Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பல அனிதாக்களின் கனவைப் பறித்த நீட் தேர்வு'' - வைரலாகும் சிவசங்கரின் ஆதங்கப் பதிவு!

நீட் தேர்வு

தி.மு.க நிர்வாகிகளிலேயே சற்று வித்தியாசமானவர் அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர். சமூக அவலங்களைப் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டுபவர். இதுமட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளைக் கிண்டல்செய்து கட்டுரைகளாகப் பதிவுசெய்பவர். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வைக் கடுமையாக விமர்சித்ததோடு, `தலித் பெண்ணான அனிதாவின் டாக்டர் கனவை, நீட் தேர்வு  தகர்த்துவிட்டது முரட்டு முட்டாள் மத்திய அரசு' என மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதிய பதிவுகள் வைரலாகிக்கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வு அனிதாAnitha Neet Exam

`ப்ளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், மாணவி அனிதா மருத்துவராகியிருப்பார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கனவுகள் சிதைந்ததோடு, இன்னும் பல அனிதாக்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள்' என அனிதாவின் சூழலை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் சிவசங்கர். இந்தப் பதிவைப் பார்த்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, குடியரசுத் தலைவருக்கு ஒரு கோடி அஞ்சல் அட்டை மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான மாதிரிகளை அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். `நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைவோம்' என்று இணையப் பக்கத்தையும் தொடங்கியுள்ளார் சிவசங்கர்.

 
அவருடைய பதிவுகள் இங்கே அப்படியே!

`அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். ஓட்டு வீடுதான் சொந்தம். குழுமூரில், அந்தக் காலத்தில் தொடங்கிய கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளி உண்டு. அதுதான் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்குக் கல்வி அளிக்கும் பள்ளி. அந்தப் பள்ளியில்தான் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார் அனிதா. 10-ம் வகுப்பில்  478 மதிப்பெண் பெற்றார். கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண் எடுத்தார். அனிதா பெற்ற மதிப்பெண் அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. இந்த மதிப்பெண்ணுக்கு, அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டணச் சலுகையில் இடம் அளித்தார்கள். அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு என்ன காரணம் என்றால்,  இவர்கள் வீட்டில் கழிவறை கிடையாது; படுக்கக்கூட இடவசதியில்லாத வீடு. இதனாலேயே ஹாஸ்டல் வசதிகொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார். இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண் என, ப்ளஸ் டூ-விலும் நல்ல மதிப்பெண் பெற்றார் அனிதா.

சிவசங்கர்

கடந்த ஆண்டுபோல ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், அனிதா தேர்வு பெற்றிருப்பார். காரணம், அவரின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது.  நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்துகொண்டார் அனிதா.

`நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா?' என்று கேட்டேன்.

`இல்லீங்க'.

`அப்பா என்ன பண்றார்?'.

`திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு'.

இந்தச் சூழலில் அவர் செலவுசெய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை. குழுமூர் கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் அனிதாவின் தந்தை சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து, நான்கு மகன்களுக்கும் கல்லூரிக் கல்வி வழங்கிவிட்டார். உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூகச் செயற்பாட்டாளர். பொதுப் பிரச்னைகளுக்காக என்னை அணுகக்கூடியவர். குடிமைத் தேர்வுப் பயிற்சிக்காக, சென்னையில் பயில்பவர்.

மணிரத்தினத்திடம் கேட்டேன், `அப்பா திருச்சியில். நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மாதான் அனிதாவுக்குத் துணையா?'

அவரது பதில் அடுத்த இடி... `அம்மா இறந்து பத்து வருஷங்கள் ஆச்சு.'

ஒடுக்கப்பட்ட இனம், அம்மா இறந்துவிட்டார், அப்பாவுக்கு வெளியூரில் கூலி வேலை, ஒண்டிக்குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிவறை வசதி கிடையாது. இந்தச் சூழலிலும் இவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார் அனிதா. கல்வி மட்டுமே எதிர்காலம் என்பதை உணர்ந்து, பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும் வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு முட்டாள் மத்திய அரசாங்கம்.

இந்த ஒரு அனிதாதான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ? இத்தனை பேர் வாழ்க்கையைச் சூறையாடிய `மோடி', என்ன பதில் சொல்லப்போகிறார்? ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல், இவரை அதலபாதாளத்தில் வீழ்த்தும். அதுவரை போராடுவோம். பல அனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம்' என்று அவருடைய இந்தப் பதிவு அனைவரையும் உருகவைத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement