Published:Updated:

தயாளு கருணாநிதிக்கு சிக்கல்!

சி.பி.ஐ. வழக்கில் சாட்சி.. குற்றவாளி என்கிறது அமலாக்கத் துறை

பிரீமியம் ஸ்டோரி

தனது 10 ஆண்டு ஆட்சியை முடிக்கும் இறுதியில் 'நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற ரீதியில் ஒரு குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. பெயரளவுக்கு சுய அதிகாரம் பெற்ற சி.பி.ஐ. மாதிரியான அமைப்புகூட அல்ல இது. மத்திய அரசின் நிதித் துறைக்குக் கீழ் நேரடியாக இருக்கும் அமலாக்கத் துறைதான் இந்த புதிய குற்றப்பத்திரிகை மூலம் தி.மு.க. குடும்பத்தை இறுதியாக சுற்றி வளைத்துள்ளது. அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கீழ் இருக்கும் நிதித் துறையின் முழு கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அமலாக்கத் துறை தமிழக தேர்தலுக்கு மறுநாள் 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளை மற்றொரு புதிய குற்றப்பத்திரிகைக்குள் தள்ளியுள்ளது. பி.எம்.எல்.ஏ. என்று சொல்லப்படும் சட்டவிரோத பரிவர்த்தனை சட்டத்தின் (Prevention of Money-Laundering Act)) கீழ் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயாளு கருணாநிதிக்கு சிக்கல்!

கூட்டணி முறிவுக்கு எந்த உள்கோபம் காரணமாக இருந்ததோ... அந்த வெந்த புண்ணிலே மேலும் ஒரு வேல் என்று தி.மு.க. குடும்பம் உணரும் விதமாக இந்தக் குற்றப் பத்திரிகையும் பாய்ந்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனதும், ''ஓஹோ, பழைய குற்றப்பத்திரிக்கையில் இருந்த ஓட்டைகளைச் சரிசெய்து விட்டார்களா?'' என்று டெல்லியில் கிண்டல் அடித்தார்கள்.

''சி.பி.ஐ. முன்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை என்பது, ஒருவேளை கூட்டணி அமைத்து இரு கட்சிகளும் வெற்றிபெற்று சுபிட்சம் ஆகிவிட்டால் தப்புவதற்கு வழிவகை உள்ளதாகத் தயாரிக்கப்பட்டது. அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை என்பது, 'கூட்டணியும் அமையவில்லை; துரோகம் செய்துவிட்டு கூட்டணியும் இவர்கள் தாவுவார்கள்’ என்ற நிலை வந்ததால் ஓட்டைகள் அடைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்படுவது'' என்கிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணம் முறைகேடான வழிகளில் வந்துள்ளதாக மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டுகிறது. கலைஞர்  தொலைக்காட்சியின் பங்குதாரர்களாக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, நிதி அதிகாரி அமிர்தம், நிர்வாக அதிகாரி சரத்குமார் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி இவர்கள் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு 4,000 பக்கமுள்ள குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை சமர்ப்பித்து உள்ளது.

2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஒதுக்கியதன் காரணமாக அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கு சி.பி.ஐ-யின் கைகளுக்குப் போனது. அவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது பல ஆவணங்களை சோதனை செய்தபோது, கலைஞர் தொலைக்காட்சிக்கு 233 கோடி ரூபாய் பணம் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. இந்தத் தகவல் வெளியானதும், மத்திய அமலாக்கப் பிரிவு, கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்திருந்த இந்தப் பணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் குற்றவாளிகளாக, ஆ.ராசா, தயாளு அம்மாள், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரி சரத் குமார் ரெட்டி, தலைமை நிதி அதிகாரி அமிர்தம், வினோத் கோயங்கா, குஷேகான் புரூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரிம் மொரானி உள்ளிட்டவர்களும் ஸ்வான் டெலிகாம், குஷேகான், ரியல்டி புரோமோட்டர்ஸ், சினியுக் மீடியா, கலைஞர் தொலைக்காட்சி, டைனமிக் ரியல்டி, எவர்ஸ் மைல் கன்ஸ்ட்ரக்ஷன், டி.பி.ரியல்டி உள்ளிட்ட நிறுவனங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். ''இந்தப் பணம் யார் மூலமாக யார் கையில் தரப்பட்டது என்ற விஷயங்கள் விசாரணைக்கு வரும்போது இன்னும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளது'' என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.

இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 30-ம் தேதிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. 2ஜி  வழக்கில் வெறும் சாட்சிகளாக இருந்தவர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாகி உள்ளனர். 2ஜி அலைக்கற்றையை வழக்கை சி.ஏ.ஜி. அறிக்கையின் தோராய மதிபபீடு என்று சொல்லி இன்னும் தங்கள் பக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆவணப்பூர்வமான அமலாக்கத் துறையின் இந்தக் குற்றப்பத்திரிகை மிகப்பெரிய குடைச்சலைக் கொடுக்கும்!

- சரோஜ் கண்பத், ஜோ.ஸ்டாலின்

அமலாக்கப் பிரிவின் பணி!

ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கு எங்கிருந்து பணம் வருகிறது... போகிறது என்பதை கண்காணிக்கும் அமைப்பு. நிறுவனம் அல்லது தனிநபரின் கணக்கு வழக்குகள், வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் இந்தக் கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது தனிநபரிடம் இருக்கும் பணத்துக்கும், அவர்கள் செலவு செய்த பணத்துக்கும் உரிய கணக்கைக் காண்பிக்க முடியாமல் போகும்போது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுக்கும். அப்படி காண்பிக்கும்போது அது சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்தால், அதை அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு