Published:Updated:

திருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'

திருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'

'பொட்டப்புள்ளை படிச்சு என்ன ஆகப்போகுது... கல்யாணத்தைப் பண்ணி அனுப்புற வழியைப் பாரு!’ என்ற பழைமையாளர் பேச்சைக் கேட்டு, திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள் கிராமத்துப் பெற்றோர். அப்படி அறியாத வயதில் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெண் குழந்தைகள் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது பெரம்பலூர் மாவட்டத்தில். இப்படி மீட்கப்பட்ட குழந்தைகள் பெரம்பலூர் மாவட்டத்தைத் தலைநிமிர வைத்திருக்கிறார்கள்!

குழந்தைத் திருமணங்களில் இருந்து மீட்கப்பட்டப் பெண் குழந்தைகளால் பெரம்பலூர் மாவட்டமே பெருமிதத்தில் இருக்கிறது!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 316 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி தடுக்கப்பட்ட திருமணங்களில் மணமகளாக இருந்த பெண் குழந்தைகளை மீட்டு அவர்களின் படிப்புத் தொடர ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது. அதில் 29 பெண் குழந்தைகள் இந்த வருடம் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்திருக்கிறார்கள். அந்தப் பெண் குழந்தைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டருக்கு நன்றி சொல்வதற்காக வந்திருந்தனர். சில குழந்தைகளுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர்.

திருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'

அம்மாபாளயத்தைச் சேர்ந்த நித்யாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசினோம். ''எனக்கு நிறைய படிச்சு கலெக்டர் ஆகணும்னு ஆசை. அப்பா எப்பவும் குடிச்சிட்டே இருந்ததால, என்னைப் படிக்க வைக்க முடியலை. திடீர்னு படிப்பை பாதியில நிறுத்திட்டு அம்மா கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. எங்க அத்தைப் பையனுக்கே என்னை கட்டி வைக்கப் பார்த்தாங்க. கல்யாண ஏற்பாடும் நடந்துச்சு. ஸ்கூல்ல என்கூட படிக்கிற ஒருத்திகிட்ட நான் இதைச் சொல்லி அழுதேன். அவதான் எனக்கு கலெக்டர் நம்பரைக் கொடுத்து, 'நீ போன் பண்ணி கலெக்டர் சார்கிட்ட சொல்லு... அவரு வந்து காப்பாத்திடுவாரு’னு சொன்னா. நானும் போன் பண்ணினேன்.

மறுநாளே கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வந்து என்னை கூட்டிட்டுப் போய் காப்பகத்துல சேர்த்துட்டாங்க. தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செஞ்சாங்க. இப்போ நான் ப்ளஸ் டூவுல 917 மார்க் வாங்கியிருக்கேன். இன்னும் நிறைய படிக்கணும். கலெக்டர் சார் மட்டும் இல்லைன்னா இதெல்லாம் நடந்திருக்குமான்னு தெரியலை. அவரை எப்பவும் மறக்க மாட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

வேப்பூரைச் சேர்ந்த மாணவியின் கதை வேறு மாதிரியானது. மாணவி அமைதியாக நிற்க... அவரது அம்மா காவேரி நம்மிடம் பேசினார். ''18 வயசு முடிஞ்சாதான் கல்யாணம் பண்ணணும்னு எனக்குத் தெரியாது. எங்க வீட்டுக்காரர் பயங்கரமான குடிகாரர். அவருதான், 'இதெல்லாம் படிச்சு என்ன பண்ணப்போகுது’னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிறுத்திட்டாரு. எனக்கும் வேற வழி தெரியாமத்தான் எங்க சொந்தக்காரங்க பேச்சைக் கேட்டுகிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன். அந்தப் பையன் இவளைப் படிக்க வைக்கிறேன்னு சொல்லிதான் கல்யாணம் பண்ணிகிட்டுப் போனான். ஆனால், அதெல்லாம் நடக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் எம்புள்ளையை சித்ரவதை பண்ண ஆரம்பிச்சுட்டான். இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சு நான் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தேன். அந்தப் பையனை ஜெயில்ல போட்டுட்டாங்க. என் பொண்ணை காப்பகத்துல சேர்த்து 10-வது படிக்க வெச்சாங்க. இப்போ 422 மார்க் வாங்கியிருக்கா. 'அவ எவ்வளவு படிக்கணும்னு நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கட்டும்’னு கலெக்டர் ஐயா சொல்லிட்டாரு. நிச்சயமா நான் என் புள்ளையை படிக்க வைப்பேங்க...'' என்றபடி கண் கலங்குகிறார்.

அங்கே வந்திருந்த மற்ற மாணவிகளோ, அவர்களது பெற்றோர்களோ நம்மிடம் பேசத் தயங்கியபடியே இருந்தார்கள். கலெக்டர் தரேஷ் அகமதுவிடம் பேசினோம். ''அந்த மாணவிகளோட போட்டோவோ, பெயரோ வெளியில் வந்தால் நாளைக்கு அவங்க எதிர்காலத்துக்கு சிக்கல் ஆகிடும்னு பயப்படுறாங்க. என்னைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன். பின்தங்கிய மாவட்டம் என்பதால் பெரம்பலூரை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதை என் முதல் வேலையாக எடுத்து செயல்பட்டேன். இந்த வருடம் 94.8 விழுக்காடு எங்கள் மாட்டம் தேர்ச்சி பெற்றுள்ளது. கல்விக்கு இங்கே பெரும் தடையாக இருந்தது பொருளாதார சூழ்நிலையும், குழந்தைத் திருமணங்களும்தான்!

நான் கலெக்டர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், படித்தது மருத்துவம் என்பதால் சிறிய குழந்தைகளுக்குத் திருமணம் செய்தால் அதன் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு குழந்தையே இன்னொரு குழந்தையை சுமப்பது வேதனையானதுதானே! குழந்தைத் திருமணங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் உயர் கல்விக்கும் என்னால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன்'' என்று சொன்னார்.

பெண் குழந்தைகளின் சாதனைகள் தொடரட்டும்!

- எம்.திலீபன்

அடுத்த கட்டுரைக்கு