Published:Updated:

அன்று ஸ்ருதி... இன்று சேதுமாதவன்!

பள்ளி வேன்களால் தொடரும் மரணங்கள்

பிரீமியம் ஸ்டோரி

அரசு எத்தனை சட்டங்கள் போட்டாலும், எவ்வளவு சோதனைகள்(!) நடத்தினாலும் தனியார் பள்ளி வாகனங்களால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது நின்றபாடில்லை.

விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்த ஒரு வாரத்துக்குள் நடந்த வாகன விபத்துக்கள் மூன்று

அன்று ஸ்ருதி... இன்று சேதுமாதவன்!

உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. இதுமட்டுமல்ல... ஒரு பள்ளி வாகனம் தீப்பிடித்து, மாணவர்கள் தப்பிப் பிழைத்த சம்பவமும் நடந்துள்ளது.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு பள்ளி வாகனத்தைப் பயன்படுத்துவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அந்த வாகனங்களே குழந்தைகளுக்கு எமனாகி வருவதுதான் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதெல்லாம் கண்துடைப்புதானோ என்றும் நடந்த சம்பவங்கள் கேள்வி எழுப்ப வைக்கின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் காண்டைவிலக்கு என்ற ஊரில், பள்ளி திறந்த முதல் நாளான கடந்த 2-ம் தேதி நடந்த சம்பவம் இது. ஷிவானி மெட்ரிக் பள்ளிக்குச் சொந்தமான ஆம்னி வேன், அருகில் உள்ள கிராமத்து மாணவர்கள் ஐந்து பேருடன் பள்ளிக்குப் புறப்பட்டுள்ளது. வழியில் வேனில் இருந்து அதிகமாகப் புகை வர ஆரம்பிக்க... வழியில் சென்றவர்கள் டிரைவரைப் பார்த்து சத்தம்போட்டுள்ளனர். புகை வருவதைப் பார்த்து மாணவர்களும் அலற... டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு மாணவர்களை வெளியேற்றியிருக்கிறார். மாணவர்கள் இறங்கிய சில நிமிடங்களில் வேன் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும்... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா - ராஜேஸ்வரி தம்பதியரின் நான்கு வயது மகன் சேதுமாதவன். அண்டக் குளம் வி.எஸ்.ஹெச் மெட்ரிக் பள்ளியில் சேதுமாதவனை சேர்த்துள்ளனர். கடந்த 5-ம் தேதி பள்ளி முடிந்து வேனில் வந்த சேதுமாதவன், வீட்டு வாசல் முன்பு இறங்கியிருக்கிறான். அவன் வேனின் பின்பக்கம் செல்வதைக்கூட கவனிக்காமல், வேனை பின்னோக்கி எடுத்திருக்கிறார் டிரைவர். வேன் சேதுமாதவன் மீது ஏற... எல்லாம் முடிந்துவிட்டது.

''காலையில சிரிச்சிகிட்டே பள்ளிக்கூடத்துக்கு போனவனை, சாயந்திரம் பொணமா திருப்பிக் கொடுக்குறாங்க. நாங்க என்னத்த சொல்றது?'' நெஞ்சில் அறைந்துகொண்டு கதறும் சேதுமாதவனின் பெற்றோரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

அன்று ஸ்ருதி... இன்று சேதுமாதவன்!

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி- ராதிகா தம்பதியரின் குழந்தைகளான தனுசா, தாரிணி ஆகிய இருவரையும் பக்கத்து ஊரான மாத்தூரில் உள்ள வி.ஐ.பி மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். குழந்தைகளை வேனில் ஏற்றிவிட சென்ற ராதிகா தனது மூன்றாவது குழந்தையான சபரியையும் கையில் தூக்கிச் சென்றிருக்கிறார். குழந்தைகளை வேனில் ஏற்றிவிடுவதற்காக சபரியை கீழே இறக்கிவிட, அவன் வேனின் பின்பக்கம் சென்றிருக்கிறான். இதைக் கவனிக்காமல் டிரைவர் வேனை ரிவர்ஸ் எடுக்க... சபரியின் அலறல் சப்தம். வேனின் டயர் சபரி மீது ஏறி இறங்க... பெற்றவளின் கண் முன்னே கோரமாகத் துடித்து அடங்கியிருக்கிறது சபரியின் உயிர். 23 வயதான டிரைவர் தங்கசாமியை போலீஸ் கைது செய்திருக்கிறது. என்ன பிரயோஜனம்?

தனியார் பள்ளி வாகனங்கள் இந்த லட்சணம் என்றால், அரசு பேருந்து டிரைவர் ஒருவரின் அலட்சியத்தாலும் ஒரு மாணவனின் உயிர் போயிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் அரசனூர் முத்துகிருஷ்ணன் மகன் பாலமுருகன். அருகில் உள்ள திருமாஞ்சோலை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 5-ம் தேதி மாலை பள்ளிக்கூடம் முடிந்து பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் பாலமுருகன். வந்த டவுன் பஸ், ஸ்டாப்பில் நிற்காமல் சற்று தள்ளிப்போய் நின்றிருக்கிறது. பஸ்ஸைப் பிடிக்க மாணவர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். மாணவர்கள் ஏறுவதற்குள் பஸ்ஸை டிரைவர் கிளப்ப... முன்பக்க படியில் தொற்றிக்கொண்டு இருந்த பாலமுருகன் தடுமாறி கீழே விழ, பஸ் சக்கரம் அவன் மீது ஏறிவிட்டது. இந்தச் சம்பவத்திலும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினத்தில் தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒன்பது மாணவர்களும், ஒரு ஆசிரியையும் பலியானார்கள். வேன்

அன்று ஸ்ருதி... இன்று சேதுமாதவன்!

டிரைவர் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டியதே, விபத்துக்குக் காரணம். அப்போது சமூக ஆர்வலர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் இதற்கென ஒரு குழுவை நியமித்து அவர்கள் பரிந்துரைத்த 16 விதிகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. அதன் பிறகு 2012-ல் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி வாகனத்தில் சீட்டுக்கு அடியில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். அப்போது தமிழகமே கொந்தளித்தது. அரசு தரப்பில் அப்போது மட்டும் வேகம் காட்டப்பட்டது. பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், ''இது முழுக்க முழுக்க டிரைவர்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால்தான் நடக்கிறது. தகுதியான டிரைவர்களை பள்ளி நிர்வாகம் நியமிப்பது இல்லை. தகுதியற்ற டிரைவர்களின் லைசென்ஸை கேன்சல் செய்யலாம். ஆனால், அப்படி எதையும் அதிகாரிகள் செய்ததுபோல தெரியவில்லை. இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்போது மட்டும் வாகனங்களை சோதனை செய்வதை அதிகாரிகள் வழக்கமான நடைமுறையாக வைத்திருக்கின்றனர். சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும்'' என்று உறுதியாகச் சொன்னார்.

பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ''20 பேர் அமரும் வேன்களில் 30 பேரை ஏற்றுகின்றனர். சீனியர் மாணவர்களின் மடியில் ஜூனியர் மாணவர்களை உட்காரச் சொல்கிறார்கள். பெரும்பாலான பள்ளிகளில் ஒருசில வேன்களை மட்டும் புதிதாக வைத்துக்கொண்டு, மற்றதெல்லாம் பழைய வேன்களாகத்தான் வைத்திருக்கிறார்கள். குழந்தைகளை ஏற்றி இறக்க ஒவ்வொரு வேனுக்கும் கண்டக்டர் அவசியம். ஆனால், பல பள்ளிகளில் வயதான ஆயாக்களை அனுப்புகின்றனர். அவர்களால் வண்டியில் நிற்கக்கூட முடிவது இல்லை.

பணம் கொடுக்க பெற்றோர் தயங்குவது இல்லை. தகுதியான பொறுப்பான ஆட்களை அமர்த்தி, குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டியது பள்ளிகளின் கடமை இல்லையா... குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்கின்றனர்.

போக்குவரத்துத் துறையில் விசாரித்தோம். ''நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் முழுக்க பள்ளி வாகனங்களை சோதனை செய்திருக்கிறோம். குறைபாடுகள் இருந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நடத்துனர் உரிமம் பெற்ற ஆட்கள் ஒவ்வொரு வாகனத்திலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நாங்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பள்ளிகளும் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்'' என்றார்கள்.

யாரோ ஒருவர் செய்யும் தவறுதான், ஒரு பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் உயிரை காவு வாங்கிவிடுகிறது. இனியாவது ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்வது அவசியம். குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா?

- வீ.மாணிக்கவாசகம், செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு