Published:Updated:

'மாமியாருக்கு நன்றி!''

உருகும் சுமித்ரா மகாஜன்

பிரீமியம் ஸ்டோரி

''நமக்கு ஒரு 'மகாஜன்’ கிடைத்துள்ளார். வேதங்களில் மகாஜன் என்றால் பெரிய மனிதர். சுமித்ரா என்றால் நட்புணர்வு. அவருடைய பெயரே உதாரணமாக இருப்பதால் இந்த அவையை நிச்சயம் அவர் அரவணைத்துச் செல்வார்''- மக்களவை சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ரா மகாஜனை இப்படித்தான் வாழ்த்தினார் பிரதமர் நரந்திர மோடி. எப்போதும் புன்சிரிப்பு என்பதுதான் சுமித்ராவின் அடையாளம்.

'மாமியாருக்கு நன்றி!''

இந்தூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்த அரசியல்வாதி சுமித்ரா மகாஜன். சாதாரணக் குடும்பத்துப் பெண். சட்டம் பயின்றவர். பி.ஜே.பி-யின் தீவிர உறுப்பினராக இருந்தவருக்கு இந்தூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றியும் பெற்றார். 32 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் தொடங்கியது சுமித்ராவின் அரசியல் பயணம்.

அதன் பிறகு அதே நகராட்சியில் துணை மேயராகவும் இருந்தார். நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததில் இருந்து இதுவரை ஒரு தேர்தலிலும் இவர் தோல்வியைப் பார்க்கவில்லை. வாஜ்பாயி அமைச்சரவையில் இணை அமைச்சரான இவர், முரளி மனோகர் ஜோஷியுடன் மனிதவளத் துறை மற்றும் பிரமோத் மகாஜனுடன் தொலைத்தொடர்புத் துறை, பின்னர் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறைகளில் பணியாற்றினார்.

இந்தூரில் சுமித்ரா மகாஜனை 'தாயி’ என்றே அழைக்கிறார்கள். மராட்டிய மொழியில் தாயி என்றால் மரியாதைக்குரிய மூத்த சகோதரி என்று அர்த்தமாம். 22 வயதில் சுமித்ராவுக்கு திருமணம் நடந்தது. கணவரும் வழக்கறிஞர். திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருந்தார். கணவரும் மாமியாரும் வற்புறுத்திதான் சுமித்ராவை சட்டம் பயில வைத்திருக்கிறார்கள். கணவர் இப்போது உயிருடன் இல்லை. இரண்டு மகன்கள். ஒருவர் பைலட். மற்றொருவர் சாஃப்ட்வேர் துறையில் இருக்கிறார். மராட்டிய மொழியில் ஏராளமான கவிதைகளையும் எழுதியிருக்கிறார் சுமித்ரா. அரசியல் தவிர, ஆன்மிக சொற்பொழிவுகளிலும் அதீத நாட்டம் கொண்ட இவர், தொகுதிக்குள் எங்கே யார் ஆன்மிக உரை நிகழ்த்தக் கூப்பிட்டாலும் கிளம்பிவிடுவார். விளையாட்டுக்களிலும் சுமித்ராவுக்கு நிறைய ஆர்வம் உண்டு.

டெல்லியில் உள்ள சுமித்ராவின் வீட்டுக்குச் சென்றோம். வாண வேடிக்கைகளும், வாழ்த்துச் சொல்ல வரும் கூட்டமும் வரிசைகட்டி நின்றது. ஜூ.வி-க்காக அவரிடம் பிரத்யேகமாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

''வாழ்த்துக்கள்... குடும்ப வாழ்க்கை - அரசியல் வாழ்க்கை இரண்டையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''

''படிக்கும்போதும் அரசியலில் நுழையும்போதும்  மற்ற பணிகளோடு குடும்பத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தேன். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். ஆனாலும், என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் என் மாமியாரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இல்லை என்றால் நான் இந்த நிலைக்கு நிச்சயம் வளர்ந்திருக்க முடியாது. என் மாமியாருக்கு நான் எப்போதும் நன்றிகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்!''

''எட்டு முறை தொடர்ந்து வெற்றி எப்படிச் சாத்தியமானது?''

''இதை நீங்கள் இந்தூர் மக்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்களுக்கு என்னுடைய உழைப்பு மீது நம்பிக்கை ஏற்பட்டது. எங்களுடைய கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நான் உண்மையாக நம்பிக்கையாகச் செயல்பட்டேன். இந்த நேர்மையோடு அவர்களுக்கு நான் எப்போதும் சேவை செய்தேன். என் தொகுதிக்காக நான் ஸ்பெஷலாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும், எந்த நேரத்திலும் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு நான் போய் நிற்பேன். இந்தூர் தொகுதி மக்கள் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்காகப் பேச என்னைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் பொறுப்பு கூடுதலானது. என்னுடைய கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து என் வழியில் சிந்தித்துச் செயல்படுவேன்.''

''புதிதாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் உறுப்பினர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?''

''முன்பு மாதிரி நிலைமை இல்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் திட்டம் வகுத்து கடுமையாக உழைக்க வேண்டும். எந்தக் குறுக்கு வழியும் வெற்றிக்கு வழிவகுக்காது. உங்கள் உழைப்பையும் ஆற்றலையும் நீங்கள் மக்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். உங்களிடம் மக்கள் நிறைய எதிர்பார்த்துதான் இங்கே அனுப்பியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

- இதையே தன்னுடைய வேண்டுகோளாக வைக்கிறார்.

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன்கூட, சுமித்ராவை 'தாயி’ என்று சொல்லித்தான் வாழ்த்திப் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சிகளும் சுமித்ரா மீது நம்பிக்கை வைத்திருப்பதையே இது காட்டுகிறது. அந்த நம்பிக்கையை அவர் எப்படிக் காப்பாற்றப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும்!

- சரோஜ் கண்பத்

படம்: அஜய்குமார் சிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு