Published:Updated:

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

கிரீட்டாவை உங்களுக்குத் தெரியுமா? பாக்கெட்டில் பைசா வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நபர் கிரீட்டா. இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர். உலகத்துக்கு தனது நடத்தையால் ஒரு வாழ்க்கைப் பாடத்தை நடத்த ஆரம்பித்து இருக்கிறார் கிரீட்டா!

 நிம்மதி, மகிழ்ச்சி, சொந்தபந்தங்களின் அன்பு, உடல் ஆரோக்கியம் என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, 'பணம்... பணம்... பணம்’ என்று  பணத்தைத் தேடியே ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன். தேவைக்குப் பணம் சம்பாதித்த காலம் போய், 'எவன் ஒருவன் பணம் சம்பாதிக்கிறானோ, அவனே வெற்றியாளன். பணம் சம்பாதிக்க முடியாதவன் உதவாக்கரை’ என்று நம்பும் அளவுக்கு பெரும்பான்மையானவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். தனது சௌகரியத்துக்காக மனிதன் படைத்த பணத்துக்கு இன்று அவனே அடிமையாகிக் கிடக்கிறான்.

'கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்’ என்ற தமிழ் சினிமா பாடலை கிரீட்டா கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. என்றாலும், 'இந்த உலகில் பணம் இல்லாமல் வாழ முடியுமா?’ என்ற கேள்வி கிரீட்டாவுக்கு 30 வயதில் எழுந்திருக்கிறது.

சரி, ஒரு வருட காலம் கையில் பணமே இல்லாமல் வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன், ஒரு நாடோடி வாழ்க்கை வாழ விரும்பி கிளம்பிய கிரீட்டா, கடைசி கடைசியாக வயிறார ஒருவேளை சாப்பிட்டுவிடலாம் என்ற எண்ணத்தில், தன் பாட்டி வீட்டுக்குச் சென்றார். பதப்படுத்தப்பட்ட பாலில் செயற்கை மணங்களைக் கலந்து பாட்டி ஆசை ஆசையோடு பேத்திக்குக் கொடுக்க... நுகர்வோர் கலாசாரம் எந்த அளவுக்கு தன் சமுதாயத்தை பாழ்படுத்தியிருக்கிறது என்பது கிரீட்டாவுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி புரிந்தது.  

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

தனக்குத் தேவையான இரண்டு மூன்று செட் துணிமணிகளை மட்டும் ஒரு கைப்பையில் திணித்துக்கொண்டு ஜெர்மன் நாட்டைவிட்டு கிளம்பிய கிரீட்டா, மறக்காமல் தன் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ், பணம் என்று அனைத்தையும் பாட்டி வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பினார். எந்த வாகனத்தில் ஏறினாலும் டிக்கெட் எடுக்க வேண்டும்; அதற்கு பணம் வேண்டுமே! அதனால், லிஃப்ட் கேட்டுக் கேட்டு சுமார் 1,700 கி.மீட்டர்கள் பயணம் செய்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சலோனா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சென்றடைந்தார்.

புதிய நாடு, புரியாத மொழி, அறிமுகம் இல்லாத சூழல். அந்த நாட்டில் சமுதாய விவசாயம் என்ற ஒரு விஷயம் நடைமுறையில் இருந்தது. அதனால், அங்கே உடல் உழைப்பைக் கொடுத்தால் போதும். நிச்சயம் உணவு தானியங்களும் உணவுப் பொருட்களும் கிடைக்கும். இது கிரீட்டாவுக்கு வசதியாக இருந்தது. 'வேர்க்க விறுவிறுக்க உழைக்கும் அளவுக்கு உடலில் பலம் வேண்டும். பசிக்கும்போது சாப்பிட வேண்டும். படுத்தால் அடுத்த நிமிடமே நிம்மதியாக தூக்கம் வர வேண்டும்’ என்று நினைத்தார் கிரீட்டா. அதனைத் தாண்டி வாழ்கையில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

'நான் அணிந்திருக்கும் விலை உயர்ந்த ஆடை, பயன்படுத்தும் கார், குடியிருக்கும் வீட்டின் அளவு... இதையெல்லாம் வைத்துத்தான் ஒருவர் என்னுடன் நட்பு பாராட்டுவார் என்றால், அப்படிப்பட்ட நட்பே எனக்குத் தேவை இல்லை’ என்று கருதும் மனோபாவம் கொண்டவர் என்பதால், கிரீட்டாவால் கையில் சல்லிக்காசு இல்லாமல் அந்தக் கிராமத்தில் சுலபமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடிந்தது. காட்டில் கிடக்கும் சுள்ளிகளை வைத்து தீ மூட்டி சமைத்து சாப்பிடுவது என்பது இவருக்கு த்ரிலிங்கான அனுபவமாகவே இருந்தது.  

இப்படி ஒரு வருட காலம் வாழ்ந்துவிட்டு மீண்டும் ஜெர்மனி திரும்பியிருக்கும் இவர், 'பேரழிவில் இன்று’ என்ற பெயரில் தனது அனுபவங்களை ஒரு புத்தகமாகவே எழுதியிருக்கிறார். நுகர்வு ஆசையின் தாக்கத்தால், தேவையில்லாத பொருட்களை எல்லாம் காசு கொடுத்து வாங்கும்

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

கலாசாரத்தில் நமது சமுதாயம் சிக்கிக்கொண்டிருக்கிறது. நம்மைவிட நமது குழந்தைகள் இந்தக் கலாசாரத்துக்கு வேகமாக அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். '50 சதவிகிதம் தள்ளுபடி’, '60 சதவிகிதம் தள்ளுபடி’ என்று பொய்களை வாரி இறைத்து நம்மை ஈசல்களைப்போல கவர்ந்திழுக்கும் விளம்பரங்களைக் கண்டு பலரும் ஏமாந்துவிடுகிறோம். இப்படியே போனால் உலகில் இருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தையும் அழித்து இந்தப் பூமிப்பந்தை வெகு சீக்கிரமாகவே ஒரு குப்பை மேடாக நாம் மாற்றிவிடுவோம். இதை உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

''காசு இல்லாமல் ஓர் ஆண்டு காலம் வாழலாம் என்றுதான் முதலில் எண்ணினேன். இப்படி வாழ்ந்த பிறகுதான் தெரிகிறது, காசில்லாமல் வாழ்வது ஒன்றும் நான் பயந்த அளவுக்கு முடியாத காரியம் அல்ல. இந்த ஒரு வருட காலத்தில் எனக்குத் தேவையான பல விஷயங்களை நான் பண்டமாற்று மூலமாகவே வாங்கினேன் என்றாலும், பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் தேவைப்படும் சானிட்டரி நாப்கின் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். அதேபோல, உள்ளாடைகள் வாங்குவதிலும் எனக்கு சிரமங்கள் இருந்தன. மற்றபடி நான் இந்தப் பணம் இல்லாத வாழ்க்கையை உண்மையிலேயே நேசித்தேன். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு காற்று எந்த அளவுக்கு அவசியமான தேவையோ... அப்படி ஒரு தேவை இருந்தால் ஒழிய, காசு கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்குவது இல்லை என்று நான் உறுதி எடுத்திருக்கிறேன்'' என்றும் கிரீட்டா உறுதிபட சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட கிரீட்டா எழுதிய புத்தகத்துக்கு ராயல்டி கிடைக்குமே அதை என்ன செய்வார்? ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக பயன்படுத்தும்படி சொல்லிவிட்டு, மீண்டும் நாடோடி வாழ்க்கைக்கே திரும்பிவிட்டார்.

ஓர் ஆண்டு காலம் அல்ல, ஒரு நாள், ஒரு வார காலம் அப்படி இருந்து பார்ப்போமா?

- வேல்ஸ்  

 ஜெர்மன் பழக்கம்!

வாசகர் ஒருவர் சமீபத்தில் நமக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் அவர் ஜெர்மன் நகருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருந்தார். ''மத்திய வேளை. ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கே மெனு கார்டில் இருந்த எதுவும் எனக்குப் புரியவில்லை. மொழிப் பிரச்னையால் அவர்களிடம் விளக்கமும் கேட்க முடியவில்லை. அதனால், கைக்கு வந்த எதையோ ஒன்றை ஆர்டர் செய்தேன். உணவு வர கொஞ்சம் நேரமானது. அப்போது யதேச்சையாக அடுத்த டேபிளில் நான் பார்த்த காட்சி எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு பிளேட் உணவை வயதான, ஆனால் வசதியான ஒரு தம்பதி ஷேர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஜெர்மனியர்கள் இத்தனைக் கருமிகளா என்ற நினைத்துக்கொண்டேன். ஒரு வழியாக நான் ஆர்டர் செய்த உணவு வந்தது. அதை பாதி சாப்பிடுவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அதன் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. 'தெண்டச் செலவு’ என்று நொந்தபடியே பில் கொடுக்க எழுந்தேன். அப்போது பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மூதாட்டி, 'சிட் டவுன் அண்ட் ஈட்’ என்று அதட்டும் குரலில் என்னைப் பார்த்து கூறினார். 'இது என்னுடைய பணம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று அந்தப் பெண்மணியைவிட உரத்த குரலில் பதில் சொன்னேன். சண்டை போட வருவதைப்போல வேகமாக தனது இருக்கையைவிட்டு எழுந்த அந்த மூதாட்டி, 'பணம் உன்னுடையதாக இருக்கலாம். ஆனால், இந்த உணவு எங்கள் நாட்டுடையது. இதை விரயமாக்க நான் சம்மதிக்க மாட்டேன்’ என்றார். வேறு வழியில்லாமல் மீதமிருந்த உணவை நான் பேக் செய்துகொண்டு வெளியே வந்தேன். சற்று நிதானமாக யோசித்தபோது, அந்த மூதாட்டி சொன்னது எத்தனை உண்மை என்று தாமதமாகப் புரிந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு