Published:Updated:

செவிலியர்களை மீட்ட சுரேஷ் ரெட்டி!

செவிலியர்களை மீட்ட சுரேஷ் ரெட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரக்கமற்ற சித்ரவதைக்குப் பேர்போன தீவிரவாதிகள் கையில் சிக்கிய 46 இந்திய உயிர்கள் சேதாரம்

செவிலியர்களை மீட்ட சுரேஷ் ரெட்டி!

இல்லாமல் மீட்கப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சிவப்புநாடாவுக்குள் சிறையுண்டு கிடக்கும் அதிகார வர்க்கம் என்று பெயர் வாங்கிவிட்ட நம்முடைய அதிகாரிகளுக்கு, அதிகாரமும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டால் பம்பரமாக சுழன்று சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம்.

பிடித்துச் செல்லப்பட்டது முதல் விடுவிக்கப்பட்டது வரையிலான காட்சிகள் இவை....

மருத்துவமனை தீவிரவாதிகள் வசமானது!

சதாம் உசேன் பிறந்த மண்ணான திக்ரித் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் நம் நாட்டைச் சேர்ந்த 46 செவிலியர்கள் வேலை பார்த்து வந்தார்கள். அவர்கள் நிலைமை மோசத்தில் இருந்து படு மோசமாக மாறியது. முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் துப்பாக்கி சத்தங்களுக்கும், ஓயாத குண்டு வெடிப்புப் புகைக்கும் இடையில் வாழ்ந்து வந்தாலும், நோயாளிகள், டாக்டர்கள் என்று யாரும் இல்லாத அந்த மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கியிருந்த அந்த செவிலியர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, அவர்களுடைய பாதுகாப்புக்காக மருத்துவமனையின் கீழ்தளத்தில் இருந்த ஈராக் நாட்டின் ராணுவ வீரர்கள்தான்.

பயந்த நிலையில் ஊர்ந்து கீழ்தளத்துக்கு இரண்டு செவிலியர்கள் சென்று பார்த்தார்கள். அப்போதுதான், தங்களின் மருத்துவமனையில் இருந்த ராணுவ வீரர்கள் மாயமாய் மறைந்த பகீர் உண்மை அவர்களுக்குத் தெரியவந்தது. ராணுவத்தினருக்கு பதிலாக சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் அங்கு நின்றுகொண்டு இருந்தார்கள். அதாவது, தீவிரவாதிகள் கைக்கு அந்த மருத்துவமனை சென்றுவிட்ட உண்மை, அவர்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. தாங்கள் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் அவர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்த தங்கள் நண்பர்களுக்கு இந்தத் தகவலை சொல்ல... அவர்கள் ஈராக் நாட்டில் இருந்த தூதரக அதிகாரிகளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். 'எக்காரணம் கொண்டும் அவர்களை நம்பிச் சென்றுவிடாதீர்கள். ஈராக் ராணுவ அதிகாரிகளோடு பேசிவிட்டோம். உங்களை மீட்க அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டோம். நீங்கள் தீவிரவாதிகளோடு சென்றுவிட்டால், உங்களை மீட்பது என்பது இயலாத காரியமாகிவிடும்’ என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

செவிலியர்களை மீட்ட சுரேஷ் ரெட்டி!

'உயிர் ஆசை இருந்தால் பஸ்ஸில் ஏறுங்கள்!’

அதுவரை கண்ணியமான குரலில் பேசிவந்த தீவிரவாதிகள், அன்று அதட்டும் குரலில் துப்பாக்கியைக் காட்டி, 'இந்த கட்டடத்துக்குக் குண்டு வைத்துவிட்டோம். இன்னும் ஒரு சில நிமிடங்களில் இது வெடித்துச் சிதறப்போகிறது. உயிர்ப் பிழைக்கும் ஆசை இருந்தால் ஓடிவந்து வெளியில் நிற்கும் பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இது அந்த செவிலியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. உடனே, அவர்கள்  பஸ்ஸை நோக்கி ஓடினார்கள். மருத்துவமனைக்குச் சற்று தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அவர்கள் ஓடிச் சென்று ஏறியபோதே, மருத்துவமனை வெடித்துச் சிதறியது. ஏழு மணி நேர பயணத்துக்குப் பின் செவிலியர்களை சுமந்து சென்ற இரண்டு பேருந்துகளும், தீவிரவாதிகளின் கோட்டையாக மாறியிருக்கும் ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருக்கும் மோசூல் நகரை சென்றடைந்தது. அங்கே இவர்கள் பூமிக்கு அடியில் இருந்த ஒரு கிடங்கில் சிறை வைக்கப்பட்டார்கள். தாங்கள் எங்கே இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்ற தகவல்களை எல்லாம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு அந்த செவிலியர்கள் பதற்றத்தோடு செல்போன் மூலமாக சொல்ல... அவர்கள் தூதரக அதிகாரிகளுக்குச் சொன்னார்கள். இந்த செவிலியர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், கேரள முதல்வர் உம்மன்சாண்டி சீரியஸாக களத்தில் இறங்கினார். உடனடியாக டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தார்.

உதவிக்கு வந்த மாஜி அதிகாரிகள்!

அபுபக்கர் அலி பாக்தாதியின் தலைமையிலான ஐசஸ் என்ற இயக்கத்துடன் பேசுவதாக இருந்தால், யாருடன் பேசுவது என்பதே முதலில் இவர்களுக்குப் பிடிபடவில்லை. அந்த இயக்கத்தின் தலைவரை எப்படித் தொடர்புகொள்வது, யார் சொன்னால் அவர்கள் கேட்பார்கள், அவர்களுக்கு என்ன தேவை, எதற்காக செவிலியர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்ற ஆயிரம் கேள்விகளுக்கும் விடை தேடினார்கள். சதாம் உசேன் காலத்தில் ஈராக்கில் பணியாற்றிய இந்திய அதிகாரிகள் உடனடியாகக் களம் இறக்கப்பட்டார்கள். அந்த நாட்டில் நிறுவனங்களை நடத்திவரும் நம் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய தாங்களாகவே முன்வந்தார்கள். செவிலியர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் மோசூல் நகரைச் சுற்றியிருக்கும் ஜோர்டான், சிரியா, துருக்கி உள்ளிட்ட ஆறு நாடுகளின் அமைச்சர்களோடு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார். இந்த தீவிரவாதிகளிடம் இருந்து பலமுறை பிணைக்கைதிகளை மீட்ட முன் அனுபவம் கொண்ட அந்த நாட்டின் அமைச்சர்கள் கொடுத்த வழிகாட்டுதல்கள், இந்தச் சிக்கலை உடனடியாகப் புரிந்துகொள்ள சுஷ்மா ஸ்வராஜுக்கு உதவியது.

சதாம் காலத்தில் ஈராக்கில் பணியாற்றிய சுரேஷ் ரெட்டி, இந்த ஆபரேஷனுக்கு முழுமையாகப் பயன்பட்டார். சதாம் உசேனின் உறவினரான அல்-தூரி என்பரை சுரேஷ் ரெட்டி உடனடியாக தொடர்புகொண்டார். சதாம் குடும்பத்துடன் திருமண பந்தம் செய்துகொண்டவர் இந்த அல்-தூரி. இவருக்கும் சுரேஷ் ரெட்டிக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும்தான் மொத்த பேச்சுவார்த்தையையும் நடத்தியிருக்கிறார்கள். பிரச்னைக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அவர்களை விடுவிக்க தீவிரவாதிகளும் முன்வந்தார்கள்.

ஆனால் சிக்கல் அதன் பிறகுதான் இன்னும் கூடியது!

'தரையிறங்க அனுமதிக்க மாட்டோம்!’

இந்தியா சார்பில் ஏர் இந்தியா விமானம் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதில் செவிலியர்களை ஏற்றி அனுப்பிவிட வேண்டும் என்றும் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், செவிலியர்களை மீட்க மோசூல் நகரை அடுத்துள்ள எர்பில் நகருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு அங்கே தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தில் இருந்த கேரள அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரி, கேரள முதல்வருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தத் தகவல் சுஷ்மா ஸ்வராஜுக்கு சொல்லப்பட்டது. அவர் மீண்டும் பேச்சுவார்த்தை குழுவுக்குத் தகவல் தந்தார். மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. நேரம் அதிகமாகிக்கொண்டே போனதால், அந்த விமானம், இந்தியாவை நோக்கி திரும்பிவிட்டது. கடைசியாக நடுவானில் வந்த உத்தரவுப்படி விமானம் மீண்டும் எர்பில் நகருக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது புதிதாக இன்னொரு சிக்கல்.

'எர்பில் நகருக்கு நாங்கள் வரமுடியாது. எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மோசூல் நகருக்கு வந்து செவிலியர்கள் மீட்டுக்கொண்டு போங்கள்’ என்று இப்போது தீவிரவாதிகள் புதிய நிபந்தனை போட்டார்கள். எர்பில் நகருக்கு தீவிரவாதிகள் வந்தால், அவர்களை அரசு படைகள் தாக்கலாம் என்ற அச்சத்தில் இந்த நிபந்தனை போட்டார்கள். அப்படியானால், எர்பில் நகரில் இருந்து மோசூல் நகருக்கு யார் செல்வது, அவர்களை அழைத்துவருவது, சொன்னது மாதிரி அவர்கள் விடுவிப்பார்களா என்ற அச்சம் ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில், நமது அதிகாரிகளே எர்பில் நகரில் இருந்து மோசூல் சென்றார்கள். செவிலியர்களை மீட்டுக்கொண்டு எர்பில் விமான நிலையம் வந்தனர். 'வானில் நிறைய நேரம் வட்டமடித்ததால், விமானத்தில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிட்டது’ என்று அப்போது விமானிகள் சொன்னார்கள். 'எரிபொருள் இங்கே கிடையாது’ என்று விமான நிலையத்தினர் மறுத்தார்கள். மீண்டும் டெலிபோன்கள் அலறின. இந்தியாவில் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு வழியாக அவர்கள் எரிபொருள் கொடுக்கச் சம்மதித்தனர். அதற்கான பணம் அப்போது நம் அதிகாரிகளிடம் இல்லை. பாக்தாத் நகரில் வாழும் நல்லெண்ணம் படைத்த இந்தியர்கள் உதவியால் எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானம் புறப்பட்டது.

அப்பாடா!

- வேல்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு