Published:Updated:

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

மாபெரும் மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது சென்னையில். மொத்த இடத்தையும் தூர்த்து வாரும்போது இறந்தவர் எண்ணிக்​கை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். பணத்தாசை பிடித்த அதிகாரிகள், பேராசை பிடித்த பில்டர்கள் சேர்க்கை​யால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. காற்று, மழை, இடி, மின்னல்... என்று இயற்கையைக் குறை சொல்லித் தப்பிக்கவே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் மூலமாக தங்களது சுயநலச் செய்கைகளை மறைக்கிறார்கள். ஆனால், பிணவாடையை மிஞ்சியதாக ஊழல் வாடையை வெளியில் கொண்டுவந்துவிட்டது மவுலிவாக்கம் சம்பவம்!

 'ரமணா’ படம் பார்த்தவர்களுக்கு நினைவு இருக்கும். குளம் இருந்ததை மறைத்து அந்த இடத்தில் கட்டப்பட்ட அபார்ட்மென்ட் சரிந்துவிழும். அதில் பலரும் பரிதாபமாக இறந்துபோவார்கள். 'இங்கே எல்லாமே இப்படித்தான்... உங்களுக்கெல்லாம் எதுக்காக பணம் கொடுத்தேன்? இப்படி ஏதாவது பிரச்னை வந்தா சமாளிக்கணும்னுதானே!’ என்று அதிகாரிகளைப் பார்த்து அந்த அபார்ட்மென்ட் கட்டிய பில்டர் பேசுவார். ஊழலின் உக்கிரத்தை உரக்கச் சொல்லும் இந்தக் காட்சி, சினிமா பரபரப்புக்காக எடுக்கப்பட்டது. ஆனால், சென்னை மவுலிவாக்கத்தில் நடந்தது சினிமா அல்ல... நிஜம். அதில் பல உயிர்கள் பலியாகிவிட்டது. கைதானவர்கள், சில நாட்களில் ஜாமீனில் வந்துவிடுவார்கள். இறந்து போனவர்களுக்கு பணம் அறிவித்ததோடு அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டது. அதிகாரிகள் இதற்காக இரண்டு, மூன்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம். அதற்கு மேல் எதுவும் நடக்காது என்பதே சுடும் உண்மை!

''இங்க ஒருத்தர் கால் தெரியுது...''

11 மாடி கட்டடம் சுக்கு சுக்காக சிதறிக்கிடக்கிறது. சரிந்து விழுந்த கட்டடத்தில் எத்தனை பேர் உள்ளே இருந்தார்கள்... எத்தனை பேர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற முழு விவரங்கள் மூன்று நாட்களைக் கடந்த பிறகும் முழுமையாகத் தெரியவில்லை. ஆம்புலன்ஸ் அலறலும், தீயணைப்பு வண்டிகளின் சப்தமும் இன்னும் ஓயவில்லை.

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

கூர்மையாக முனைகள் கொண்ட இரும்புக் கம்பிகள் கட்டடத்தைச் சுற்றிலும் சிதறி இருந்தது. மெட்ரோ ரயில் வேலைக்காக வந்த பணியாளர்கள் ரம்பத்தைக் கொண்டு, இரும்புக் கம்பிகளை வெட்டி கட்டடத்துக்கு வெளியே வீசுகிறார்கள். பெரிய பில்லரின் முனையைப் பிடித்து நிறுத்தி, அதன் கீழே விழுந்து சிதறிக்கிடக்கும் கற்களை மெள்ள மெள்ள எடுத்து வைக்கிறார்கள். ஓர் சிறிய அளவு பொந்து வந்ததும், அதில், டார்ச் அடித்து ஒரு தீயணைப்பு வீரர் பார்க்கிறார். 'இங்க ஒருத்தருடைய கால் தெரியுது. ஒருத்தர் சிக்கிட்டு இருக்காரு’ எனச் சொல்ல, அங்கு இருக்கும் கற்களை வேகமாக அகற்றுகிறார்கள்.

பொந்துக்குள் இரண்டு வீரர்கள் இறங்கி, சிக்கிக்கொண்டிருப்பவரைச் சுற்றிலும் உள்ள கற்களையும், கம்பிகளையும் அகற்றுகின்றனர். மேலே உள்ளவர்கள் அந்த பொந்தின் வழியே ஸ்ட்ரெச்சரை அவர்களிடம் கொடுக்கிறார்கள். பொந்தில் சிக்கிக்கொண்டிருந்தவரை அந்த இரு வீரர்கள் தூக்க, அவர் முகம் முழுக்க ரத்தம். வலது கால் உடைந்துபோய் ரத்தம் வெளியே வழிந்துகொண்டிருந்தது. அந்த வட மாநிலத் தொழிலாளி, அழக்கூடத் தெம்பில்லாமல் அழுகிறார். அவரைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்து, உடல் ஆடாதவாறு க்ளிப் போட்டு, குளுகோஸை கொஞ்சம் கொஞ்சமாக அவரது வாயில் ஊற்றுகின்றனர். அடுத்து ஆம்புலன்ஸை நோக்கி தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். இப்படித்தான் ஒவ்வொருவரையும் மீட்டனர். இன்னும் இப்படி எத்தனை பேரை மீட்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை!

''முதல் ரெண்டு மாடி அப்படியே பூமிக்குள்ள போயிருச்சு!''

இடிந்து விழுந்த கட்டடத்தின் மேலே உட்கார்ந்து ஒருவர் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, தன்னுடைய பெயர் சின்னா என்றும், தன் அக்கா சாந்தகுமாரி இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் சொன்னார். ''நாங்க ஒன்பது மாசத்துக்கு முன்னாடி விஜயநகரத்தில் இருந்து இங்கே வேலை செய்ய வந்தோம். இங்கே இந்தக் கட்டடத்துக்குக் கீழேதான் தங்கி இருந்தோம். நான் வெளியே போயிருந்தேன். மழை வருதுன்னு கட்டடத்து வாசல்லையே நின்னுட்டு இருந்தேன். திடீர்னு சத்தம் கேட்டது. முதல் ரெண்டு மாடி நிலத்துக்குள்ள இறங்கி, அப்படியே கீழே விழுந்துடுச்சு. இப்பதான் நானும் அக்காவும் வாரச் சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்குப் போகலாம்னு இருந்தோம். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. என் அக்காவைக் காணோம்'' என கதறி அழுதார்.

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

இப்போது நடப்பது எல்லாம் மேல்மட்டத்தில் கிடக்கும் கட்டட இடிபாடுகளில் இருந்து ஆட்களை மீட்கும் பணி மட்டும்தான். இவற்றை முழுமையாக அப்புறப்படுத்திய பிறகுதான், நிலத்துக்கு உள்ளே புதைந்துபோன தளங்களில் இருந்தவர்கள் எத்தனை பேர் என்பதே தெரிய வரும். 'அன்றைய தினம்  சனிக்கிழமை. சம்பள நாள். முதல் மாடியில் வைத்து சம்பளம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எனவே, ஊழியர்கள் அனைவரும் முதல் மாடியில் நின்றுகொண்டு இருந்தார்கள்’ என்கிறார் ஒருவர்.

முதல் இரண்டு தளங்கள் அப்படியே பூமிக்குள் போய்விட்டது என்று சின்னா சொல்வது உண்மையாக இருந்தால், பூமிக்குள் புதையுண்டு போனவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்ற தகவல்தான் பதற வைக்கிறது.

''எங்க கண் முன்னாலதான் விழுந்தது!''

அந்தக் கட்டடத்துக்குப் பின்புறம் இருந்த வீட்டில் வசித்துவரும் ராமையாவிடம் பேசினோம். ''மணி சரியா 3.30 இருக்கும். இடியுடன் கூடிய மழை கொட்டிக்கிட்டு இருந்துச்சு. நாங்க அப்ப வீட்டுக்கு வெளியே உட்கார்ந்துட்டு இருந்தோம். திடீர்னு நிலநடுக்கும் வந்ததுபோல வீடு அசைஞ்சது. ஏதோ விழுவதுபோல பயங்கரமான சத்தம் கேட்டுச்சு. நாங்க சுதாரிச்சு பார்க்கிறதுக்குள்ள எங்க முன்னாடியே அந்தப் பெரிய கட்டடம் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் வீட்டின் பின்பகுதி மீது சாய்ஞ்சு விழுந்தது. நாங்க பதறியடிச்சுகிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடினோம். கடந்த ஒண்ணே கால் வருஷமா கட்டிட்டு இருந்த கட்டடம் அத்தனையும் எங்க கண்ணு முன்னாடியே தரைமட்டமா ஆகிடுச்சு. அதுக்குள்ள எல்லா பக்கம் இருந்தும் மக்கள் கூடிட்டாங்க. ஒரே அழுகை சத்தம். அதுல வேலை செஞ்சுகிட்டு இருந்தவங்க சிலர் அப்பதான் வெளியே போனாங்க... மழை வருதேன்னு சொல்லி திரும்பவும் பில்டிங் உள்ளே போனாங்க. இப்ப அவங்க எல்லாம்  மாட்டிக்கிட்டாங்க'' என்றார்.

ஒன்று இடிந்தது, இன்னொன்றுக்கு சீல்!

இந்தப் பகுதி மவுலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தது. மாங்காடு உள்வட்டத்தில் வரும். காஞ்சிபுரம் மாவட்டம் எல்லைக்கு உட்பட்டது. இந்த ஏரியா முழுவதுமே நான்கு மாடிக்கு மேல் எந்தக் கட்டடமுமே கிடையாது. அதுக்கு மேல் அப்ரூவலும் தர மாட்டார்கள். இந்த ஏரியாவில் பெரிய கட்டடமே இந்த 11 மாடி குடியிருப்பு கட்டடங்கள்தான். இதுதான் முதன்முதலில் கட்டப்படுகிறது. தரைதளத்துடன் சேர்த்து 11 மாடிகள் கட்டியிருக்கிறார்கள். இதற்குப் பக்கத்தில் இன்னொரு கட்டடம் இருக்கிறது. இதுவும் 11 மாடி கட்டடம்தான்.  1,260 சதுர அடி, 1,410 சதுர அடி, 1,600 சதுர அடி, 1,713 சதுர அடி என நான்கு வகையாக பிரித்து வீடு கட்டியிருக்கிறார்கள். ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் என, மொத்தம் 48 வீடுகளைக் கட்டி முடித்திருக்கிறார்கள். மொத்தம் இரண்டு கட்டடத்தையும் சேர்த்து 96 வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்.  ஒரு சதுர அடியின் விலை 4,800 முதல் 5,500 ரூபாய் வரை. அத்தனை ஃப்ளாட்டுகளும் விற்றுவிட்டார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் வீடு கட்டி முடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இருந்ததால், அவசர அவசரமாக வேலை முடித்து இருக்கிறார்கள். ஒரு கட்டடம் இடிந்ததால், இன்னொரு கட்டடத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் மெத்தனம்தான் இதற்குக் காரணம் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. கூட்டத்தோடு கூட்டமாக இருந்த அரசு அதிகாரி ஒருவர், ''இந்த ஏரியா தாசில்தார், வி.ஏ.ஓ, சில சி.எம்.டி.ஏ அதிகாரிகளும் மக்கள் கூட்டத்தோட கூட்டமாக இப்போது நின்றுகொண்டு இருக்கிறார்கள். இந்த ஏரியாவில் பல மாடிகள் கட்ட அனுமதியே கிடையாது. இது வண்டல் மண் நிறைந்த பகுதி. 11 மாடி கட்டடம் கட்டவே முடியாது. சரியான அடித்தளம் இல்லாமல் கட்டி முடித்து இருக்கிறார்கள். இந்த நிறுவனத்துக்கு சாதகமாகவே அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இப்போது கட்டடம் இடிந்து விழுந்ததால், ஆடிப்போய் அனைவரும் வந்து இருக்கிறார்கள். இதில் பெரிய முறைகேடு நடந்து இருக்கிறது'' என்று சொன்னார்.

''மண் ஆய்வை ஒழுங்காகச் செய்வது இல்லை!''

தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிசங்கரைச் சந்தித்தோம். ''மண் பரிசோதனை செய்வதிலேயே தவறு நடக்கிறது. மண் பரிசோதனை செய்கிறார்களே தவிர, அதில் லோட் டெஸ்ட் எடுப்பது இல்லை. அதுதான் முக்கியம். இந்த மண் எவ்வளவு லோடு தாங்கும் என்பதில் அக்கறை செலுத்துவது இல்லை. அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளம் சரியான முறையில் அமைக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு தளமும் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அது போதுமான அளவு காயவைக்க அவகாசம் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் முறையாகச் செய்யாமல் அவசர அவசரமாக செய்ததால்தான், விபத்துகள் நடக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 60 அடி சாலைகள் அவசியம் தேவை. ஆனால், ரோட்டுக்கும் கட்டடத்துக்கு இரண்டு புறமும் இருக்கும் இடத்தை எல்லாம் காட்டி 60 அடி சாலை இருக்கிறது என்று சொல்லி சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்குகிறார்கள். ஒரு சிலர் செய்த தவறால் அனைவருக்குமே பிரச்னை ஏற்படுகிறது. இனி கட்டடம் கட்டுபவர்களும் அரசாங்கமும் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்றார்.  

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

இடியா... பணமா?

கட்டடத்தின்  இயக்குநர்களில் ஒருவர் மனோகரன், அவரது மகன் முத்து, பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம், கட்டட வரைபடம் தயாரித்த வெங்கடசுப்ரமணி மற்றும் கட்டட நிபுணர் விஜய் பர்கோத்ரா ஆகியோரை கைதுசெய்து இருக்கிறார்கள். இவர்கள் காவல் துறையினரிடம், ''இடி விழுந்ததால்தான் விபத்து நடந்தது. நாங்கள் அனைத்தையும் முறையாகத்தான் பின்பற்றினோம்'' எனக் கூறி வருகிறார்கள். சி.எம்.டி.ஏ அதிகாரிகளோ, ''இந்தக் கட்டடத் திட்ட அனுமதி வழங்கியதில் எந்தத் தவறும் நடக்கவில்லை'' என்று சொல்கிறார்கள். நேரில் வந்துபார்த்த தமிழக முதல்வரும் இதையே சொல்லியிருக்கிறார். ''கட்டட அனுமதிக்காகக் கொடுக்கப்பட்ட வரைவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. மாறாக கட்டட உரிமையாளர்கள் அனுமதி பெற்றபடி கட்டுமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் தெரிந்தே பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். முறைப்படி விதிமுறைகளைப் பின்பற்றி கட்டட்டத்தை கட்டவில்லை'' என்று சொல்லியிருக்கிறார். விதிமுறைப்படி கட்டடம் கட்டுகிறார்களா இல்லையா என்று பார்க்க வேண்டியது யார்? சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்தானே?

'சாதாரணமாக ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அவர் விதிப்படி கட்டுகிறாரா இல்லையா என்பதை சி.எம்.டி.ஏ ஸ்குவாட் டீம் திடீரென வந்து ரெய்டு செய்யும். ஆனால், இந்தக் கட்டடத்தை யாரும் பார்க்கவில்லை. அதுதானே இந்த விபத்துக்குக் காரணம். அந்த அதிகாரிகள் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’ என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

சாமானியர்கள் சாகும்போது விதியாவது, மண்ணாவது என்று ஆட்சியாளர்கள் செயல்பட்டால் என்ன செய்ய முடியும்?

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: எம்.உசேன்,

சொ.பாலசுப்பிரமணியன், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், தே.திட்ஷித்,

க.பாலாஜி

நினைக்கவே நெஞ்சம் பதறுது!                            

'ரமணா’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசினோம். ''மும்பையில் இதுபோல அடிக்கடி சம்பவம் நடக்கும். அதுதான் அப்போது என் படத்துக்கான கருவாக இருந்தது. தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இடி விழுந்ததால் கட்டடம் விழுந்துடுச்சுன்னு சொல்லுறாங்க. பார்த்தால் அப்படி தெரியலை. இதுவே கட்டட வேலைகள் முடிந்து பலரும் குடும்பத்துடன் குடியேறி இருந்தால் என்ன ஆவது... நினைக்கவே நெஞ்சம் பதறுது. லஞ்சத்தினால் விதிமுறை மீறல் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் காட்டமாக.    

ப்ரைம் சிருஷ்டி பின்புலம்!

சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து பல உயிர்களுக்கு எமனான கட்டத்தின் புரமோட்டர் ப்ரைம் சிருஷ்டி நிறுவனம். அதன் இயக்குநர்களில் ஒருவர் மனோகரன். வங்கி மேனேஜராக பணிசெய்து ஓய்வுபெற்ற மனோகரனுக்கு, தமிழக அளவில்  பெரிய அளவில் ப்ரோமோட்டர்களாக வியாபாரம் செய்வதற்கு கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது என்ற கோணத்தில் மதுரையில் பல்வேறு துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.

''இரண்டு மாடிகள் பூமிக்குள் புதையுண்டு இருக்கலாம்?''

மதுரை கே.கே.நகரில் லேக் வியூ என்ற மூன்று நட்சத்திர ஹோட்டலை நடத்திவரும் இவர்கள், அந்த ஹோட்டலையேதான் ப்ரைம் சிருஷ்டியின் அலுவலகமாகக் காட்டி வருகிறார்கள். மதுரையின் சில இடங்களில் அபார்ட்மென்ட்கள், கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். 'லேக் வியூ ஹோம்ஸ்’ என்று வீடுகளும் கட்டி விற்பனை செய்துள்ளார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில்தான் இவர்கள் தொழிலை பெரிய அளவில் பலரது சிபாரிசுகளுடன் டெவலப்  செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு மதுரையில் பலமான நபராக திகழ்ந்த பொட்டு சுரேஷ் ஃபைனான்ஸ் செய்து வந்துள்ளதாக இப்போது தகவல் வருகிறது. அதன் மூலம் மதுரையின் முக்கிய தி.மு.க புள்ளியின் சப்போர்ட்டும் இவருக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாது, வங்கியில் பணிபுரிந்தவர் என்பதால், அங்கு இவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகபட்சமாக லோன் வாங்கியிருக்கிறாரா என்ற ரீதியிலும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

ஆட்சி மாறியதும், ஆளுங்கட்சியிலும் ஒரு மதுரை முக்கியப் புள்ளியை கைக்குள் போட்டுக்கொண்டு தன் தொழிலை விஸ்தரித்துள்ளனர். தென் மாவட்டத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மதுரை அண்ணா நகர் பகுதியில் காம்ப்ளக்ஸ் ஒன்றை குறைந்த விலையில் இவர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இவர்கள் உதவியால்தான் சென்னையில் தங்களுடைய புராஜக்டை எந்தவித தங்குதடையில்லாமல் உருவாக்கி வந்துள்ளனர்.

இப்போது உளவுப்பிரிவினர் மனோகரனின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏதாவது முக்கியத் தகவல் கிடைக்கலாம் என்கிறார்கள்.

- செ.சல்மான்

அடுத்த கட்டுரைக்கு