Published:Updated:

முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது இன்று விசாரணை!

Vikatan Correspondent
முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது இன்று விசாரணை!
முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது இன்று விசாரணை!
முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது இன்று விசாரணை!

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, ராஜீவ் தவன் ஆகியோர், ""நீடித்து வரும் அணை விவகாரத்தில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்த கேரளம் விரும்புகிறது'' என்று கூறினர்.

இதையடுத்து, ""அணை பிரச்னை குறித்து இரு மாநில அரசுகளும் பேசித் தீர்வு காணுங்கள்'' என்று அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் குழு அறிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை புதிய மனுவை கேரளம் தாக்கல் செய்துள்ளது.

அதில், முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளது, அதற்கு நில நடுக்கத்தைத் தாங்கும் அளவுக்குத் திறன் இல்லை என்று டெல்லி, ரூர்கி ஐஐடி பேராசிரியர்கள் குழு அளித்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் குழு தாக்கல் செய்த அனைத்து ஆய்வறிக்கைகளையும் கேரளத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.