Published:Updated:

தமிழக அரசியல் ரேஸ்... ரஜினியை முந்திய கமல்!

தமிழக அரசியல் ரேஸ்... ரஜினியை முந்திய கமல்!
தமிழக அரசியல் ரேஸ்... ரஜினியை முந்திய கமல்!

தமிழக அரசியல் ரேஸ்... ரஜினியை முந்திய கமல்!

ரசியலுக்கு ரஜினிதான் வருவார் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் தமிழக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ரேஸில் முன்னால் வருவதுபோல் இருந்த ரஜினியை, இப்போது காணவில்லை. ரேஸிலேயே இல்லாத கமலை, அரசியல் தடகளத்தில் முதல் வரிசையில் ஓட வைத்திருக்கிறார்கள். கமலை ஆதரித்தும், எதிர்த்தும் மேடைக்கு மேடை அரசியல் கட்சிகளின் வாய்ஸ்தான் கேட்டுக்  கொண்டிருக்கிறது. கமலுக்கு முன்னதாக இப்படி வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த். கடந்த சில மாதங்களாக அரசியல் நோக்குடன் ரசிகர்களை சந்தித்ததும் எதிர்பார்ப்பும் பிசுபிசுத்துள்ளது. கமலை‘சுமோட்டோ’ வாகவே அ.தி.மு.க. மந்திரிகளே, வண்டியில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.‘அம்மா உசுரோட இருக்கும்போது கமல் பேச வேண்டியதுதானே?’ என்கிறார் ஒரு மந்திரி.  ‘வர்லாம், வர்லாம், வா, வா. அரசியலுக்கு உள்ளே வா. உள்ளே வந்தபின் அப்புறமா பேசு’ என்கிறார் மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசியலில் இருபெரும் துருவங்களாகக் கடந்த நாற்பதாண்டுகளாக  இருந்தது இருவர். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் ஜெயலலிதா. தமிழகத்தை அதிகமுறை ஆண்டது யார் என்ற ரேஸில் வெற்றிஜோதியை மாற்றி, மாற்றி ஏந்திச் சென்றதும் இவர்கள் இருவர்தான். இன்று ஜெயலலிதா உயிரோடு இல்லை. உடல்நலக் குறைவால் சட்டசபைக்கு வருவதில் தற்காலிக விலக்கு அளிக்கும்படி மனு போடும் அளவில் கருணாநிதியின் உடல்நிலை இருக்கிறது. சகலகலா வல்லவன், உலகநாயகன், அறிவு ஜீவி என்று கமலுக்கான அடையாளங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்தன. பட்டப்பெயர் என்று பார்த்தாலும் கூட, கமல் என்றால், ‘காதல் இளவரசன்’, ரஜினி என்றால் ‘சூப்பர் ஸ்டார்’ என்றே அடையாளம் இருந்தது.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம், ‘இந்திரன்-சந்திரன்’. 1990-ல் வெளியானது. பெண்பித்தும், அதிகார போதையும் பிடித்துத் திரியும் மாநகர மேயர் பாத்திரம் ஒரு கமலுக்கு. இன்னொரு கமலிடம் அயோக்கிய வேலைகளை நியாயப்படுத்தி, மேயர் கமல் பேசும் வசனத்தைப் படம் முழுக்கத் தெளித்திருப்பார், சுரேஷ்கிருஷ்ணா.   

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறந்து, அ.தி.மு.க. ஜா -ஜெ என்று இரண்டு அணிகளான காலகட்டத்தில்தான் இந்தப் படம் வந்திருந்தது. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டுபோக வேண்டும், தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கர் வாங்கித் தரவேண்டும் என்பதே  அப்போது கமலின் கனவாக இருந்தது. ‘நான் சம்பாதித்தது சினிமாவில்தான், இந்த சினிமாவில்தான் நான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வேன்’ என்கிற அளவுக்கு கமலுக்கு சினிமாப் பார்வை இருந்தது. அதே வேளையில் நடப்பு அரசியலின் மீதான கமலின் கோபம், அதற்கு முன்னரே ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற படத்தில் கே.பி. மூலமாக வெளிவந்தது. ஆனாலும் அவை வெறும் சினிமா என்றளவே நின்றது. கமலை வைத்து இந்திரன் - சந்திரன் படத்தை 1990-ல் எடுத்த சுரேஷ்கிருஷ்ணா, 1995-ல் ரஜினியை வைத்து ‘பன்ச்’ டயலாக்குகளுடன்  பாட்ஷாவைக் கொடுத்தார்.

இந்திரன்-சந்திரன் அளவுக்கு அரசியல் வசனம் பாட்ஷாவில் பெரிதாக இல்லை. ஆனாலும், அன்றிருந்த அரசியல் சூழ்நிலை, போயஸ் கார்டனுக்குப் போகும் வழியில் ரஜினியின் காரை மறித்து போலீஸார் நடத்தியசோதனை, ரஜினியை அரசியல் வாய்ஸ் கொடுக்கும்படி ஆக்கியது. சென்னை அடையாறு பார்க்  ஹோட்டலில், 1995- ஜூலை 14 அன்று பாட்ஷா படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடந்தது. அ.தி.மு.க. மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த ஆர்.எம்.வீரப்பன் தான் பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் என்பதால் விழாவில் அவர்தான் முக்கியமான பாத்திரம். அங்கே மைக் பிடித்த ரஜினி, “இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்னை பற்றிப் பேச விரும்புகிறேன். சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனதை மிகவும் சங்கடப்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள்.

சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதலமைச்சருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள். குற்றம் செய்தவர்களைப் பிடித்துத் தண்டியுங்கள். ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே அது ஏன்? தமிழகப் போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. திறமைவாய்ந்த அவர்களின் வேலையில் தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக்காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள். தமிழகத்தில் இனி வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால், அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாகச் சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவனாகச் சொல்கிறேன்” என்றார்.  ரஜினி பேசி முடித்ததும் அவரை, தட்டிக்கொடுத்து  வழியனுப்பி வைத்த ஆர்.எம்.வீரப்பன் அடுத்து வந்த நாள்களில் அ.தி.மு.க-வில் இல்லாமல் போனார். கடைசியில் எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரியான கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீ ஆரம்பித்த ‘எம்.ஜி.ஆர். கழக’த்துக்குத் தேர்தல் ஆதரவு தருமளவு ரஜினி வாய்ஸ் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த காலகட்டத்தில், ‘ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்’ என்ற தமிழ்மாநில காங்கிரஸைத் தொடங்கிய  ஜி.கே.மூப்பனார் ரஜினி பெயரை முன் மொழிந்தார். ‘ரஜினியின் ஆசிபெற்ற துறைமுகம் தொகுதி கூட்டணி வேட்பாளர் கலைஞரை ஆதரியுங்கள்’ என்ற சுவரெழுத்துகள் சென்னையில் பளிச்சிட்டது. 1996-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவில் தி.மு.க- த.மா.கா. கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்த பின் அரசியல்  வாய்ஸ் கொடுப்பதை ரஜினி நிறுத்திக் கொண்டார். அதன்பின், ரஜினியை தி.மு.க. பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.  ரஜினியை வைத்து 1994-ல் பாட்ஷாவைக் கொடுத்த அதே சுரேஷ்கிருஷ்ணாவே மீண்டும் ரஜினியை வைத்து 2002-ல் ‘பாபா’ வைக் கொடுத்தார். எப்படியாவது ரஜினியை அரசியலில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணம்  சுரேஷ்கிருஷ்ணாவுக்கு இருந்ததோ, என்னவோ தெரியவில்லை. படத்தில் பல இடங்களில்   ‘பன்ச்’ டயலாக்குகளை  வைத்திருந்தார்.

பாபாவில்,  ரஜினி பூர்வ ஜென்மத்தில் ‘பாபா’ வாக இருந்ததை ஒரு திருமண வாழ்த்தின்போது கருணாநிதி கிண்டல் செய்ய, அத்தோடு ரஜினி  மொத்தமாக சைலன்ட் ஆனார். கருணாநிதி தன்னை மறைமுகமாக விமர்சனம் செய்ததை ரஜினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வரும்படி அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு கொடுத்தபோது அந்த வேதனை ரஜினியிடமிருந்து வெளிப்பட்டது. கருணாநிதிக்கு  ரஜினி அழைப்பிதழ் தரவில்லை. மனைவியுடன் போய் 2010, ஆகஸ்ட் 24-ல் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.  அ.தி.மு.க-வின் கட்சிப் பத்திரிகையான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், ‘செளந்தர்யா ரஜினியின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை ரஜினியும், அவரது மனைவி லதாவும் போயஸ் கார்டன் சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினர்’ என்று படத்துடன் செய்தியும் வரும்படி பார்த்துக் கொண்ட ஜெயலலிதா, அந்தத் திருமணத்துக்குப் போகவில்லை. அழைப்பிதழே கொடுக்காத நிலையிலும் மணமக்களைக் குடும்பத்துடன் போய் முதலமைச்சராக இருந்த கருணாநிதி வாழ்த்தினார். கருணாநிதியைப் பொறுத்தவரை, ‘ரஜினி நமக்குத் தேவையில்லை, ஆனாலும் அவர் இடம் மாறி விடக்கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார். ‘கருணாநிதிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இப்போது எங்களிடம்தான் இருக்கிறார்’  என்று காட்ட, இந்தத் திருமணத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். 

இந்தக் காலகட்டம்தான் ரஜினியை மிகவும் குழப்பிய அரசியல் காலகட்டம். அரசியல் வெட்டாட்டத்தில் சிக்கும் சதுரங்கக் காய்களின் நிலைமை இதுதான் என்று ரஜினிக்குத் தெரிய ஆரம்பித்ததும் அப்போதுதான்.  ‘போதும் என்னை விட்ருங்க’ என்று கும்பிடாத குறையாக ரஜினி விலகியதும் இதே காலகட்டத்தில்தான். பழைய கிரவுண்டை வேடிக்கை பார்க்க வந்த டெண்டுல்கர் ஒரு ஓவருக்கு மட்டையைப் பிடித்தது போல், அஜீத் போன்றோர் பேசும்போது மட்டும் கொஞ்சம்  கையைத் தட்டியதோடு ரஜினியின் அரசியல் ஆர்வம் முடிந்தது. தொடர்ந்து  படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்ட ரஜினிக்கு, உடல்நலமும் இதன்பின் குன்றியது. நீண்ட ஓய்வுக்குப் பின்னர் தேறினார். அதேபோல்  நீண்ட இடைவெளி க்குப் பின், முதல்வர் ஜெயலலிதாவை 2012, ஜனவரி 27அன்று  சந்தித்தார். ‘தானே’ புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை  அப்போது வழங்கினார். ஆக, ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்பது ‘சொந்தக் கோபங்களின் தற்காலிக சீறல்’ என்றளவே நின்று போனதை இந்தச் சம்பவங்கள் காட்டின. ஒவ்வொரு காலகட்டத்திலும் ரஜினியின் சினிமாக்களில் வந்த பஞ்ச் டயலாக்குகள் அவருக்கு அரசியலில் துணை நின்றதா என்றால் இப்போது வரை ‘இல்லை’ என்பதே சரியான பதிலாக இருக்கும்.

ரஜினியின் புகழ்பெற்ற சில வசனங்களை இங்கே பாருங்களேன்.‘பேரைக் கேட்டாலே, சும்மா அதிருதுல்ல... பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்.’ படையப்பா:  ‘அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல’.‘எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடிதான் இதெல்லாம் வரணும். நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்.’‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன். நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்கு.’‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...’கமலைப் பொறுத்தவரையில், திருமணம், குடும்பவாழ்க்கை, சினிமாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சறுக்கல்கள் என்று பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர். ‘நல்லவனுக்குக் கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் இந்த சமூகத்தில் கிடைக்குதே’ என்று சமூகத்தின் மீதான கோபத்தை இயல்பாக வெளிப்படுத்தி வந்தவர். எம்.எஸ். உதயமூர்த்தியை ரோல்மாடலாகக் கொண்டு வெளியான ‘உன்னால் முடியும் தம்பி’ படத்திலிருந்து பல படங்களில் சமூக அக்கறையுள்ள கமலைப் பார்க்க முடிகிறது.

கமலின் ரசிகர்கள் வட்டத்தில் பேசினேன். “ஜெயலலிதா இருக்கும் போது கமல் அரசியல் பேசவில்லை என்று சொல்வதே முரண்தான். விஸ்வரூபம் படத்துக்கு ஜெயலலிதா அரசு தடையைக் கொண்டு வந்த போது, கமல் நீதிமன்றத்துக்குப் போனார். கமலுக்காக வாதாடிய வழக்கறிஞரின் வீட்டு மின்சார இணைப்பையே ஆட்சியாளர்கள் துண்டித்தனர். மறுநாள் கோர்ட் கண்டித்த பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. ‘எனக்கு இந்த நாட்டை விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று சொன்னது எதைக் காட்டுகிறது... ஆட்சியதிகார சக்தி படைத்தவர்கள், அதுவும் மூத்த வழக்கறிஞரின் வீட்டு மின் இணைப்பையே துண்டிக்கிறவர்கள் கமல் போன்ற ஒரு நடிகரை எதுவும் செய்யமுடியும் என்ற நிலை இருந்த போதே கமல் அவர்களை எதிர் கொண்டார். ‘ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்’ என்று சொல்ல கமல்தான் வரவேண்டும் என்றில்லை... ஓட்டுப்போட்ட மக்களில் யாரேனும் ஒருவர் கூட சொல்லலாம். மக்கள் சொல்லவில்லை, அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவராக கமல் சொல்லியிருக்கிறார்.‘இந்தித் திணிப்புக்கு என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். அ.தி.மு.க. மந்திரி ஜெயக்குமாரோ, பி.ஜே.பி.யின் ஹெச்.ராஜாவோ நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்ததை உணராதவர்கள்’ என்றும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இப்போது கமலின் கருத்துக்கு மக்களிடம் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் விஜயகாந்தின் அரசியல் வீழ்ச்சிக்குப் போகுமா, ரஜினி அரசியலுக்கு வருவது தள்ளிப் போகுமா என்றெல்லாம் கேட்காதீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் சரியான நேரத்தில் மிகச் சரியான ஒரு விஷயத்தை கமல் கையில் எடுத்திருக்கிறார்” என்றனர். கமலின் அண்ணன் சாருஹாசன், தன்னுடைய முகநூலில், “மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு…. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்…? குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம். கையாடல் குற்றவாளியாகத் தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள்,  ‘அது இல்லை’ என்று சொல்லுங்களேன்” என்று தம்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்.இதற்கிடையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வி.சி.கே. பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோர் அரசியலில் கமல் வருகையை ஆதரித்துள்ளனர். ஆனால், அன்புமணி ராமதாஸ் அப்பாவின் கருத்துக்கு முரண்பட்டிருக்கிறார். நடிகர்களின் கையில் நாட்டை ஒப்படைப்பதா எனக் கொந்தளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், கமலுக்கு துணை நிற்பதாக அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க. மந்திரிகளும், பா.ஜ.க-வில் சிலரும் கமலை கலாய்க்க புதிய வார்த்தைகளைத் தேடி  அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள். அது நாளையோ, நாளை மறுநாள் முதலோ ஆரம்பித்துவிடலாம். கமலின் எதிர்வினையைப் பொறுத்து எதிர்ப்பாளர்களின் செயல்பாடு இருக்கும் என்பதை இப்போதே கணித்துக்கொள்ளலாம். ஆக, மிகக்குழப்பமான காலகட்டத்தில் தமிழக அரசு போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு