Published:Updated:

தூக்குமரத்துக்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள்!

தூக்குமரத்துக்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
தூக்குமரத்துக்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள்!

மலஜலம் கழிப்பதற்காக

திறந்தவெளி கழிப்பறையைத்

தேடிச் சென்ற இரண்டு சிறுமிகள்

வன்புணர்ச்சி செய்யப்பட்ட பிறகு

ஒரு மரத்தில்

உயிரோடு தூக்கிலிட்டு

கொல்லப்பட்டார்கள்
 

நான் அந்தச் சிறுமிகள்

எவ்வாறு தூக்குமரத்தை நோக்கி

அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்

என்பதைத் திரும்பத் திரும்ப நினைக்கிறேன்

அப்போது அந்தச் சிறுமிகள்

தண்ணீர் கேட்டிருப்பார்களா

அவர்களுக்கு கடைசி விருப்பங்கள் என்று

ஏதாவது இருந்திருக்குமா

சிறுநீர் கழிக்க விரும்பியிருப்பார்களா

குழந்தைகளை வன்புணர்ச்சி செய்துவிட்டு

தூக்குமரத்தை நோக்கி அழைத்துச் செல்பவர்களுக்கு

நட்சத்திரங்கள் அந்த இருளில்

வழிகாட்டவே செய்கின்றன இல்லையா?
 

இதற்கெல்லாம் காரணம்

இந்தியாவில் 60 கோடி பேருக்கு

கழிப்பறை இல்லாததுதான் என்று சொல்லப்படுகிறது

அது எனக்கு ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லை

ஒரு திறந்தவெளிக் கழிப்பறையாக இருக்கும்

ஒரு தேசத்தின் ஒரு பண்பாட்டின்

ஒரு கூட்டு மனச்சாட்சியின் எல்லைகளுக்குள்

பாதிப் பேருக்கு கழிப்பறை இல்லாததை

நாம் ஒரு புகாராகச் சொல்லவே முடியாது
 

தலித்களுக்கும் ஏழைகளுக்கும்

இப்படி நடப்பதாக எழுதப்படுகிறது

அதனால் என்ன

அவர்களுக்கு இதெல்லாம்

அவர்களது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக

ஏற்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது
 

இது முதன்முதலாக நடக்கவில்லை

அவர்களது தலைமுறைகளின் ஆழ்மன நினைவுகளில்

இவை படிந்திருக்கின்றன

தலைநகரத்தில்

ஒரு பெண் ஓடும் பேருந்தில்

கூட்டு பலாத்காரத்துக்குப் பின்

பிறப்புறுப்பில்

இரும்புக் கம்பியால் சொருகப்பட்டாள்

பிறகு அவள் தேசத்தின் கோபத்துக்கு நடுவே

மருத்துவமனையில் இறந்து போனாள்

அவளது சாதியைப் பற்றியோ

பொருளாதாரம் பற்றியோ

நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை

ஆனால் இப்போது கழிவறைகளைப் பற்றி

சொல்லப்படுவது போல
 

அப்போது

பெண்கள் அகால நேரத்தில்

பேருந்துகளைப் பயன்படுத்துவதன்

தவறு பற்றி பேசப்பட்டது

அதே நாளில்

அதேபோல பலவந்தப்படுத்தப்பட்ட

அதேபோல இறந்துபோன யாருக்கும்

எந்த நியாயமும் வழங்கப்படவில்லை

அவர்கள் ஒரு செய்தியாகக்கூட மாறவில்லை
 

இந்தியா அடுத்த பிரதமரை

தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்த

அந்த ஒரு மாதத்தில்

எந்த பாலியல் குற்றம் பற்றிய

முக்கியமான செய்திகளை

நான் கேள்விப்படவில்லை

நமது கவனம் வேறு பக்கம் இருக்கும்போது

அழிவைச் சந்திக்க நேர்பவர்கள்

உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள்
 

பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு

நடுத்தெருவில் துகிலுரியப்பட்ட பெண்கள்

தங்கள் காதலர்களால் முகம் சிதைக்கப்பட்ட

கழுத்து அறுக்கப்பட்ட பெண்கள்

ஒரு கட்டடத்தை புகைப்படம் எடுக்கச் சென்றபோது

கூட்டுப்புணர்ச்சிக்கு ஆளான பெண்

சொந்த தந்தையரால் கர்ப்பிணியாக்கப்பட்ட பெண்கள்

சொந்தக் கணவர்களால்

நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண்கள்

பெண்ணுறுப்பு இருந்த குற்றத்துக்காக

சிதைக்கப்பட்ட குழந்தைகள்
 

இப்போது பெண்கள் பலவந்தப்படும்போது

எச்சரிக்கை மணிகள் அடிக்கும்

உள்ளாடைகள் வந்துவிட்டனவாம்

உடனடியாக உதவிக்கு அழைக்க வேண்டிய

அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன

பாலியல் குற்றங்களுக்கு எதிரான

கடுமையான அவசரச் சட்டம்

நடைமுறைக்கு வந்துவிட்டது

ஆனால் நல்ல நிலவொளியில்

விந்து கசியும் உடல்களோடு

இரண்டு சிறுமிகள் தூக்கு மரத்தை நோக்கி

இழுத்துச் செல்லப்படுகிறார்கள்
 

அவர்களுக்கு இது எதுவுமே பயன்படவில்லை

அவர்கள் அப்போது

தங்கள் பெற்றோரையும்

வீட்டையும்

பள்ளியையும்

கடவுளையும் தவிர வேறு எதையும்

நினைத்திருப்பார்களா?
 

எல்லாம் நமக்கு

மிக அருகில் நடக்கிறது

பக்கத்து அறையில்

பக்கத்து வீட்டில்

நான் வாழும் அதே தெருவில்

அதே ஊரில்தான் நடக்கிறது

சில சொல்லப்படுகின்றன

சில சொல்லப்படுவதில்லை
 

பிரிவினையின்போது

பலாத்காரம் செய்யப்பட்டு

கர்ப்பிணியாக்கப்பட்ட பெண்களை

ஏற்கும்படி நமது தேசத் தந்தை வலியுறுத்தினார்

நேற்று என் சிநேகிதி ஒருத்தி

உடலுறவுக்குப் பின்

தன் கணவன்

ஈடுபடும் ஒரு குரூரச்செயல் பற்றிக் கூறி  

முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்

காலங்காலமாக இந்தத் தேசத்தில்

பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள்

வல்லுறவின் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள்

இசைப்பிரியாக்கள் நிர்வாணமாக

வரலாற்றின் சகதிகளில்

உட்கார வைக்கப்பட்டிருக்க்கிறார்கள்
 

ஒரு கொள்ளைக்காரன்

அல்லது ஒரு நக்சலைட் எங்கே என்று

ஓர் ஆதிவாசிப் பெண்ணின்

பெண் குறியில்

ஓர் அதிகாரி தேடிக்கொண்டிருக்கிறான்
 

நான் இதில் எங்கே இருக்கிறேன்

என் மூதாதையரின் சக மனிதர்களின்

குற்றத்தின் சுமைகள்

என்னை அழுத்துகின்றன

என் பழைய கிராமத்தின் கிணறுகளை எட்டிப் பார்த்தால்

அதில் பெண்களின் ஓலம் கேட்கிறது

என் பழைய வீட்டின் சுவர்களில் சாய்ந்து நின்றால்

பெண்களின் விசும்பல் அதில் கசிந்து வருகிறது
 

வரலாறு ஆண் குறிகளால் நடத்தப்படுகிறது

வரலாறு ஆண் குறிகளால் வெல்லப்படுகிறது

வரலாறு ஆண் குறிகளின் வழியே கடந்து செல்கிறது

நான் என் ஆண் குறியை அறுத்து

இந்த நதியில் வீச விரும்புகிறேன்

அறுக்கப்பட்ட இடத்தின் குருதியை கையில் எடுத்து

தூக்குமரத்தில் தொங்கும்

இரண்டு சிறுமிகளின் பாதங்களில்

பூச விரும்புகிறேன்
 

வேறெப்படியும்

இந்த வரலாற்றை மாற்றவே

முடியாது இல்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு