பெரும்பான்மையை நிரூபிப்பாரா நிதிஷ் குமார்?

பீகார் சட்டமன்றத்தில் அதிரடி திருப்பங்களுடன் ஒவ்வொரு நொடியும் கடக்கிறது. 

நிதிஷ் குமார்


கடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு மெகா கூட்டணி  அமைத்து, அதில் வெற்றியும் கண்டார் நிதிஷ்குமார். அதன்பிறகு, லாலு பிரசாத் யாதவ் மகன் மீது கூறப்பட்ட ஊழல் புகாரில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது. அதன் பின்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க-வின் வேட்பாளைரை ஜனதா தளம் ஆதரிக்கும் என்று அறிவித்தார் நிதிஷ். எதிர்க்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போதே இவ்வாறு அறிவித்தது மேலும் விரிசலை உண்டாகியது.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான உறவை முடித்துக்கொள்ள விரும்பிய நிதிஷ், தனது பதவியை ராஜினாமாசெய்தார். அடுத்த நாளே பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து, மீண்டும் முதல்வரானார் நிதிஷ். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஆளுநர், இரண்டு நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். 

இன்று, பீகார் சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மை பலத்தை  நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 122  வாக்குகள் தேவை.  132 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு உள்ளது என்று கூறப்பட்டாலும், நிதிஷ்குமாரின் இந்த திடீர் முடிவு கட்சியினரிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாம். எம்.எல்.ஏ-க்களில் சிலர்,   இந்த முடிவுகுறித்து நிதிஷ் குமார் எங்களிடம் ஆலோசிக்கவில்லை என தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆயினும் யாரும் இதுவரை அணிமாறி வாக்களிப்பதாகத் தெரிவிக்கவில்லை. 

அதனால் நிதிஷ்குமார் தனது பலத்தை இன்று சட்டசபையில் நிரூபித்துக்காட்டுவார் என்றே தெரிகிறது. 
இதற்கிடையில், லாலு பிரசாத் யாதவின் மகன், நாங்கள்தான் தனிக் கட்சியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி. அதனால், ஆளுநர் எங்களைத்தான் முதலில் அழைத்திருக்க வேண்டும்  என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!