Published:Updated:

'அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!'

நதிக்கரையில் காத்திருக்கும் தந்தை

பிரீமியம் ஸ்டோரி

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் என்று சொல்வார்கள். பெண்கள் குறித்து சொல்லப்படும் இந்த விமர்சனம், இயற்கைக்கும் பொருந்தும். நதிக்கு நடுவே இருக்கும் அழகான பாறைக் குன்றுகளில் நின்று புகைப்படம் எடுக்கச் சென்ற தெலங்கானா மாணவர்கள், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொடூரம், அதற்கு ஒரு துயர உதாரணம்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர் விஞ்ஞான ஜோதி என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 65 மாணவர்கள், இரண்டு பேருந்துகளில் கடந்த 8-ம் தேதி இமாசலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். மணாலி - கிராத்பூர் நெடுஞ்சாலையில் ஷலனலா என்ற இடம் வழியே சென்றபோது, பியாஸ் நதியின் அழகு அவர்களைக் கவர்ந்திருக்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு, புகைப்படம் எடுப்பதற்காக நதியில் இறங்கியபோதுதான் அந்தக் கொடூர விபத்து நடந்தேறியது.

'அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!'

24 மாணவர்கள் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இணையத்தில் பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்கிறது.

பியாஸ் நதியின் நடுவே சிறு குன்றுகள்போல் இருக்கும் மூன்று பாறைகள் மீது ஏறி நின்று மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவன் மட்டும் நதியில் இறங்கி, நதியின் நடுவே இருக்கும் ஒரு பாறை மீது நின்ற ஒரு டீமை மும்முரமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான். திடீர் என நதியில் தண்ணீர் அதிகமாகிறது. கரையில் இருந்தவர்கள் நதி நடுவே இருந்த மாணவர்களை அழைக்கிறார்கள். நதியில் இறங்கிய மாணவன் பாறையை நோக்கி நகரத் துவங்கும் முன், தண்ணீர் வரத்து மேலும் அதிகமாகிறது. மூன்று பாறைகள் மேல் நின்ற மாணவர்களும் ஒருவருக்கு ஒருவர் கைகோத்து அதிர்ச்சியில் நிற்க... அனைவரையும் சில விநாடிகளில் வாரி இழுத்துச் செல்கிறது திடீர் என வந்த வெள்ளம். - இப்படி பார்ப்பவர்களை அதிரவைக்கிறது அந்த வீடியோ.  

'அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!'
'அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!'

உயிர் தப்பிய மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டுவர முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள், ''அதிகாலை என்பதால் நதியின் நீரோட்டம் அருமையாக இருந்தது. உள்ளூர் மக்கள் சிலரிடம் நதியில் இறங்கலாமா எனக் கேட்டுவிட்டுதான் இறங்கினாங்க. பலர் நதியில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தபடி இருந்தாங்க. தண்ணீர் வருவதைப் பார்த்துட்டு நாங்க கத்தினோம். ஆனா, அவங்க வெளியே வர்றதுக்குக்கூட தண்ணீர் அவகாசம் கொடுக்கலை. எங்க கண் முன்னாடியே எல்லோரும் ஜலசமாதி ஆகிவிட்டனர்'' என்று கலங்குகிறார்கள்.

இந்த கோர விபத்து நடந்த ஷலனலா பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். அவர்களிடம் பேசியபோது, 'மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்காக அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை திடீரென அதிகரிக்கிறார்கள். அணையில் தண்ணீர் திறக்கப்படும் முன் சைரன் ஒலிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆற்றில் இறங்கியபோது, அதில் நீர்வரத்து குறைவாகத்தான் இருந்துள்ளது. திடீரென நீர்நிலை உயர்ந்திருக்கிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே இந்த விபத்துக்குக் காரணம்'' என்கிறார்கள்.

விபத்தில் சிக்கிய ஆரமனா என்ற மாணவனின் அப்பா, 'என் பையனுக்கு நீச்சல் நல்லா தெரியும். கண்டிப்பாக நீந்தி ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக இருப்பான். கண்டிப்பாக நான் அவனை உயிருடன் பார்ப்பேன். அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது'' என்று கண்ணீர் சிந்தியபடியே நதிக்கரையில் காத்துகொண்டிருக்கிறார்.

நதி... எப்போதுமே ஒரு வகையில் எச்சரிக்கைதான்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு