Election bannerElection banner
Published:Updated:

''ஒண்ணாவே வளர்ந்தாங்க... ஒண்ணாவே படிச்சாங்க... ஒண்ணாவே இறந்துட்டாங்களே!''

கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்

கிருத்திகா - சரண்யா... இந்த சகோதரிகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போல ஒருவரை ஒருவர்

''ஒண்ணாவே வளர்ந்தாங்க... ஒண்ணாவே படிச்சாங்க... ஒண்ணாவே இறந்துட்டாங்களே!''

பிரிந்தது இல்லை. அதனால்தானோ என்னவோ, ஒன்றாகவே தற்கொலை செய்து, மரணத்தில்கூட தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர். இவர்களின் மரணம் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 930 மற்றும் 928 மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களை சரண்யா - கிருத்திகா பெற்றிருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் அழுகையும் விசும்பலுமாகக் காட்சியளிக்கிறது கிருத்திகா - சரண்யாவின் வீடு. இவர்களின் தற்கொலைக்குக் காரணம்... வறுமை மட்டும் அல்ல; ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவற்ற பாசமும்தான்!

விருதாசலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந் திருக்கிறது கம்மாபுரம். இறந்த சகோதரிகளின் தந்தை முருகேசன், தன் இரு மகள்களை வைத்து இறுதி காரியம் செய்த மர பெஞ்சுகளை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குத் தேறுதல் சொல்லி பேசினோம்.

''பத்தாவது பரீட்சையில கிருத்திகா 455 மார்க்கும், சரண்யா 430 மார்க்கும் எடுத்து பள்ளி அளவில் முதல் மற்றும் மூணாவது இடத்தைப் பிடிச்சாங்க. 'அப்பா எங்களை டிகிரி படிக்க வை’ன்னு ரெண்டு பேரும் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. சாமி, நான் தச்சு வேலை செய்யுறேன். இவங்களுக்குப் பிறகு தம்பி ஒருத்தன் இருக்கான்.  அவனையும் பார்த்தாகணும். மனைவிக்கு கிட்னியில பிரச்னை. அவளோட ஆபரேஷனுக்கே 20 ஆயிரம் செலவாயிடுச்சு. தலைக்கு மேல ஏகப்பட்ட கடன் இருக்கு. அப்படிப்பட்ட சூழல்ல ரெண்டு பேரையும் படிக்க வைக்க முடியாத நிலைமையில இருந்தேன். ரிசல்ட் வந்த உடனே யதார்த்தமா மனைவிகிட்ட, 'ஒரு புள்ளையப் படிக்க வெச்சிட்டு ஒரு புள்ளையக் கல்யாணம் கட்டிக் கொடுத்துடலாம்’னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ரெண்டு பேரும் டிவி பார்த்துகிட்டு இருந்தாங்க. நாங்க பேசிகிட்டு இருந்ததைக் கேட்டுட்டு, தற்கொலை செஞ்சிப்பாங்கனு கனவுலேயும்  யோசிக்கலையே'' என்று கதறினார் முருகேசன்.

அவரின் மனைவி ராஜலட்சுமி, ''பக்கத்து ஊருல சொந்தக்காரங்க வீட்டு விழாவுக்கு சாயந்தரம் நாலு மணிக்கு நானும் அவரும் கிளம்பினோம். 'வீட்டை பத்திரமா பாத்துக்குறோம்... போயிட்டு வாங்க’ன்னு

''ஒண்ணாவே வளர்ந்தாங்க... ஒண்ணாவே படிச்சாங்க... ஒண்ணாவே இறந்துட்டாங்களே!''

சொல்லுச்சுங்க. நாங்க போன பிறகு வீட்டுக்குப் பின்னாடி இருந்த கொட்டகைக்குப் போயி துப்பட்டாவால தூக்குப் போட்டு உயிரை விட்ருச்சுங்க. இப்படி உசிரை மாய்ச்சிக்கவா நாங்க உசிரைக் கொடுத்து வளர்த்தோம். இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அவங்க முன்னாடி கல்யாணப் பேச்சை எடுத்திருக்க மாட்டோம். எப்பாடுபட்டாவது ரெண்டு பேரையும் படிக்க வெச்சிருப்போமே...'' என்று துடித்தார்.

ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவற்ற அன்பே மாணவிகளின் தற்கொலைக்குக் காரணம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அவர்களிடம் பேசியபோது, ''முருகேசன் பொண்ணுங்கள தனித்தனியாவே பார்க்க முடியாது. எப்போதும் ஜோடியாதான் இருப்பாங்க. ஸ்கூலுக்குக்கூட ஒண்ணா போயிட்டு, ஒண்ணா வீடு திரும்புவாங்க. வீட்டு வேலைகளையும் சேர்ந்து செட்டாதான் செய்வாங்க. அக்காகாரி சமையலறையைப் பார்த்துகிட்டா, தங்கச்சி வீட்டைக் கூட்டிப் பெருக்குவா. கல்யாணத்துக்குப் பிறகு இப்படி ஒத்துமையா இருக்கீங்களான்னு பாப்போம்னு ஊர்க்காரங்க கிண்டல் செய்வோம். படிப்ப பத்தி சொல்லவே வேண்டாம். புத்திசாலி புள்ளைங்க. போட்டிப் போட்டுட்டு ஒண்ணாதான் படிப்பாங்க.  

ரெண்டு பேருக்கும் அவங்க வீட்டு நாய் சீஸர்னா உசிரு. ஸ்கூல் முடிச்சிட்டு அவங்க வர்ற சத்தத்தைக் கேட்டுட்டு தெருவுக்கு வந்து அது குரைக்க ஆரம்பிக்கும். கடைசியில அந்தப் புள்ளைங்க தூக்கு மாட்டிகிட்டப்ப, சீஸர் குரைச்சுகிட்டே இருந்ததைப் பார்த்துதான், பக்கத்து வீட்டுக்காரங்க சந்தேகப்பட்டு உள்ளே போய் பார்த்தாங்க. ஆனா, அதுக்குள்ள இறந்துட்டாங்க. ஒண்ணாவே வளர்ந்துச்சுங்க... ஒண்ணாவே படிச்சதுங்க... ஒண்ணாவே இருந்துச்சுங்க. கடைசியில ஒண்ணாவே இறந்துட்டாங்களே. எந்த குடும்பத்துக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது'' என்கின்றனர்.    

அந்த சகோதரிகள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ''இருவரும் திறமையான பிள்ளைகள். இதுபோன்று வறுமையில் தவிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியை இலவசமாக வழங்க பல அமைப்புகள் உள்ளன. மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தவுடன் இருவரையும் இலவசமாகப் படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோம். அதற்குள் அவசரப்பட்டுவிட்டனர்'' என்று வருத்தப்பட்டார்.

ஒருவரை ஒருவர் வாழ வைப்பதாகத்தான் இருக்க வேண்டும் அன்பு. ஆனால் இந்த சகோதரிகளின் அவசர முடிவு, அவர்களை சாக வைத்துவிட்டது வேதனை!  

- நா.இள.அறவாழி

படங்கள்: எஸ்.தேவராஜன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு