Published:Updated:

வாங்க சார் என்ன வேணும்?

வாங்க சார் என்ன வேணும்?

வாங்க சார் என்ன வேணும்?

ஜூலை மாதம்... புதிய மாணவப் பத்திரிக்கையாளர்களின் வருகையால் விகடன் களைகட்டும். இந்த வருடம் இன்னும் ஸ்பெஷல். மாணவப் பத்திரிகையாளர் திட்ட வரலாற்றில் அதிகப்படியாக இந்த ஆண்டில் 76 மாணவர்கள் தேர்வாகியிருந்தனர். அவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 19, 20-ம் தேதிகளில் சென்னை மீனாட்சி திருமண மண்டபத்தில் அரங்கேறியது.

விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் அறிமுக உரையுடன் முகாம் தொடங்கியது. கடந்த ஆண்டு மாணவர் திட்டத்தில் பங்கேற்றவர்களில் ர.சதானந்த், தி.குமரகுருபரன், உ.சிவராமன். ஞா.சுதாகர், ந.ஆஷிகா, க.பாலாஜி, கு.கார்முகில்வண்ணன் ஆகியோர் தலைசிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு வருட பயிற்சி காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை அவர்கள் தங்கள் ஜூனியர்களுக்கு எடுத்துரைத்தனர்.

வாங்க சார் என்ன வேணும்?

சதானந்த்: ''நேற்று வரை நீங்க எடுத்த புகைப்படங்களை உங்க வீட்டுல இருந்தவங்க மட்டும்தான் பார்த்தாங்க. நாளையில இருந்து கருணாநிதியோ ஜெயலலிதாவோ பார்ப்பாங்க. போன வருஷ கேம்ப்-ல கலந்துகிட்டப்ப இப்படி சொல்லி அனுப்பினாங்க. அதை மனசுல வைச்சுட்டு கூடுதல் கவனத்தோட படம் எடுத்தேன். ஜெயிச்சேன்!''

குமரகுருபரன்: ''புகைப்படக்காரர்களுக்குக் காத்திருத்தல் ரொம்ப முக்கியம். 'அம்மா குடிநீர்’ அறிமுகம் செய்யப்பட்ட சமயம். அது விற்பனைக்கு வர்றதுக்கு முன்னாடியே படம் எடுத்திடணும்னு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போயிருந்தேன். எவ்வளவோ கெஞ்சுக் கேட்டும், பணம் தர்றோம்னு பேரம் பேசியும் அதை வெச்சிருந்த பணியாளர் கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் அந்த இடத்திலேயே காத்திருந்தேன். கடைசியில ராத்திரி ஒரு மணிக்கு பரிதாபப்பட்டு, பாட்டிலை போட்டோ எடுக்க சம்மதிச்சார். அது ஜூ.வி-யில அட்டைப்படமா வந்தது.''

உ.சிவராமன்: ''சுட்டி விகடனுக்காக குழந்தைகளைப் பேட்டி எடுக்கப் போயிருந்தேன். அவங்ககிட்ட பேசினதுல எனக்குத் தேவையான விவரம் கிடைக்கலை. அப்புறமா அவங்களப் பத்தின தகவல்களைத் தெரிஞ்சுகிட்டு, அதை வெச்சி அவங்ககிட்ட பேசினேன். உற்சாகமா பல தகவல்களை பகிர்ந்துகிட்டாங்க. அதனால, யாரை சந்திக்கப் போறதா இருந்தாலும், அவங்களைப் பத்தின சில அடிப்படையான தகவல்களைத் தெரிஞ்சுகிட்டுப் போங்க.''

ஞா.சுதாகர்: ''சமூக வலைதளங்கள்லகூட நிறைய செய்திகள் கிடைக்கும். ஒருநாள் ஃபேஸ்புக்ல உலவிகிட்டு இருந்தப்ப 'வீழ்வேனென்று நினைத்தாயோ?’ன்னு பாரதியார் பாடல் வரிகள் பொருந்திய டி-சர்ட்டை ஒருத்தர் போஸ்ட் பண்ணியிருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமா இருக்குதுன்னு என்ன ஏதுன்னு தேடினேன். அந்த டி-சர்ட் தயாரிக்கிறவங்களைப் பற்றி விரிவா எழுதினேன். நாணயம் விகடன்ல நாலு பக்க மேட்டரா வந்தது.''

ந.ஆஷிகா: ''எதுக்குமே லாயக்கு இல்லாம போயிடுவேனோன்னு பயந்துகிட்டு இருந்தேன். என்னாலும் சாதிக்க முடியும்னு நம்பிக்கை கொடுத்தது விகடன்தான். ஒரு ஐடியா தோணுச்சுன்னா அதை உடனடியா செயல்படுத்திடணும். காலம் தாழ்த்தக் கூடாது. ஏன்னா, நீங்க யோசிக்கறதுக்குள்ள இன்னொருத்தர் அதை செஞ்சு முடிச்சிருப்பார்.''

க.பாலாஜி: ''ஒரு செய்தி விஷயமா போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க யாரையோ செமத்தியா அடிச்சுகிட்டு இருந்தார் இன்ஸ்பெக்டர். பயந்து போய் வெளிய போறதுக்காக திரும்பினேன். என்னைப் பார்த்துட்டு, 'யாருடா நீ? என்னடா வேணும்?’னு கேட்டார். எனக்கு என்ன பேசுறதுன்னு புரியலை. டக்குன்னு விகடன் ஐ.டி கார்டை எடுத்து நீட்டிட்டேன். அதை பார்த்தவர் டக்குனு டோன் மாறி, 'வாங்க சார். என்ன வேணும்?’னு கேட்டார். இப்படி எந்த  இடத்துக்குப் போனாலும் விகடனுக்கு மரியாதை கிடைக்கும். அதனால, உங்க பயத்தை விட்டுட்டு தைரியமா எல்லா இடத்துக்கும் போங்க!''

கு.கார்முகில்வண்ணன்: ''எனக்குப் பொண்ணுங்ககிட்ட பேசறதுன்னா பயம். ரொம்பவே தயங்குவேன். மாணவ நிருபரானதும் அவள் விகடன் 'காலேஜ் கேம்பஸ்’ பகுதிக்காக பெண்கள்கிட்ட பேச வேண்டிய கட்டாயம். முதல் அசைன்மென்ட் போகும்போது கை, காலெல்லாம் உதற... பயந்துகிட்டேதான் பேசினேன். இப்ப அந்தத் தயக்கமெல்லாம் போயிடுச்சு. தேங்ஸ் டு விகடன்!''

இதோ புதிய உத்வேகத்துடன் புறப்பட்டுவிட்டனர் மாணவ நிருபர்கள். வாழ்த்தி வரவேற்பு தாருங்கள் வாசகர்களே!

- ஆர்.லோகநாதன்

படம்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு