Published:Updated:

விமானத்தை வீழ்த்தியது யார்?

விமானத்தை வீழ்த்தியது யார்?

பிரீமியம் ஸ்டோரி
விமானத்தை வீழ்த்தியது யார்?

மலேசியாவுக்கு இது கெட்ட காலம் என்று சொல்வதைவிட உலக மக்களுக்கு கெட்ட நேரம் இது. சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன மலேசிய விமானத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து இன்னொரு சோகம் மலேசியா விமானத்துக்கே நடந்துள்ளது.

'டட்ச்’ நாடு என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து கடந்த வியாழக்கிழமை மதியம் நண்பகல் 12.15 மணிக்கு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட விபி17 விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பலரும் ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, மலேஷியா போன்ற நாடுகளில் பாதுகாப்பான குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்கள். 'உலக வரைபடத்தில் உக்ரைன் நாடு எங்கே இருக்கிறது? அந்நாட்டின் அரசு படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் ஏன் ஓயாமல் போர் நடந்து வருகிறது? இப்போரில் அமெரிக்கா உட்பட மேலை நாடுகளின் நிலைப்பாடு என்ன? இந்தப் போரில் தாமும் தம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் சக பயணிகள் 297 பேரின் உயிர்களும் எப்படி பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன?’ என்று அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட எவருக்கும் துளிகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விமானத்தை வீழ்த்தியது யார்?

சிறுவர்கள் வீடியோ கேம் விளையாட... பெரியவர்கள் லேப்-டாப்பிலோ ஐபேடிலோ ஏதோ டைப் செய்துகொண்டிருக்க... சில தம்பதியர் தங்கள் தனிமையை இனிமையாக அனுபவித்துக் கொண்டிருக்க... ஒரு சிலர் கண்ணயர்ந்து களைப்பை போக்கிக்கொண்டிருக்க... உக்ரைன் நாட்டின் வான்வெளியில் சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அவர்களது விமானத்தை மின்னல் என பறந்து வந்த ஓர் ஏவுகணை தாக்க... நிலைகுலைந்த அவர்களது விமானம் நடு வானில் மத்தாப்பாய் சிதறி, சூரியகாந்தி தோட்டங்களின் மீது உயிரற்ற உடல்களாய் கருகிப்போய் சிதறினார்கள்.

விமானம் வீழ்ந்தது உக்ரைன் என்றாலும் வீழ்ந்த பகுதி - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி. ரஷ்ய எல்லையில் இருந்து வெறும் 40 கிலோ மீட்டர்களே தள்ளியிருக்கும் பிரதேசம். ஆனாலும், போர் நடக்கும் பூமி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கும் பக்கா விவசாய கிராமம் என்பதால், அது பார்வைக்கு பூலோக சொர்க்கமாகவே இருந்தது. டீசல் புகை, ஹாரன் சப்தம், நகர பரபரப்பு என்று எந்தக் கேடுகளும் இல்லாமல் தன் சூரியகாந்தி தோட்டத்துக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை அமைத்து அங்கே வாழ்ந்து வந்த 65 வயது மூதாட்டி ஈரினா திப்புநோவா, 'உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று ஒரு பெரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வானத்தைப் பார்க்க... விமானத்தின் பாகங்களும், எரிந்துகொண்டிருந்த நிலையில் வீழ்ந்த பெட்டி படுக்கைகளையும் பார்த்து பதறிப்போய் வீட்டுக்குள் ஓடி கதவைத் தாழிட்டுக் கொண்டார். அப்போது அவரது வீட்டுக் கூரையில் ஏதோ ஒன்று பெரும் சத்தத்தோடு விழுந்தது. அது ஒரு பெண்ணின் உடல்!

விமானத்தை வீழ்த்தியது யார்?

ஈரினாவின் வீட்டைச் சுற்றி சுமார் 35 கிலோமீட்டர் விட்டத்துக்கு மனித உடல்களும், எரியும் நிலையில் விமானத்தின் பாகங்களும் சிதறி விழுந்து கொழுந்துவிட்டு எரிய... சில மணி நேரத்துக்கெல்லாம் அங்கே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விதவிதமான வாகனங்களில் வந்து பிணங்களையும், விமான பாகங்களையும், சிதறிக்கிடந்த பெட்டிப் படுக்கைகளையும் கிடைக்க கிடைக்க அள்ளிப்போட்டுக் கொண்டு சென்றபடி இருக்கின்றனர்.

''காற்றை கிழிக்கும் வேகத்தில் நடுவானின் செல்லும் விமானத்தை தரையிலிருந்து ஏவுகணையை செலுத்தி அழிப்பதற்கு மிக மிகத் துல்லியமான தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களும் பயிற்சிபெற்ற வீரர்களும் தேவை. ஆகவே இந்தத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்க சாத்தியமே இல்லை. ரஷ்ய ராணுவம்தான் இதைச் செய்திருக்க வேண்டும்'' என்று உக்ரைன்,  ரஷ்யாவைக் குற்றம் சுமத்தியிருக்கிறது.

தங்களின் குற்றசாட்டுக்கு ஆதாரமாக உக்ரைன் அரசு ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டிருக்கிறது. அதில் ஒருவர், 'நாங்கள் ஒரு விமானத்தை வீழ்த்திவிட்டோம். ஆனால், அது நாம் குறிவைத்த விமானம் அல்ல. பயணிகள் விமானம் என்று நினைக்கிறேன்’ என்று சொல்ல, எதிர்முனையில் பேசும், ரஷ்ய ராணுவ அதிகாரி, 'எதுவாக இருந்தாலும் அது நமக்கு வெற்றிதான்’ என்று சொல்லி ஏவுகணையை ஏவியவரை பாராட்டும் வார்த்தைகள் பதிவாகி இருக்கின்றன.

விமானத்தை வீழ்த்தியது யார்?

''கத்துக்குட்டிகளை எல்லாம் ராணுவத்தில் சேர்த்திருப்பதால் உக்ரைன் ராணுவம் எத்தனையோ முறை குடியிருப்பு பகுதிகளிலேயே தவறுதலாக குண்டு வீசி இருக்கிறது. அதனால் இந்தத் தவறையும் அதுதான் செய்திருக்க வேண்டும்'' என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் ராணுவத்தின் மீது பழிப்போட்டிருக்கிறார்கள். ரஷ்யாவும் கிளர்ச்சியாளர்கள் எடுத்திருக்கும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருப்பதோடு மலேசிய விமானம் வந்த அதே வான் வழிப்பாதையில்தான் தங்கள் அதிபர் புதின் வரவிருந்தார். அதனால் இந்த ஏவுகணை புதினுக்கு வைக்கப்பட்ட குறியோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது’ என்று ரஷ்யா இதை மேலும் அரசியலாக்கப் பார்க்க... ''இத்தனை உயிர்களை வைத்து அரசியல் நடத்துவதை என்னால் ஏற்க முடியாது. இதற்கு ஒருபோதும் என்னால் துணைபோக முடியாது!’ என்று சொல்லி ரஷ்ய தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு பெண் நிருபர் தன் வேலையையே உதறியிருக்கிறார்.

'உக்ரைன் நாட்டின் விவகாரங்களில் தலையிடாமல் தள்ளிநில்!’ என்று ரஷ்யாவை எச்சரிக்க இத்தனை நாட்களாக சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் விபி17 விமான விபத்து இப்போது வகையாகச் சிக்கியிருக்கிறது.

- வேல்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு