முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் கொடும்பாவி எரிப்பு! பற்றி எரியும் நியமன எம்எல்ஏக்கள் சர்ச்சை

மத்திய அரசால் எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்ட பா.ஜ.க-வினர் மூன்று பேரின் நியமனம் செல்லாது என்று அறிவித்த சபாநாயகர் வைத்திலிங்கம் பதவி விலகக்கோரி, பா.ஜ.க-வினர் புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அன்றைய தினமே அவர்கள் மூன்று பேருக்கும் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அவர் பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து மூன்று எம்எல்ஏ-க்களும் சட்டமன்றம் சென்று சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்தனர். தொடர்ந்து சட்டமன்றத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கித் தரும்படியும் கோரினார்கள். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த எம்எல்ஏ நியமனம் செல்லாது என்று அறிவித்தார் சபாநாயகர்.

சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க-வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் நேருவீதி, மிஷன் வீதி வழியாக பேரணியாக புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கிச் சென்றனர். அப்போது முதல்வர் நாராயணசாமிக்கும், சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கும் எதிராகக் கோஷம் எழுப்பியவாறே சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது, காவல்துறையினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் இருவரது உருவ பொம்மைகளுக்கும் தீ வைத்து எரித்தனர் போராட்டக்காரர்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது காவல்துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!