Published:Updated:

''அப்படிச் சொல்லக் கூடாது அத்வானிஜி!''

மைய மண்டபக் கண்ணீர் காட்சிகள்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் காட்சி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி தொடங்குகிறது. கம்பீரமானவர்,

''அப்படிச் சொல்லக் கூடாது அத்வானிஜி!''

தைரியசாலி என்று வர்ணிக்கப்பட்ட மோடி, கண்ணீருடன் தன் பேச்சைத் தொடங்கியது பலரையும் ஆச்சர்யப் படுத்தியது. 'உள்ளுக்குள் இன்னொரு மனிதர் இருக்கிறார்’ என்பதையே இது வெளிப்படுத்தியது.

ஆனந்தக் கண்ணீர்!

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கண்ணீர் காட்சிகள் அரங் கேறுவது இது முதன்முறை அல்ல. 2004-ம் ஆண்டு மே மாதம் 15-ம் நாள் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர்தான் பிரதமராகக் கருதப்பட்டார். தனது கட்சியினரின் கடிதத்தை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று வந்த பின்னர், சோனியா மனநிலை மாறியது. பின்னர் மீண்டும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை இதே மைய மண்டபத்தில் கூட்டினார் சோனியா. 'எனக்கு இந்தப் பதவியில் விருப்பம் இல்லை’ என்று சொன்னார். தன்னுடைய தேர்வை, தானே ரத்துசெய்தார். அந்தக் கூட்டத்தில் இருந்த காங்கிரஸ்காரர்கள் மத்தியில் ஒரே அழுகுரல். 'நீங்கள்தான் பிரதமராக இருக்க வேண்டும்’ என்று கதறினார்கள். ஆனால், சோனியா ஏற்கவில்லை. மன்மோகன் சிங், பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டார். இப்போது காட்சி வித்தியாசமானது. ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, தன்னுடைய ஆனந்தம் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார்.

விழுந்து வணங்கிய மோடி!

நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. எனவே, அவரை மீறிய ஒருவரை பி.ஜே.பி-யால் பிரதமராகத் தேர்வுசெய்ய முடியாது. ஆனாலும், அந்த சடங்கைச் செய்யாமல் இருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பி.ஜே.பி எம்.பி-க்கள் 282 பேரும் மைய மண்டபத்தில் கூடினர். நாடாளுமன்றத்துக்குள் படிக்கட்டில் கால் வைக்கும் முன்பு தலைகுனிந்து தொட்டு வணங்கிவிட்டு உள்ளே சென்றார் மோடி. சமீபகால வரலாற்றில் இப்படி ஒரு காட்சி அரங்கேறியது இல்லை.

இதுவரை மோடியை நிராகரித்து வந்த அத்வானிதான், அவரது பெயரை இந்தக் கூட்டத்தில் முன்மொழிந்தார். நரேந்திர மோடியை 'நரேந்திர பாய்’ என்று பெருமையாக அழைத்து, கட்சியின் மக்களவைத் தலைவராகவும் நாடாளுமன்றத் தலைவராகவும் தேர்வுசெய்ய முன்மொழியவும் செய்தார் அத்வானி. அதை வழிமொழிந்தவர் முரளிமனோகர் ஜோஷி. அத்வானி முன்மொழிய, ஜோஷி வழிமொழிய... அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார் மோடி. இந்தத் தேர்வுக்குப் பின்னர் பி.ஜே.பி தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து கூறினர். அத்வானி கண்கள் கலங்க, ''எனக்கு ஒரு பலவீனம் உண்டு. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய கட்சியின் வரலாற்றில் இது மறக்க முடியாத தருணம். நரேந்திர பாய், நம்முடைய கட்சியை உயரத் தூக்கி விட்டார்'' என்று சொல்லி கண்ணீர்விட்டார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமரும் முன்பும், அத்வானியின் காலில் விழுந்து வணங்கினார் நரேந்திர மோடி. இந்த வாழ்த்துரைக்குப் பின்னர் அத்வானி மோடிக்கு பொக்கே கொடுக்கும்போதும் மோடி அவர் காலை தொட்டு வணங்கினார். அப்போது இருவர் கண்களும் குளமாகின.

''அப்படிச் சொல்லக் கூடாது அத்வானிஜி!''

ராஜ்நாத் சிங் தந்த கர்ச்சீப்!

அந்தக் கூட்டம் முழுக்கவே உணர்ச்சிமயமான மனிதராகவே இருந்தார் மோடி. எல்லா மேடைகளிலும் குரல் உயர்த்திப்பேசும் மோடி, அன்றைய தினம் அமைதியாகத் தொடங்கினார். ''அத்வானிஜி பேசும்போது, 'கட்சிக்கு மோடி உதவி செய்துவிட்டார்’ என்று சொன்னார். அத்வானிஜி இப்படிப்பட்ட வார்த்தையை உபயோகப்படுத்தக் கூடாது. தாய்க்கு மகன் செய்தால் அது உதவியா? கட்சியும் நாடும்தான் எனக்குத் தாய். மகன் தாய்க்கு செய்வது உபயமோ, உதவியோ, பெருந்தன்மையோ அல்ல. அவன் தாய்க்குச் செய்வது கடமை. இது கட்டாயம். அந்தக் கடமையைச் செய்தேன்'' என்றவரால், தொடர்ந்து பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டார். 'தண்ணீர் தாருங்கள்’ என்று கேட்டார். அவருக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டது. கண்ணீரைத் துடைக்க கர்ச்சீப்பை அனுப்பினார் ராஜ்நாத் சிங். சிறிது இடைவெளிக்குப் பிறகு, ''என்னால் மட்டும் நான் உயரவில்லை. இன்றைய தினம் நான் இந்த உலகுக்குத் தெரிகிறேன் என்றால், அதற்குக் காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை தோளில் வைத்து எடுத்து சென்றதுதான். மாபெரும் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இங்கே இல்லையே!'' என்று சொல்லி அப்போதும் உணர்ச்சிவசப்பட்டார்.

''எனக்கு அவநம்பிக்கை பற்றித் தெரியாது!''

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி கூறி மோடி பேசும்போது, தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் பெயரை எடுக்கவில்லை. பண்டித் தீன்தயாள் உபாத்யாவின் கனவையும் வரப்போகிற அவரது நூற்றாண்டு விழாவையும் நினைவுகூர்ந்தார். பின்னர் அவர் பேசும்போது, ''உலகத் தலைவர்கள் என்னை வாழ்த்த அழைத்தபோது 'நான் இங்கே வரக் காரணம் கோடிக்கணக்கான எங்களது வாக்காளர்கள். எங்கள் அரசியல் சாசனத்தில் சாதாரணப்பட்ட ஏழையும் உயரத்தை அடைய முடியும். எங்கள் ஜனநாயக சக்தியின் அடையாளம் இது’ என்று குறிப்பிட்டேன்.

எனக்கு அவநம்பிக்கையைப் பற்றி தெரியாது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவநம்பிக்கையை இந்த நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு நம்பிக்கையில் இந்த நாட்டை உருவாக்க முடியும். 125 கோடி மக்களும் ஒரு அடி முன்னெடுத்துவைத்தால் நாட்டில் 125 கோடி படிகளை முன்னோக்கி நகர்த்த முடியும். புதிய ஒரு நம்பிக்கை சாதாரண மனிதனிடம் எழுந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவின் முக்கியத்துவம் இதுதான். இது ஏழையின் அரசாங்கம். இந்த புதிய அரசு ஏழைகளுக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்குமான அரசு. ஒரு தொங்கு நாடாளுமன்றமோ அல்லது இரு வேறு தீர்ப்புகளையோ மக்கள் கொடுத்திருந்தால், ஓர் அரசாங்கத்துக்கு எதிராக தங்கள் கோபத்தை, எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால், அவர்கள் பி.ஜே.பி-க்கு அறுதிப்பெரும்பான்மை கொடுத்து வாக்களித்துள்ளது அவர்களது நம்பிக்கை. நான் அவர்களின் நம்பிக்கைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஐந்தாண்டு ஆட்சிக்குப் பின்னர் நான் நாட்டு மக்களுக்கு ரிப்போர்ட் கார்டை கொடுப்பேன்'' என்றார் மோடி.

335 பேர் கையெழுத்து!

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மோடி தலைமை யிலான ஆட்சியை ஆதரிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டமும் அதே மைய மண்டபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ''உணவு உறக்கம் இன்றி மோடி மேற்கொண்ட பிரசாரம்தான் இந்த வெற்றியைக் கொடுத்தது. 2019-லிலும் மோடிதான் பிரதமர்'' என்று அட்வான்ஸாக வாழ்த்தினார். இதன் பின்னர் மோடிக்கும் பி.ஜே.பி தலைமையிலான ஆட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று ஆதரவு கடிதம் கொடுத்தனர். சுமார் 18 கட்சித் தலைவர்களின் கடிதமும் 335 புதிய உறுப்பினர்களின் கையெழுத்தும்  கொண்ட பட்டியலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் கொடுத்தார்.

சஸ்பென்ஸ் மோடி!

வருகிற 26-ம் தேதி பதவி ஏற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன்புள்ள திறந்தவெளியில் நடக்கிறது. யார் யார் அமைச்சர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அத்தனையும் மோடி சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். உள்துறையும் நிதித் துறையும் கட்சியின் மூத்தத் தலைவர்களாகக் கருதப்படும் ராஜ்நாத் சிங்குக்கும் அருண் ஜெட்லிக்கும்தான் கொடுக்கப்படும்; வெளியே இருந்து யாரும் அழைத்துவரப்பட மாட்டார்கள் என்ற பேச்சு பலமாக இருக்கிறது. இருந்தாலும், நிதித் துறையை எதிர்ப்பார்த்திருக்கும் அருண் ஜெட்லியிடம் மோடி, 'நீங்கள் வெளியுறவுத் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் பெயர் வெளியே மிகவும் மோசமடைந்துள்ளது. உங்களால் மட்டுமே நன்றாகப் பேச முடியும். உங்களால்தான் இந்தியாவின் இமேஜ் உயர்த்த முடியும்’ என்று சொல்ல... ஜெட்லிக்கு ஷாக்.

இப்படி மோடி யாருக்கு என்ன துறையை யோசித்து வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் பி.ஜே.பி வட்டாரம் ஏக எதிர்பார்ப்பில் இருக்கிறது. மோடி என்றாலே எதிர்பார்ப்புத்தான் போல!

- சரோஜ் கண்பத்

அடுத்த கட்டுரைக்கு