்ற இந்த மூவரின் ஆதரவு குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது அமைச்சர்கள் சிலர் இந்த மூவரிடமும் தொடர்புகொண்டு தனித்தனியாகப் பேசியுள்ளார்கள். அப்போது இந்த மூவரிடையே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபையில் எடப்பாடி அணிக்கு ஆதரவாக 3 பேரும் இணைந்து வாக்களித்தனர். 

அதன் பிறகும் அரசுக்கு இணக்கமாகவே செயல்பட்டுவந்தார்கள். ஆனால்,  இந்த மூவரின் கோரிக்கைகளை அமைச்சர்கள் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் 3 பேருக்குமே இருந்துவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தமீமுன் அன்சாரி தலைமையில், 'இனி சட்டசபையில், தனியாகச் செயல்பட வேண்டும்' என்று பேசியுள்ளார்கள். தமீமுன் அன்சாரிதான் இதற்கான திட்டத்தில் முதலில் ஈடுபட்டார். தனியரசு, கருணாஸையும் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 'சட்டசபையில் நாம் இணைந்து செயல்பட்டால்தான் நமது குரலுக்கு மதிப்பிருக்கும்' என்று அப்போது பேசியுள்ளார்கள். அதன்படிதான் மாட்டிறைச்சி விவகாரத்தில், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமீமுன் அன்சாரி தனிநபர் தீர்மானம் கொண்டுவர முயன்றார். ஆனால், அதற்கு சபாநாயகரும், முதல்வரும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

எம்.எல்.ஏ


அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில், இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததும், அதை வைத்தே அரசுக்கெதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்ய தமீமுன் அன்சாரி முடிவு செய்தார். மாட்டிறைச்சி விவகாரத்தில், முதல் முறையாக மூவர் அணி களத்தில் இறங்க முடிவு செய்தது. தமீமுன் அன்சாரி முதல்வரின் பேச்சுக்கு எதிராக வெளிநடப்பு செய்ய முடிவு செய்ததும், அவருடன் தனியரசுவும், கருணாஸும் இணைந்துகொண்டதும் அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“ஆளும்கட்சியை ஆதரிக்க வேண்டிய விவகாரங்களில்தான் இனி ஆதரிப்போம். எதிர்க்க வேண்டிய விவகாரங்களில், இனி எதிர்த்துதான் செயல்படுவோம். இனி 3 பேரும் சட்டசபையில், இணைந்து தனி அணியாகச் செயல்படுவோம். ஆனால், ஒருபோதும் ஆட்சிக்குப் பங்கமாக நாங்கள் இருக்கப்போவதில்லை. பிரச்னைகளின் அடிப்படையில்தான் எங்கள் ஆதரவு அரசுக்கு இருக்கும்” என்கிறார் தமீமுன் அன்சாரி. ஆனால், இவர்கள் அணிதிரண்டதன் பின்னணியில், தினகரன் தரப்பு இருப்பதாக எடப்பாடி அணியினர் சந்தேகம் கொள்கிறார்கள். 'தினகரன் தரப்பிலிருந்து இந்த மூவரையும் பலமுறைத் தொடர்புகொண்டு பேசியதுதான் இந்த வெளிநடப்புக்கு முக்கியக் காரணம்' என்று எடப்பாடி தரப்பில் புலம்பல் எழுகிறது.

அ.தி.மு.க ஏற்கெனவே 3 அணியாக இருக்கின்றன.  இப்போது 3 எம்எல்ஏ-க்கள் சேர்ந்து தனியாக ஒரு அணி அமைத்திருப்பது யாருக்காக... என்று தெரியவில்லை!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!