எனது நேர்மையைச் சந்தேகப்படுவதா? கிரானைட் வழக்கில் சகாயம் ஐ.ஏ.எஸ் வேதனை

மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் எனது அறிக்கையை யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்று சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.


மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. 3 மாத விசாரணைக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணைக் குழுவில் இருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சகாயம் , "இந்த முறைகேட்டில் எனது அறிக்கையை யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனது அறிக்கையைச் சந்தேகப்படுவது எனது நேர்மையைச் சந்தேகப்படுவதற்கு சமம்" என்று கருத்துத் தெரிவித்தார். மேலும் அவர்,  விசாரணையுடன் குழுவின் பணி முடிவடைந்துவிட்டது என்று கிரானைட் அதிபர்கள் கூறியதை ஏற்க முடியாது. குழுவின் பணி முடிவடைவதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஊதியம் வழங்கக் கோரிய இந்த வழக்கில் தமிழக அரசு, "உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தது." இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!