Published:Updated:

''சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!''

சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

''சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல்  கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே தவிர இந்தச் செலவுகளுக்கும் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது''- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எடுத்துவைத்த இறுதி வாதம் இது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் குமாருடன் அவருக்கான பாயின்ட்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். குமாரின் வாதம் முடிந்ததும் சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் தன்னுடைய இறுதி வாதத்தை தொடங்க இருப்பதால் அவர் அதற்கான ஆயத்தப் பணிகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதில்லை. இந்த வழக்கின் போக்கை கவனித்து வந்த தி.மு.க வழக்கறிஞர்களும் இப்போது நீதிமன்றத்துக்கு வருவதே இல்லை. 17 நாட்களைக் கடந்தும் தொடரும் வழக்கறிஞர் குமாரின் வாதத்தில் இருந்து....

''சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!''

பாஸ்கரன் கொடுத்த வெள்ளித்தட்டு!

''சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் 7.9.1995-ல் திருமணம் நடந்தது. அன்று மணமக்களை வாழ்த்துவதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த என் மனுதாரர் ஜெயலலிதா அழைக்கப்பட்டார். மணமக்களை வாழ்த்த அவர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க சென்னை எம்.ஆர்.சி நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்ததோடு சில இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999-ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, 'எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய சாப்பாடு, மினரல் வாட்டர், தாம்பூலத்துக்கான செலவுகளை சிலர் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய வி.ஐ.பி-களுக்கு 100 வெள்ளித்தட்டுகளை சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கிக் கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.''

''சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!''

ஏ.ஆர்.ரஹ்மான் பணம் வாங்கவில்லை!

''திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியும், மாண்டலின் சீனிவாசனின் சங்கீத நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சிவாஜி குடும்பத்து விழா என்பதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை என்று சாட்சியளித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு ராம்குமார் 7,000 ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். இப்படி திருமணத்துக்குப் பலரும் செலவு செய்திருக்க... அத்தனையும் என் கட்சிக்காரர் ஜெயலலிதா செய்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது.''

''சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?''

''வி.என்.சுகாதரனின் திருமணத்துக்கு 6 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தவறானது. திருமணத்துக்கான செலவுகளை யார் செய்தது என்பதை கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்டுள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத் திருமணம் என்பதால் அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் முழுவதும் இந்தத் திருமணத்துக்காக செலவு செய்துள்ளனர். இதை அவர்கள் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்துள்ளனர்'' என்று குமார் சொல்லிக்கொண்டு போக... நீதிபதி குன்ஹா குறுக்கிட்டார். ''இந்தத் திருமணம் நடைப்பெற்ற சமயத்தில் சிவாஜி உயிரோடு இருந்தாரா?'' என்று கேட்டதும், குமார் சற்று தயக்கத்துடன் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ''சிவாஜி உயிரோடு இருந்தார்'' என்றார். நீதிபதி, ''வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?'' என்று கேட்டார். அதற்கு குமார், ''இல்லை!'' என்று சொன்னார்.

''நகைகளை வைக்க தலைமை கழகத்தில் இடம் இல்லை!''

''என் கட்சிக்காரர் ஜெயலலிதாவிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 871 விதமான தங்க ஆபரணங்கள் இருந்தது.  1987-88-ல் 7 கிலோ 56 கிராமும், 1988-89-ல் 1 கிலோ 26 கிராமும், 1989-90-ல் 4 கிலோ 312 கிராமும், 1990-91-ல் 8 கிலோ 385 கிராமும் வாங்கியிருந்தார். மொத்தம் 4 ஆண்டுகளில் 21 கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். ஆக, இந்த நகைகள் அனைத்தும் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதற்கு முறையாக வருமான வரியும் கட்டியுள்ளார்.

வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, 30.3.1991-ல் 1 கிலோ 931 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். இவையும் வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்டது. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 468 வகையான நகைகளில் 1992-ம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தங்க படகும், செங்கோட்டையன் இரட்டை இலையும் , கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு என 27 பேர் தங்க மாம்பழம், தங்கவேல் என்பவர் தங்க பேனா என 27 வகையான நகைகள் கொடுத்தார்கள். இதன் மதிப்பு 3 கிலோ 365 கிராம். இந்த நகைகள் அனைத்தும் கட்சிக்கு சொந்தமானது. தலைமைக் கழகத்தில் வைக்க இடம் இல்லை என்பதால் ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தார்கள். எனவே இதையும் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

சுதாகரனின் திருமணத்துக்கு ஜெயலலிதா பரிசாக 11,94,381.50 ரூபாய் மதிப்புள்ள 777 கிராம் தங்கம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர்கள் அதைக் கைப்பற்றவில்லை. கோர்ட்டில் குறியீடு செய்யவும் இல்லை. அதனால் இந்த வழக்கில் அந்தத் தொகையையும் கணக்கில்கொள்ளக் கூடாது. ஆக மொத்தத்தில் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே 27 கிலோ 588 கிராம் தங்க நகைகள் இருந்தது என்பது தவறானது.''

''1250 கிலோ வெள்ளி ஜெயலலிதா வைத்திருந்தார்!''

''போயஸ் கார்டனின் 1116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியதாக கோர்ட்டில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 48,80,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் என் மனுதாரரிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். வருமானவரி தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியுள்ளது'' என்று குமார் சொல்ல... நீதிபதி குறுக்கிட்டு, ''அந்த உத்தரவை வைத்து இந்த வழக்குக்குத் தடை வாங்கி இருக்கலாமே?'' என்று கேட்க, ''அந்த காலகட்டத்தில் தடை வாங்கவில்லை'' என்றார் குமார்.

''விவசாயம் செய்தார் ஜெயலலிதா!''

''நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில்  பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தேங்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங்கள் விவசாயம் செய்ததில் 1992-93-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94-ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95- ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96-ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97-ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்'' என்று வாதிட்டார்.

அத்தனையும் உன்னிப்பாகக் கவனித்து குறித்துக்கொண்டார் நீதிபதி குன்ஹா. குமார் விவாதம் இன்னும் தொடர்கிறது!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு