Published:Updated:

அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு...

யோகலட்சுமி டைரி சொல்லும் மரண வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி

காஞ்சிபுரம் பிள்ளை​யார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யோகலட்சுமி. போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்ஸி இ.டி.சி.டி (விபத்து மற்றும் அவசர சிகிச்சை) பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். ஹாஸ்டலில் தங்கும் யோகலட்சுமி, வார விடுமுறைக்கு வீட்டுக்குச்

அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு...

சென்றுவருவது வழக்கம். முதலாம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக பலமுறை புகார் அளித்துள்ளார். இரண்டாம் ஆண்டு வந்த பிறகும் ராகிங் தொடர்ந்ததால், கடந்த 23-ம் தேதி மாலை தனது அறையில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் உள்ள யோகலட்சுமியின் வீட்டுக்குச் சென்றோம். யோகலட்சுமியின் அப்பா கமலக்கண்ணனுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். 'திங்கள்கிழமை சாயந்திரம் எனக்கு ஒரு போன் வந்துச்சு. 'உங்க பொண்ணு எமர்ஜென்சி வார்டுல இருக்கா. சீக்கிரம் வாங்க...’ன்னு சொன்னாங்க. பதறிட்டு நான் கிளம்பும்போது, அடுத்த போன் வந்தது. 'உங்க பொண்ணு தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டா...’ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க. நான் வீட்டுல இருந்து கிளம்பிப்போயிட்டு இருக்கும்போது, மறுபடியும் போன் வந்துச்சு. 'என்ன ஆச்சுன்னு உண்மையைச் சொல்லுங்க’ன்னு கேட்டேன். அப்போதான், 'உங்க பொண்ணு தூக்கு போட்டுகிட்டா...’ன்னு சொன்னாங்க.

4 மணிக்கு சம்பவம் நடந்திருக்கு. போலீஸ் 7 மணிக்கு மேலதான் வந்தாங்க. யோகலட்சுமி தங்கியிருந்த

அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு...

அறையில் ஃபேன் அந்த அளவுக்கு உயரம் இல்லை. அதுல தூக்குப்போட வாய்ப்பே இல்லை. எங்களுக்கு சந்தேகமாக இருந்துச்சு. நாங்க போறதுக்குள்ள யோகலட்சுமியோட தோழிகளை எல்லாம் ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

யோகலட்சுமிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அதுல, 16 பக்கம் தனக்கு நடந்த கொடுமைகளை விவரிச்சு எழுதியிருக்கிறா. 'கோட்டீஸ்வரி என்னை டார்ச்சர் செய்யறா. கோட்டீஸ்வரியோட காதலன் ஜெய் என்பவனுடன் என்னைச் சம்பந்தப்​படுத்தி கிண்டல் செய்யறாங்க. எல்லோரும் ஜெய்யை லவ் பண்றதா சொல்லி என்னைக் கிண்டல் பண்றாங்க. ஆனா, அவனை நான் லவ் பண்ணலை. கேன்டீன்ல எல்லோரும் இருக்கும்போது என்னை கிண்டல் பண்றாங்க. பாத்ரூமில் வரிசையில் நிற்கும்போது, சீனியர் மாணவிகள் எல்லோரும் குளிக்கும்வரை காத்திருக்கணும். இதனால், பலமுறை குளிக்காமலேயே காலேஜுக்குப் போயிருக்கேன். சீனியர்கள் என்னை ராகிங் செய்த விஷயத்தைப் பாதிதான் எங்க வீட்டுல சொல்லியிருக்கேன். அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு...’ன்னு எழுதியிருந்தா. மீதி பக்கங்களை நாங்க படிக்கிறதுக்குள்ள போலீஸ் அந்த டைரியைப் பறிச்சிகிட்டுப் போயிட்டாங்க... என் பொண்ணை ஏதோ பண்ணிட்டாங்க சார்...'' என்று நெஞ்சில் அறைந்துகொண்டு கதறினார்.

அருகே உட்கார்ந்திருந்த யோகலட்சுமியின் அம்மா கோமளவள்ளி தொடர்ந்தார். ''யோகலட்சுமிகிட்ட யாரு நல்லா பேசினாலும் அவங்களோட உடனே பழகிடுவா. அவங்க அப்பா மார்கெட்ல வேலை பார்க்குறாரு. 'இன்னும் ரெண்டு வருஷத்துல நான் துபாய்க்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவேன். அதுக்கப்புறம் நீங்க வேலைக்குப் போகாதீங்க... நல்ல ரெஸ்ட் எடுங்க’ன்னு அடிக்கடி சொல்லுவா. இப்படி எங்களைப் பாதியில விட்டுட்டுப் போவான்னு நாங்க யாருமே நினைக்கலையே... இனி

அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு...

எங்களுக்கு யாரு இருக்கா?'' என்று அவரும் அழ ஆரம்பித்தார்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் பேச முயற்சித்தோம். நம்மிடம் பேசிய நல்லமுத்து என்பவர், ''டீன் இதுதொடர்பாக எதுவும் பேச மாட்டார். யோகலட்சுமி மரணம் பற்றி எந்த விளக்கமாக இருந்தாலும், நீங்கள் போலீஸ் ஸ்டேஷனில் கேளுங்கள்...'' என்று மட்டும் சொன்னார்.

வழக்கை விசாரிக்கும் போரூர் இன்ஸ்பெக்டர் சார்லஸிடம் பேசினோம். 'அது அவங்களோட பர்சனல் பிரச்னை. அந்தப் பொண்ணு ஒரு பையனை காதலித்திருக்கிறது. அதை மற்ற பெண்கள் இன்சல்ட் செய்து பேசியிருக்கிறார்கள். டைரியில் அப்பா, அம்மாவுக்கு சும்மா ஏதோ எழுதியிருக்கிறது. வேறு எதுவும் முக்கியமாக இல்லை. யோகேஸ்வரி, கோட்டீஸ்வரி ஆகியோரின் செல்போனில் இருந்த எஸ்.எம்.எஸ் மூலம் ராகிங் நடந்தது தெரியவந்தது. யோகலட்சுமியின் பெற்றோர் புகார் கொடுத்ததால், கோட்டீஸ்வரியைக் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்.

கைது செய்யப்பட்ட கோட்டீஸ்​வரியோ, ''யோகலட்சுமி அவளோட க்ளாஸ்மேட் ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருந்தா. அவன்கூட பைக்ல சுத்துறதை நானே பார்த்திருக்கேன். இதெல்லாம் உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது இல்லைன்னு நான் அவளைத் திட்டியிருக்கேன். யோகலட்சுமியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ மேல இருக்கும் அக்கறையிலதான் நான் திட்டினேன். இதை அவ தப்பா எடுத்துகிட்டா. மத்தபடி அவளை ராகிங் செய்யவோ, துன்புறுத்தவோ இல்லை. காலேஜ்ல ஜூனியர்களை சீனியர்கள் கிண்டல் பண்றது சாதாரணமா நடக்கும் ஒரு விஷயம். அதை யோகலட்சுமி இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவா என்று நான் நினைக்கலை'' என்று போலீஸாரிடம் அழுதபடியே சொல்லியிருக்கிறார்.

விளையாட்டு வினையாகி நிற்கிறது!

- பா.ஜெயவேல், எஸ்.மகேஷ்

படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு