Published:Updated:

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

Published:Updated:
'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

''தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க வேட்பாளர்கள் கருணாநிதியிடம் கொடுத்த அறிக்கை பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த அறிக்கைகளை கருணாநிதி கடகடவென படிக்க ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்காக வேலை செய்யாதவர்கள், கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்களின் பெயர்களை தனியாகப் பட்டியல் போட்டு வருகிறாராம். அந்தப் பட்டியல் விரைவில் ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்படும். அதில் உள்ளவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதுதான் கருணாநிதியின் திட்டம் என்கிறார்கள், அவரது மனவோட்டத்தை அறிந்தவர்கள்''- கடந்த இதழில் மிஸ்டர் கழுகார் இப்படிச் சொல்லியிருந்தார். அவர் சொன்னதுபோலவே அதிரடி ஆக்ஷன் தி.மு.க-வில் ஆரம்பமாகிவிட்டது. தேர்தலில் சரியாகப் பணியாற்றாத 33 நிர்வாகிகளின் பொறுப்புக்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. பதவி பறிக்கப்பட்ட அந்த 33 பேரும் என்ன சொல்கிறார்கள்? நமது நிருபர்களிடம் இந்த 33 பேரும் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இவை...

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கணேசன் - நாமக்கல் ஒன்றியச் செயலாளர்:

''என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு முதலில் கட்சி தலைமைக்கு வாழ்த்துக் களைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஒன்றியத்தில் தீர்மானங்கள் போட்டு 13 பேர் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம்.

நாமக்கல் தி.மு.க-வின் உட்கட்சி தேர்தலில் உலக மகா ஊழல் செய்தவர் நாமக்கல் மாவட்டச் செயலாளரான 'மகாத்மா’ காந்திச்செல்வன். இதை 11 முறைக்கு மேல் தி.மு.க தலைமைக்குக் கடிதம் எழுதியும் கண்டுகொள்ளவில்லை. மாவட்டக் கழக அலுவலகம் கட்டுவதாக தொண்டர்களிடம் காந்திச்செல்வன் ஒன்பது முறை நிதி வசூலித்து, தன் அப்பா பெயரில் நிலத்தை கிரயம் செய்துகொண்டார். தலைமை கேட்டதற்கு புறநகர் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி கட்சிக்காகப் பெரிய மாளிகை போன்று கட்டுவதாகச் சொன்னார். ஆனால், இப்போது மாளிகையைப் போன்று அவருக்கான வீட்டைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் தலைமைக்குத் தெரியப்படுத்தி​விட்டோம். ஆனால், கண்டுகொள்ளவில்லை. இப்போது நேரில் போய் விளக்கமாகக் கொடுக்கப்போகிறேன். இனி சிக்கல் காந்திச்செல்வனுக்குத்தான்!''

பாரப்பட்டி சுரேஷ்குமார் - பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர்:

''22 வருடங்களாக நான் கட்சியில் இருக்கிறேன். வீரபாண்டியாரின் அரசியல் சுவடுகளைப் பின்பற்றி வந்தவன் நான். தலைவரும் தளபதியும்தான் எனக்கு எல்லாமே! அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் என்னை சிறையில் வைத்து எப்படியெல்லாம் கொடுமை செய்தார்கள்? அந்தக் கட்சிக்கு நான் வேலை செய்தேன் என்று சொல்லியிருப்பது அபத்தமாக இருக்கிறது. எனது சொந்த ஊரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 700 வாக்குகள் வாங்கியது. இந்த முறை அதே ஊரில் 771 வாக்குகளை வாங்கியிருக்கிறோம். பிறகு எப்படி நான் வேலை செய்யவில்லை என்று சொல்ல முடியும்? வேட்பாளரைப் பார்த்து நான் எந்த காலத்திலும் தேர்தல் வேலை பார்த்தது இல்லை. என்னைப் பொருத்தவரை கட்சி நிறுத்தும் வேட்பாளரை தலைவராகவும் தளபதியாகவும் மட்டுமே பார்க்கிறேன். இப்போதும் உமாராணியை அப்படி நினைத்துதான் அவருக் காக தீவிரமாகத் தேர்தல் வேலை பார்த்தோம். அப்புறம் எதற்காக என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. என் தரப்பு நியாயங்களை தலைவரிடமும் தளபதியிடமும் எடுத்துச் சொல்வேன். என் உயிருள்ளவரை என்னையும் தி.மு.க-வையும் பிரிக்க முடியாது!''

வசந்தம் கார்த்திகேயன் - தியாகதுர்கம் ஒன்றியச் செயலாளர்:

''தேர்தலின்போது நான் என்ன வேலை செய்தேன், எவ்வளவு  செலவு செய்துள்ளேன் என்பதை எல்லாம் விளக்கி 50 பக்கங்களுக்கு அறிக்கைத் தயாரித்து உள்ளேன். தியாகதுர்கத்தில் இருக்கும் தொண்டர்களைக் கேட்டாலே நான் எப்படி உழைத்தேன் என்று சொல்வார்கள். எல்லா கிராமங்​களுக்கும் வேட்பாளருடன் பிரசாரத்துக்குப் போனேன். எங்களின் உழைப்பையும் மீறி தியாகதுர்கம் ஒன்றியத்தில் ஓட்டு குறைந்ததற்கான காரணம் ஆளுங்கட்சியின் அராஜகம் ஒருபக்கம்... எங்க கட்சி  வேட்பாளர் சரியில்லாதது இன்னொரு பக்கம். இதுதான் கட்சி தோற்றதற்குக் காரணம்.

தியாகதுர்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த நானும், மணிமாறனும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஸீட் கேட்டோம். மாவட்ட நிர்வாகிகள், தொண்டர் கள் என அனைவரும் என் பெயரைத்தான் பரிந்துரை செய்தனர். ஆனால், மணிமாறன் தன் அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஸீட் வாங்கினார். அவர் தோல்வியடைந்ததும் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் புகார் செய்திருக்கிறார்.

தியாகதுர்கம் ஒன்றியச் செயலாளருக்கான உட்கட்சித் தேர்தலில் மணிமாறனின் அப்பா ஆதரவு அளித்தவரை எதிர்த்து நான் வெற்றிபெற்றேன். இந்த ஒன்றியத்தில் மணிமாறன் குடும்பத்தினர் இளைஞர்களுக்கு வழிவிடுவது இல்லை. நான் வந்த பிறகு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தேன். ஆதனால் என் மீது கோபத்தில் இருந்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தை கட்சித் தலைமை மூன்றாகப் பிரித்துள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு மணிமாறனுக்கு போட்டியாக நான் இருப்பேன் என்பதால், என் மீது புகார் அளித்திருக்கிறார்.''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

பரமன் - ஓமலூர் ஒன்றியச் செயலாளர்:

''தலைமையிடம் விளக்கம் கொடுப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். தலைமை மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. கட்சி என்னைக் கைவிடாது. இதுக்கு மேல் நான் எதைப் பேசினாலும் அது சரியாக இருக்காது!''

ரவிச்சந்திரன் - நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர்:

''நான் கட்சிக் கொடுக்கிற வேலையை சீரும் சிறப்புமாக செய்து முடிப்பேன். என் மீது சந்தேகம் இருந்தால் எங்கள் ஒன்றியத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளையும், வார்டு செய​லாளர்களையும் கேட்டுப் பார்க்கட்டும். என்ன காரணத்​துக்காக என்னை சஸ்பெண்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அது மக்களுக்குத்தான் தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால், கட்சிக்காக நான் எவ்வளவோ இழந்திருக்கிறேன். என்னை எங்கே தூக்கி எறிந்தாலும் நான் தி.மு.க-வில் இருந்து விலக மாட்டேன்.''

காசி விஸ்வநாதன்- மேச்சேரி ஒன்றியச் செயலாளர்:

''எதுவும் புரியாமல் குழம்பிப்​போயிருக்கேன். டி.வி-யில பார்த்துதான் எனக்கே விஷயம் தெரிஞ்சது. கட்சிக்கு விரோதமாக நான் எப்போதும் செயல்பட்டது இல்லை. தலைமையே நினைத்தாலும் என் மீது குற்றச்சாட்டு சொல்ல முடியாது. தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது,  என்னை, என் மனைவியை,  மச்சான், மாமா என என் சொந்தபந்தங்களை எல்லாம் பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் அடித்துத் துவைத்துவிட்டார்கள். அந்த கேஸுக்காக இன்னைக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டுதான் வந்தேன். வன்னியர் எல்லாம் வன்னியருக்கு ஓட்டு போட்டுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எங்க கட்சியில் இருக்கும் சிலரே, 'நாங்க எங்க சாதிக்காரனுக்குத்தான் ஓட்டுப்போடுவோம்’னு வெளிப்படையாகவே சொன்னாங்க. அவங்ககிட்ட நான் சண்டைகூட போட்டுப்பார்த்தேன். அதையும் மீறி நான் என்ன செய்ய முடியும்?''

சக்திவேல் - கல்வராயன் மலை வடக்கு ஒன்றியச் செயலாளர்:

''கல்வராயன் மலையில் உள்ள பழங்குடி மக்கள் பெரும்பாலும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியிருப்பார்கள். அவர்கள் எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசிகள். அப்படியிருந்தபோதும் எங்கள் ஒன்றியத்தில் அ.தி.மு.க-வைவிட தி.மு.க 90 ஓட்டுகள் அதிகம் வாங்கியுள்ளது. அதற்குக் காரணம் எனது கடுமையான உழைப்புத்தான். எங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் சங்கராபுரம் ஒன்றியத்தில் தி.மு.க 40 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. அந்த ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சிக்காக உழைத்த என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்சி இப்போது தவறான பாதையில் செல்கிறது. பணம் வைத்திருப்​பவர்களை மட்டும்தான் மேலிடத்தில் மதிக்கிறார்கள். உண்மையான கட்சிக்காரனுக்கு மரியாதை இல்லை. எங்கள் தரப்பு

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

நியாயங்களைக் கேட்பதும் இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டினாலோ, எதிர்த்துப் பேசினாலோ, நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள். மேலிடத்தில் இருப்பவர்கள் ஏசி காரில் செல்கிறார்கள். அவர்களுக்கு மக்களின் மனநிலையும் தொண்டர்களின் ஆதங்கமும் எங்கே புரியும்? யார் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊருக்கு இளைச்​சவன் நான்தானே?''

 மாரியப்பன் - பழனி ஒன்றியச் செயலாளர்:

''யாரு சொல்லி இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதுன்னு தெரியலை. நான் எந்தத் தப்பும் பண்ணலை. பேருக்குத்தான் நான் ஒன்றியச் செயலாளரா இருந்தேன். ஆனா, அதுக்கான எந்த அதிகாரமும் எனக்கு கொடுக்கலை. எல்லாத்தையும் திண்டுக்கல் பெரியசாமியின் மகன் செந்தில்தான் பார்த்துகிட்டாரு. எனக்குக் கொடுக்கப்பட்ட சிவகிரிப்பட்டி ஊராட்சியில அ.தி.மு.க-வைவிட அதிக ஓட்டு வாங்கிக் கொடுத்தேன். இப்ப எந்த காரணமும் சொல்லாம நீக்குனதா அறிவிச்சிருக்காங்க. என்னோட விளக்கத்தைத் தலைமைக்குச் சொல்லப்போறேன்.''

ஓ.ராஜேந்திரன் - வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர்:

''கட்சிக்கு உண்மையாக உழைச்சதைத் தவிர நான் எந்த தப்பும் பண்ணலை. கட்சியில இருந்து கடிதம் வந்த பிறகு, எதுக்காக இந்த நடவடிக்கைன்னு தெரிஞ்சுகிட்டு விளக்கம் கொடுக்கத் தயாரா இருக்கேன். மடியில கனம் இருந்தாத்தானே வழியில பயப்படணும்?''

சிட்டி முருகேசன் - தர்மபுரி நகரச் செயலாளர்:

''என் மேல் என்ன குற்றச்சாட்டு என்று தெரியாமல் நான் எப்படி விளக்கம் கொடுப்பது? அதனை முதலில் கட்சி சொல்லட்டும். இப்போதைக்கு எதுவும் சொல்ல​விரும்பலை.''

ராஜசேகர் - கடலாடி ஒன்றியச் செயலாளர் :

''கட்சி அறிவித்த வேட்​பாளருக்காக வேலை செய்ததில் முதலிடத்தில் இருந்தவன் நான். 15 வருடங்களாக ஒன்றியச் செயலாளராக இருக்கேன். மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனுக்கு நான்தான் வலது கரம். எனது ஒன்றியத்தில் உள்ள சிலருக்கு என்னுடைய வளர்ச்சிப் பிடிக்கலை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க- வுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், முன்னாள் அமைச்​சர்கள் சத்யமூர்த்தி, தென்னவன் போன்றவர்கள் தொகுதி பொறுப்​பாளராக இருந்த ரகுபதி  மூலமாக என்னைப் பற்றி புகார் செய்திருக்கிறார்கள்.''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

ஜெயபால் - கடலூர் ஒன்றியச் செயலாளர்:

''தலைவர் என்னை விளக்கம் கேட்டிருக்காரு. நான் அவருகிட்ட விளக்கம் சொல்லிக்கிறேன். பத்திரிகைக்காரங்ககிட்ட அதுக்கு முன்னாடி நான் பேசப்போறது இல்லை!''

வி.சி.கனகு என்கிற கனகராஜ் - மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்:

''உட்கட்சி தேர்தல் வர இருக்கும் நிலையில் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு எனக்கு எதிராக வர நினைக்கும் சிலர் செய்துள்ள சதிதான் இதற்குக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர் எந்த சாதி, மதம் என பார்க்காமல் கட்சிக் கட்டளையை ஏற்று வேலை பார்த்தேன். அப்படி வேலை பார்த்த என் மீது தலைமை நடவடிக்கை எடுத்தது அதிர்ச்சியாக இருக்கிறது.''

ராஜபூபாலன்- மன்னார்குடி நகரச் செயலாளர்:

''தஞ்சை தொகுதியில் உள்ள நகரங்களில் என்னுடைய மன்னார்குடி நகரத்தில்தான் அ.தி.மு.க அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறது என்று என்மீது குற்றம்சாட்டியிருக்கிறார்கள். நான் வேலை செய்யவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. தலைமையின் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன்.''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

தியாக இளங்கோவன் - ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர்:

''நான் டி.வி-யில் செய்தி பார்த்தபோதுதான் என்னை நீக்கியது தெரிந்தது. கட்சி எடுத்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு தொண்டனின் கடமை. நானும் ஒரு தொண்டன்தானே?'' 


ஏனாதி பாலு - பட்டுக்கோட்டை ஒன¢றியச் செயலாளர்:

''கட்சித் தலைமை எடுத்த முடிவு. அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. கருத்துச் சொல்ல எனக்கு வ¤ருப்பமும் இல்லை. தலைமைக்குத் தலைவணங்குகிறேன்.''

சீனி.அண்ணாதுரை- பட்டுக்கோட்டை நகரச் செயலாளர்:

''தலைவரும் தளபதியையும்தான் எனக்கு முக்கியம். இதுல பேசுறதுக்கு எதுவும் இல்லை.''

சுந்தரம் - கவுண்டம்பாளையம் நகரச் செயலாளர்:

'எதுக்காக சஸ்பெண்ட் செய்தாங்​கன்னே தெரியலை. நான் தேர்தல் வேலை எல்லாம் நல்லாதான் பாத்தேன். யார் என் மேல புகார் கொடுத்தாங்கனுகூட தெரியலை. ஒண்ணு வேட்பாளர் கொடுத்திருக்கணும். இல்லை, மாநகரச் செயலாளர் வீரகோபால் என் மேல புகார் பண்ணி இருக்கணும். அவங்க ஆதரவாளர்கள் வேலை செய்யாததால, அவங்களுக்குப் பணம் கொடுக்கலை. அந்தக் கோபத்துல இப்படி செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.''

தென்றல் செல்வராஜ் - பொள்ளாச்சி நகரச் செயலாளர்:

'என்னைப் பொறுத்தவரை தேர்தல் வேலையை நான் திருப்தியாதான் செஞ்சேன். வீடு வீடாக ஏறி இறங்கி ஓட்டு கேட்டேன். நகராட்சியில் உள்ள 36 வார்டிலும் சிறப்பா வேலையை செஞ்சிருக்கேன். இது எல்லோருக்கும் தெரியும். பணப் பட்டுவாடாவை பொறுத்தவரை, கொடுத்த பணத்தை நாலா பிரிச்சு கட்சி பொறுப்பில் உள்ளவங்க மூலமா கொடுத்துட்டேன். நல்லா வேலை பாத்தேன்னு மாவட்டச் செயலாளர்கூட பாராட்டினார். ஏன் இப்படி செஞ்சாங்கன்னு தெரியலை.''

கோழிக்கடை கணேசன் - வால்பாறை ஒன்றியச் செயலாளர்:

''நானும் தொடர்ச்சியாக பொள்ளாச்சியில் போட்டியிட ஸீட் கேட்டேன். இந்த முறை என் பையனுக்கும் ஸீட் கேட்டேன். ஆனா, கொடுக்கலை. அதனால் மாவட்டச் செயலாளருக்கு என் மேல வருத்தம். கட்சியில மரம் கடத்துறவன், அரசாங்கத்தோட சிமென்ட் திருடுறவன் பேச்சையெல்லாம் கேட்டுட்டு என் மேல நடவடிக்கை எடுத்திருக்காரு. அவர் கொடுத்திருக்கும் புகாரில் துளிகூட உண்மை இல்லை.''

சுப்ரமணியன் - பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர்:

'ஏன் சஸ்பெண்ட் செஞ்சாங்கன்னே தெரியலை. தேர்தல் வேலைகள்ல சுணக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தா, நான் இந்த இடத்துக்கே வந்திருக்க முடியாது. எனக்கு கால்ல கொஞ்சம் அடிப்பட்டுருச்சி. அதனால ஓய்வில் இருந்தேன். அப்பவும் கடைசி நேரத்துல நான் தேர்தல் வேலைகள் பார்த்தேன். நான் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடும் திட்டமும் இருந்தது. நான் மாவட்டச் செயலாளர் ஆவதை விரும்பாத சிலர்கூட என் மீது புகார் சொல்லியிருக்கலாம்.''

ராஜமாணிக்கம் - குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர்:

''நான் கட்சிக்காக தீவிரமாக வேலை செய்தது என் மனச்சாட்சிக்குத் தெரியும். தேர்தல் சமயத்தில் நான் சுற்றிச் சுழன்று சூறாவளியாக வேலை பார்த்தேன். அது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். நீக்கியதற்கு என்ன காரணமோ தெரியலை. நோட்டீஸ் வரட்டும் பார்ப்போம். ஆனா, நிச்சயம் தர்மம் வெல்லும்!''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

மகாராஜன் - துறையூர் நகரச் செயலாளர்:

''எங்கள் தொகுதியில் ஸீட் கொடுக்கப்​பட்ட சீமானூர் பிரபு, தொகுதிக்கு அறிமுகமானவர் இல்லை. நேருவின் ஆதரவாளராக மட்டுமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்க வில்லை. துறையூரில் அவருக்கு வேண்டப்பட்ட சிலரை மட்டுமே வைத்து வேலை பார்த்தார். இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே தலைமைக்குச் சொல்லிவிட்டோம். இந்தத் தோல்விக்கு காரணம் பிரபுதான். இப்போது எங்கள் மீது பழிபோடுவது நியாயம் இல்லை.''

ஆனந்தன் - மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர்:

''நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் எனக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியும் தேர்தல் வேலைதான் முக்கியம் என்று ஊருக்குக் கிளம்பி வந்தேன். கட்சி அறிவித்த வேட்பாளருக்காக என் உயிரையும் துச்சமென நினைத்து வேலை செய்தேன். நாங்கள் முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் ஆதரவாளர்கள் என்பதால் மட்டுமே எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆனால், ஜெயலலிதா தொகுதியில் எங்கள் பகுதியைவிட அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. என் மீது புகார் சொன்னவர்களை தேர்தல் சமயத்தில் எங்கள் பகுதியில் நான் பார்க்கவே இல்லை. அவர்கள் சொன்னதை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். என்ன காலக்கொடுமை பார்த்தீங்களா?''

சோழன் - முசிறி கிழக்கு ஒன்றியச் செயலாளர்:

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

''சீமானூர் பிரபு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு என்னைச் சந்திக்கவே இல்லை. ஆனாலும் நான் அதைப்பற்றி கவலைப்​படாமல் கட்சிக்காக வேலை பார்த்தேன். எங்க யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் தி.மு.க  இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், பிரபுவின் சொந்த ஊரிலே அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு கட்சி என்ன சொல்லப்போகிறது?''

சின்ராஜ் - விருதுநகர் ஒன்றியச் செயலாளர்:

''முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனால்தான் இங்கே தி.மு.க அழிந்துகொண்டிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் ஸீட் கொடுத்தார்கள். அப்போதே அதை எதிர்த்தேன். இப்போது கட்சிக்கு சம்பந்தம் இல்லாத தொழிலதிபர் ரத்தினவேலுவுக்கு ஸீட் கொடுத்தார்கள். இதை தட்டிக்கேட்டேன். அதனால்தான் எனக்கு இந்த தண்டனை. கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசும் தி.மு.க-வை அழிக்காமல் விடமாட்டார்கள்.''

கே.பொன்னுச்சாமி -  மொரப்பூர் ஒன்றியச் செயலாளர்:

'கட்சியில் சேர்ந்த காலத்தில் இருந்து சாதிக்கு அப்பாற்பட்டு கட்சிக்காக உழைத்து வருகிறேன். திடீரென என்ன குறை கண்டார்களோ தெரியலை, நீக்கிட்டதாக சொல்றாங்க. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை எங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் என்ன பணியை ஒதுக்கினாரோ அதை சரியாகத்தான் செய்திருக்கிறேன்.''

முத்துகுமாரசாமி- நத்தம் பேரூர் கழகச் செயலாளர்:

''நான் என்னத்தச் சொல்ல... நல்லாத்தான் வேலை பாத்துகிட்டு இருந்தேன். எதுனால இந்த நடவடிக்கையின்னு தெரியல. தலைமையில இருந்து கடிதம் வரட்டும் பார்ப்போம்!''’

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'
'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

தோல்விக்கு காரணம் ஸ்டாலின்!

முல்லைவேந்தன் - தர்மபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்: ''என்னை நீக்கியதற்கு என்ன காரணம், யார் புகார் சொல்லி என்னை நீக்கினார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை. விளக்கம் கேட்டு வரும் கடிதத்தில் என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். அதற்குத் தகுந்த விளக்கத்தை தலைமைக்குக் கொடுப்போம். நாங்கள் உண்மையாகத்தான் வேலை செய்திருக்கிறோம். இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள் ஒட்டுமொத்த தி.மு.க உண்மைத் தொண்டனின் குரலாக இருக்கும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி ஸ்டாலினின் போக்குதான் கட்சியின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம். விஜயகாந்த்திடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தனது மருமகனை அனுப்புகிறார். ஏன் அவரை அனுப்ப வேண்டும்? இந்தக் கட்சியில் வேற ஆள் இல்லையா? ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கட்சியினுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். இந்த வேட்பாளரை நிறுத்தினால் கட்சி தோற்கும் என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அதையும் கேட்காமல் ஸீட் கொடுத்தார்கள். அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்?

நான் வேலை செய்தேனா இல்லை​யா என்று அவர்கள் நியமித்த கட்சி நிர்வாகிகளிடம் கேளுங்கள். தனிப்பட்ட முறையில் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் நான் வேலை செய்யவில்லை என்று சொன்னால், நானே விலகிக்கொள்கிறேன். அதை விட்டுவிட்டு அவர்கள் நியமித்த பொறுப்பாளரையும், அவர்கள் நிறுத்திய வேட்பாளரையும் மட்டும் வைத்து தயாரித்த பொய் புகாரை வைத்து அறிக்கை தயாரித்தால் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?''

 அடிமைகளாக ஒருபோதும் இருக்க மாட்டோம்!

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

 கே.பி.ராமலிங்கம் - மாநில விவசாய அணிச் செயலாளர்: ''கடந்த 24 வருடங்களாக தலைவர் கலைஞர் சொல்லியதை சீரும் சிறப்புமாக தொய்வில்லாமல் செய்திருக்கிறேன். என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது என் பொதுவாழ்க்கை வரலாற்றில் மிகப்பெரிய அவமானமாக கருதுகிறேன்.

தோல்விக்கான காரணம் என்னவென்று தலைமைக்கு முழுமையாகத் தெரியும். தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் தேவைகளை முன்வைத்தார்களா... இல்லை, தங்களை முன்னிறுத்திக்கொள்ள இந்த தேர்தலை நடத்தினார்களா என்ற கேள்வியை பிரசாரத்துக்குச் சென்றவர் தன் மனச்சாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும்.

தாயைப்போல பிள்ளை... நூலைப்போல சீலை என்பார்கள். முதலில் இதை சொல்கிறவர்கள் மற்ற நிர்வாகிகளை அண்ணன், தம்பியைப்போல மதித்தார்களா? இல்லை, நிர்வாகிகளை அடிமைகள் என்று நினைத்தார்களா? என் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் முதலில் தங்கள் தவறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் மரியாதை உண்டு. அந்த மரியாதையை அவர் கொடுத்தாரா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

குஷ்பு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தபோது டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமையிடம் பேசி முடிவெடுத்திருக்கலாம் என்றார். ஆனால் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளில் இருந்த எங்களிடம் தலைமை எந்த விளக்கத்தையும் கேட்காமல் நடவடிக்கை எடுத்திருப்பதைப் பற்றி இளங்கோவன் வாய் திறக்கவில்லை. தி.மு.க-வில் இருக்கும் ஒவ்வொருவருமே சுயமரியாதையும், தன்மானமும் உடையவர்கள். அவர்களால்தான் எம்.எல்.ஏ ஆனோம். அவர்களால்தான் அமைச்சர் ஆனோம். அவர்களால்தான் எம்.பி ஆனோம். அதற்காக அவர்களின் அடிமைகளாக ஒருபோதும் இருக்க மாட்டோம்!''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

 கட்சி கலைஞர் கட்டுப்பாட்டில் இல்லை!

 எஸ்.எம்.போஸ் - விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர்: ''1967-ல் இருந்து தி.மு.க-வில் இருக்கிறேன். என் மகள் திருமணத்துக்கு அழகிரிக்கு பத்திரிகை கொடுத்தேன். வெளியூரில் இருந்ததால் அவரால் வர முடியவில்லை. இதற்கிடையே அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்த வீட்டுக்கு வந்தார். அதனால்தான் இப்போது என்னை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். மேலும், என் வளர்ச்சி பொறுக்காமல் தங்கம்தென்னரசு பழிவாங்க காத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம்தென்னரசும் கட்சித் தலைமையிடம்  சொல்லி என்னை நீக்க செய்துவிட்டார்கள். நீக்கம் பற்றி கேள்விப்பட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது. கட்சிக்காக 40 ஆண்டுகள் குடும்பத்தை விட்டு உழைத்த எங்களுக்கு கிடைத்த பரிசு.

எங்களுக்கு எப்போதுமே தலைவர் கலைஞர்தான். ஆனால் இப்போது நடக்குற சம்பவங்களைப் பார்க்கும் போது கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது புரிகிறது.  தி.மு.க-வுக்கு சம்பந்தமே இல்லாத  வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பணம் கொடுத்து ஸீட் வாங்கும் நிலைமைக்கு கட்சி போய்விட்டது.

தி.மு.க-வில் ஒரு நிர்வாகியை நீக்க வேண்டும் என்றால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள். விளக்கம் கொடுத்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், இப்போது எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கியிருக்கிறார்கள். தி.மு.க ரத்தம்தான் என் உடம்பில் ஓடுகிறது. செத்தாலும் கட்சியை விட்டுப் போக மாட்டேன். நாங்கள் தி.மு.க வேஷ்டியைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மு.க.அழகிரியிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.''

'சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமைக்கு வாழ்த்துக்கள்!'

 வேடிக்கையாக இருக்கிறது!

 இன்பசேகரன் - தர்மபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்: ''இதுவரை மூன்று தேர்தல்களில் வேலை செய்திருக்கிறேன். அனைத்துத் தேர்தல்களிலும் கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக வேலை பார்த்திருக்கிறேன். நாங்கள் வேலை செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மாவட்டத்தில் நடந்த அனைத்துக் கூட்டங்களையும் நான்தான் நடத்தியிருக்கிறேன். வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க எல்லா இடங்களுக்கும் சென்றேன். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எனது தலைமையில் பேரணி நடந்தது. பூத் ஏஜென்ட்கள் இல்லை என்று வேட்பாளர் சொல்லியிருக்கிறார். அவர் எல்லா பூத்களுக்கும் சென்றாரா? நான் செய்த பணிகளை தொகுத்து அறிக்கையாக தலைமைக்குத் தரப்போகிறேன். தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவேன். நான் வேலை செய்யவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism