'ஜி.எஸ்.டி பெயரில் கொள்ளை அடிக்காதே'- மோடிக்கு எதிராக கொந்தளித்த கம்யூனிஸ்டுகள்

ஜி.எஸ்.டி வரி மற்றும் இந்தித் திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “மோடி எங்கே போனாய்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பியதுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

tasmac protest

 

“இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்” எனும் முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி விழிப்புஉணர்வு உண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்தப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்களான முத்தரசன், தா.பாண்டியன் உள்ளிட்டோர், மத்திய அரசின் கட்டாய இந்தித் திணிப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக 25-ம் தேதி தமிழகம் தழுவிய  மறியல்போராட்டம் நடக்கும் என அறிவித்தார்கள்.

அதன்படி, இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சாலை அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பத்மாவதி மற்றும் மாவட்ட நிர்வாகி சுரேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் திருச்சி மாவட்டத் தரைக்கடை சிறுகடைகள் வியபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசே! ஜி.எஸ்.டி எனும் பெயரில் கொள்ளை அடிக்காதே!, சிறு விவசாயிகளை நசுக்காதே!, மோடிக்கு எதிரான போராட்டம், இது மக்களுக்கான போராட்டம், எங்கே போனாய் எங்கே போனாய்! மோடி எங்கே போனாய்” எனவும், மேலும் ஜி.எஸ்.டி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக முழங்கியவர்கள், சாலையில் அமர்ந்து மறியல் செய்ய உட்கார்ந்தனர்.

இதையடுத்து, அங்கு குவிக்கப்பட்டிருந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், போராட்டக்காரர்களைத் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒருக்கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு உண்டாகும் சூழல் நிலவியது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.

 

 


இதேபோல் திருச்சி திருவெறும்பூர்,சோமரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை என திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதேபோல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்யூனிஸ்ட்டுகளின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் புதிய பரபரப்பு உண்டானது.

படங்கள்/வீடியோ: ப.தினேஷ்குமார் (மாணவப் பத்திரிக்கையாளர்)

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!