Published:Updated:

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

'நாளை மதியம் தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டம் இருக்கிறது. வரவும்!’ - ஏப்ரல் 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டும் இப்படி ஒரு அவசர அழைப்பு போனது. ஆறு மாவட்ட கலெக்டர்களும் சென்னைக்கு விரைந்தனர்.

தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் நடந்த அந்த திடீர் கூட்டம் எதற்குத் தெரியுமா? அடுத்த சில வாரங்களில் தமிழகம் சந்திக்க இருக்கும் தண்ணீர் பிரச்னையைப் பற்றியது. உள்துறைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மைச்

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

செயலாளர், ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் அங்கு இருந்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆறு மாவட்ட கலெக்டர்கள்தான் அவசரக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள். பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டம் முடிய இரவு 8 மணி ஆனது.

''இன்னும் சில வாரங்கள் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் அதிகமாக குடிநீர் பிரச்னையை சந்திக்கப்போவது உங்கள் ஆறு மாவட்டங்கள்தான்! அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதற்காகவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்'' என்று பேசியிருக்கிறார் தலைமைச் செயலாளர். கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர்களும், அதிகாரிகளும் ஒவ்வொரு ஆலோசனைகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். அரசு அச்சப்படும் அந்த ஆறு மாவட்டங்களின் நிலை என்ன? அதைப் பற்றிய அலசலே இந்தக் கட்டுரை.

திக் திக் திருவள்ளூர்...

பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகியவைதான் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள். இவை பராமரிக்கப் படாததுதான் மாவட்டத்தின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணம். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெற ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். சேதமான மதகுகள் சீரமைக்கப்படாததாலும், தண்ணீர் வரும் வழியிலேயே ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சிவிடுவதாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது இல்லை. வருடத்துக்கு இரண்டு முறை என ஆந்திரா கொடுக்கும் 12 டி.எம்.சி. தண்ணீரில் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் உள்ளது. பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், இன்று ஆயிரம் கன அடிகூட இல்லை.

காஞ்சிபுரம் வழியாக பாலாற்றில் இருந்து ஆற்று நீரை கொண்டுவந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து இருக்கின்றார்கள். அந்த ஏரியும் சரியான பராமரிப்பு இன்றி இருக்கிறது. ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழம் மணல் அள்ளப்பட்டுவிட்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க பரவலாக வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 10 நாளுக்கு ஒருமுறை நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்.

தவிக்கும் வேலூர்!

ஒருகாலத்தில் வேலூர் மாவட்டத்தின் தாகம் போக்கிய பாலாறு இன்று மணல் கொள்ளையர்களால் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. ''விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் ஆந்திரா, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாயிலும் வயிற்றிலும் அடித்தது. தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளும் பாலற்றைக் காக்க எந்தவொரு தொலைநோக்கு திட்டங்களையும் முறையாக வகுக்காமல் மணல் கொள்ளைக்கு உடந்தையானதுதான் உச்சக்கட்ட கொடுமை.

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

வேலூர் மாவட்டத்தில் இப்போது சாதாரணமாக 800 அடிக்கு மேல் போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும் என்பது நிலை. மாவட்டத்தில் உள்ள ஐந்து அணைகளும் வறண்டுவிட்டன. கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. நீர் விநியோகம் வாரம் ஒருமுறை, சில பகுதிகளில் மாதம் ஒருமுறை என்ற அவலநிலைக்கு மாறியுள்ளது. ஆறு தன் தன்மையை இழக்க இன்னொரு காரணம், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆற்றுநீரை உறிஞ்சுவதோடு, கழிவுநீரை சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுகின்றனர்'' என்று வருத்தத்துடன் சொல்கிறார் சமூக ஆர்வலரான மார்த்தாண்டன்.

வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் வேலூர் மக்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் சிந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

கலக்கத்தில் கடலூர்!      

ஊற்று வலம் கண்ட கடலூர் மாவட்டம் இப்போது, தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி மாவட்டங்களில் ஒன்று. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கடலூர் மாவட்டத்தில், நிலத்தடி நீரின் ஆதாரமாக விளங்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க வீராணம், வெலிங்டன், பெருமாள், வாலாஜா போன்ற மிகப் பெரிய ஏரிகள் இப்போது பாளம் பாளமாக வெடித்து, வானம் பார்த்துக் காத்திருக்கின்றன.

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரி மழையளவு 1,319 மில்லி மீட்டர். கடலூருக்கு மேற்கே அமைந்துள்ள ஏழு மாவட்டங்களின் மழைநீர், கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணை, மணிமுத்தாறு ஆகிய ஐந்து ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பதால் தமிழகத்தின் பிரதான வடிகால் மாவட்டம் கடலூர். சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகள் காவிரி டெல்டா பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள பகுதிகள் நிலத்தடி நீரையும், குறிஞ்சிப்பாடி பகுதி முழுமையாக என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தினால் வெளியேற்றப்படும் நீரையும், திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதிகள் மழைநீரையும் மட்டுமே நம்பியிருக்கிறது. இப்போது எல்லாமே ஏமாற்றிவிட, தண்ணீருக்காக விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்காகக் குடங்களை ஏந்தியபடி மக்கள் தினமும் மறியலில் குதிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன் சில யோசனைகளைச் சொன்னார். ''கடலூர் மாவட்டத்தில் சுமார் 3,500 ஏரிகளும், குளங்களும் இருந்தன. இப்போது அதில் பாதி அளவுகூட இருக்காது. எல்லாம் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கின்றன. அவற்றை முறையாகக் கையகப்படுத்தி, மழைநீரையும், கூடுதல் உபரி நீரையும் சேமித்துவைத்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் ராட்சத போர் மூலமாக நிலத்தடிநீரை உறிஞ்சாமல் தடுக்க வேண்டும்'' என்கிறார்.

சோகத்தில் சேலம்!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர். 'மாமா... காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?’ - 'தங்கப்பதக்கம்’ படத்தில் வரும் இந்த வரிகள்தான் இப்போது சேலத்தின் நிலைமை. வானம் பொய்த்துப்போக, கர்நாடகா கைவிரிக்க... காய்ந்து கிடக்கிறது இரும்பு நகரம். சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, ஆத்தூர் என்று பல இடங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்த கொடுமையெல்லாம் அரங்கேறியிருக்கிறது.

சேலம் மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது மேட்டூர் அணைதான். அங்கேயும் இப்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. 15 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தாலே மக்கள் சந்தோஷப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. பல இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபடுவது இங்கே அன்றாடக் காட்சியாகிவிட்டது.

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

ஏற்காடு மலைப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டு எருமை போன்ற விலங்கினங்கள் உள்ளன. மலைகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வனங்களை விட்டு அவை வெளியே வரத் தொடங்கிவிட்டன. மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களுக்குப் பலியாகும் கொடூரமும் நடந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் சில வாரங்களில் சேலத்தில் குடிநீர் பஞ்சம் விவரிக்க முடியாத துன்பங்களை உண்டாக்கும்.

வறட்சி ஆட்சிசெய்யும் திருவண்ணாமலை!

'வறட்சி’ என்ற சொல் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையை ஆட்சி செய்கிறது. மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் பஞ்சம். குப்பநத்தம் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா அணை என பல அணைகள் இருந்தாலும்... திருவண்ணாமலை நகரப்பகுதி, தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பகுதிகளுக்குக் குடிநீர்,  சாத்தனூர் அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்தான் கிடைக்கிறது. அதுவும் இப்போது தட்டுத் தடுமாறி 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கிணறு, போர்வெல் மூலம் பாசனம் செய்யப்படும் பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,965 ஏரிகளும் உள்ளன. ஆனாலும், இங்கே மழை அளவு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாலைவனமாக மாறிடும் என்பது விவசாயிகளின் கவலை.

கண்ணீரில் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தாலும், இது சென்னையின் இன்னொரு பகுதி. இந்த மாவட்டத்தின் அடிப்படை நீர் ஆதாரம் பாலாறு. பாலாற்றில் உள்ள மணல்தான் நீரை தேக்கிவைத்து கொடுக்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால், அதில் இருந்து ஏரிகளுக்கு நீர் போகும். இப்போது பாலாற்றில் வெள்ளமும் வருவது இல்லை. நீரைத் தேக்கிவைக்க அங்கே மணலும் இல்லை. ஒருகாலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், இப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களின் பார்வையில் சிக்கி, கான்கிரீட் காடுகளாகிவிட்டது. அதனால், மழையும் பொய்த்துவிட்டது.

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

சாதாரணமாக 100 அடி போர் போட்டால் தண்ணீர் வரும் பாலாறு படுகைப் பகுதியில் இப்போது 1,000 அடி போட்டாலும் புகைதான் வருகிறது. முசரவாக்கம் பகுதியில் செயல்பட்ட அரசின் விதைப் பண்ணையை, தண்ணீர் இல்லாததால் இழுத்து மூடிவிட்டார்கள். வற்றாத ஏரியான மதுராந்தகம் ஏரிகூட நீர் இல்லாமல் வற்றிவிட்டது. காஞ்சிபுரம் நகரில் இதுவரை இப்படியொரு குடிநீர் பஞ்சம் வந்ததே கிடையாது என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 1956-ல் அமைச்சர் பக்தவச்சலம் பொதுமக்களின் பங்களிப்போடு ஒரு தெரு குழாய் திறந்துவைத்திருக்கிறார். இவ்வளவு வருடங்களாகத் தண்ணீர் வந்த அந்தக் குழாயில் இப்போது காற்றுகூட வருவது இல்லை.

மழைவரத்துக் குறைவான ஸ்ரீபெரும்புதூரில் நிறைய தொழிற்சாலைகள் நீர் ஆதாரங்கள் கொள்ளை போகிறது என்பது இந்தப் பகுதி மக்களின் குமுறல்!

இந்த ஆறு மாவட்டங்களில் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுக்கவே குடிநீர் பிரச்னை அரசுக்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. அவை, அடுத்தடுத்த இதழ்களில்....

- வீ.கே.ரமேஷ், பா.ஜெயவேல்,

நா.இள.அறவாழி, காசி.வேம்பையன், க.பூபாலன், எஸ்.மகேஷ்

படங்கள்: க.தனசேகரன், ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு