Published:Updated:

‘பஞ்சாப்பைப் பின்தொடர்வார் முதல்வர் பழனிசாமி!’ - பேரறிவாளனின் புதிய நம்பிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘பஞ்சாப்பைப் பின்தொடர்வார் முதல்வர் பழனிசாமி!’ - பேரறிவாளனின் புதிய நம்பிக்கை
‘பஞ்சாப்பைப் பின்தொடர்வார் முதல்வர் பழனிசாமி!’ - பேரறிவாளனின் புதிய நம்பிக்கை

‘பஞ்சாப்பைப் பின்தொடர்வார் முதல்வர் பழனிசாமி!’ - பேரறிவாளனின் புதிய நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் ஆயுள் தண்டனை  சிறைவாசி பேரறிவாளனுக்குப் பரோல் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ‘மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் சிறைத்துறை வருகிறது. பரோல் வழங்குவதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அவற்றை முதல்வர் பரிசீலித்தாலே போதும்' என்கின்றனர் பேரறிவாளனின் வழக்கறிஞர்கள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கும் ஆளாகியிருக்கிறார். இந்நிலையில், அவருடைய தந்தை ஞானசேகரனின் உடல்நிலை மோசமானால், அவரைப் பார்ப்பதற்காக பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார் பேரறிவாளன். அவருடைய கோரிக்கையை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, முதல்வர் அலுவலகம், உள்துறை செயலர் அலுவலகம் என ஒவ்வொருவரையும் சந்தித்து முறையிட்டார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். இதுதொடர்பாக, கடந்த சனிக்கிழமை சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உள்பட ஆளும்கட்சி உறுப்பினர்களும் தங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 15 நாள்களுக்கு முன்பு தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் என்னை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து அவர்களின் மனுவை அரசு தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார்.

முதல்வரின் சட்டமன்றப் பேச்சு பேரறிவாளன் குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கம்போல, அரசின் முயற்சிக்கு எந்தவித தடையும் வந்துவிடக் கூடாது என்றே கவலைப்படுகின்றனர். இதுகுறித்து, நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், "தன்னுடைய தந்தைக்கு உடல் நலமில்லாததால், பேரறிவாளன் பரோல் கேட்கிறார். அதுவும், சிறைத்துறை விதி எண் 20/7 இன் அடிப்படையில் இந்தப் பரோலைக் கேட்கிறார். அந்த விதியின்படி, குற்றவாளியின் தாய் அல்லது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், 30 நாள்கள் பரோல் வழங்கலாம் என சிறை விதி சொல்கின்றது. இந்த அடிப்படையில், கடந்த 28.1.16 அன்று வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவருக்கு விண்ணப்பித்தார்.

இந்த மனுவை சிறைத்துறை ஐ.ஜிக்கு அனுப்பினார். அவர், இந்த மனுவை ஜோலார்பேட்டை நன்னடத்தை அலுவலருக்கும் ஜோலார் பேட்டை காவல் நிலையத்துக்கும் அனுப்பினார். இதற்குப் பதில் அளித்த காவல்துறை, ‘பேரறிவாளன் வெளியில் வந்துவிட்டுச் செல்வதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை' எனக் கூறிவிட்டனர். பரோல் மனு மீது முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள், அவருடைய தந்தை ஞானசேகரனை சந்தித்தனர். அவர் உடல்நலமில்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால், ‘இந்த வழக்கு மத்திய அரசின் தண்டனைக்குக்கீழ் வருவதால், அவருக்கு பரோல் வழங்க முடியாது' எனக் கூறிவிட்டனர். ஒரு கைதியின் நன்னடத்தையை மட்டும்தான், நன்னடத்தை அலுவலர் பார்க்க வேண்டும். மாறாக, ‘பாஸ்போர்ட் வழக்கில் 3 மாத தண்டனையை அனுபவித்திருக்கிறார். வயர்லெஸ் சட்டத்தின்கீழ் 2 ஆண்டு தண்டனையை அனுபவித்திருக்கிறார்' எனத் தெரிவித்திருத்திருப்பது சரியானதல்ல. இதனை ஏற்று, கடந்த 30.3.17 அன்று சிறைத்துறை டி.ஐ.ஜி அனீபா, ‘சாதாரண விடுப்புக்குக்கூட அனுமதியில்லை’ எனக் கூறிவிட்டார்” என விவரித்தவர், 

“சிறைத்துறையினர் பதிலில் நியாயம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு, உள்துறை செயலருக்கு மனு அனுப்பினார் அற்புதம் அம்மாள். அந்த மனுவில், ‘பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். பாஸ்போர்ட் வழக்கு, வயர்லெஸ் வழக்கு ஆகியவற்றில் தண்டனை பெற்றதாக சிறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, நீதியரசர் இப்ராஹீம் கலிபுல்லா அளித்த உத்தரவு ஒன்றில், பக்கம் 145 இல், ‘இவர்கள் ஏழு பேரும் முழுமையான தண்டனையைக் கழித்துவிட்டார்கள். அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை' என மத்திய அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டிருக்கிறார். எனவே, மாநில அரசின்கீழ் 302 பிரிவின்கீழ் இருக்கும் ஒரு கைதிதான் பேரறிவாளன். இதன் அடிப்படையில் விடுவிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது பரோல் குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரத்தில், அரசின் கவனத்துக்கு சில தகவல்களைக் கொண்டு செல்ல விரும்புகிறோம்.

1993 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் தேவேந்திர சிங் புல்லர். இந்த வெடிகுண்டு விபத்தில் 13 பேர் இறந்தார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் ஜெர்மனில் தலைமறைவாகிவிட்டார். 95 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவருக்கு, 2000 ஆம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அவரது கருணை மனுவின் மீது உரிய முடிவெடுக்காமல், காலதாமதம் ஆனதால், ஆயுள் கைதியானார். இவர் தடா ஆயுள் சிறைவாசியாக, மத்திய அரசின் தண்டனைக்குக்கீழ் வருகிறார். 2015 ஆம் ஆண்டு உள்ளூர் வழக்கு ஒன்றுக்காக திகார் சிறையில் இருந்து பஞ்சாப் சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு 2016 ஆம் ஆண்டு 21 நாள்கள் பரோல் கொடுத்துள்ளனர். அதேபோல், குர்தீப் சிங் கேசர் என்ற கைதியும் பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு 42 நாள்கள் பரோல் கொடுத்தனர். இவரும் தடா பிரிவின்கீழ் அடைக்கப்பட்ட குற்றவாளிதான். எனவே, பரோல் என்பது மாநில அரசு தொடர்பானது. மத்திய அரசின்கீழ் தண்டனைப் பிரிவு வந்தாலும், கைதிகளைப் பராமரிப்பது மாநில அரசின் சிறைத்துறைதான். இவர்கள் இருவரும் பரோலில் சென்றபோது, ‘ஏன் பரோலில் வெளியில் விட்டீர்கள்?' என மத்திய அரசு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அப்படிக் கேட்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. இதை எங்களிடம் விரிவாகவே சுட்டிக் காட்டினார் பேரறிவாளன். அதேபோல், எரவாடா சிறையில் அடைபட்டிருந்த சஞ்சய் தத், பலமுறை பரோலில் வெளியே சென்றார். இந்த சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மத்திய அரசின் வழக்கில் உள்ளவர்களுக்கே பரோல் கொடுக்கும்போது, மாநில அரசின்கீழ் 302 சட்டப் பிரிவின்கீழ் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் கொடுப்பதில் எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை. பஞ்சாப்பைப் பின்தொடர்ந்து, பேரறிவாளனுக்கும் முதல்வர் கொடுப்பார்" என்றார் நம்பிக்கையோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு