Published:Updated:

“தமிழக அரசு, கமல்ஹாசனை புண்படுத்தியிருக்கிறது!” - சொல்கிறார் நடிகர் விஜயகுமார்

“தமிழக அரசு, கமல்ஹாசனை புண்படுத்தியிருக்கிறது!” - சொல்கிறார் நடிகர் விஜயகுமார்
“தமிழக அரசு, கமல்ஹாசனை புண்படுத்தியிருக்கிறது!” - சொல்கிறார் நடிகர் விஜயகுமார்

2016 சட்டசபை தேர்தலின்போது, தமிழக பி.ஜே.பி-யில் தன்னை இணைத்துக்கொண்டதோடு, தேர்தல் பிரசாரங்களிலும் வலம் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் விஜயகுமார். அதன்பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பி.ஜே.பி வேட்பாளர் தேர்வில், விஜயகுமாரின் பெயரும் அடிபட்டது. ஆனாலும் வாய்ப்பு கைநழுவிப்போனது.
இப்போது ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து ஹைட்ரோ கார்பன், ஜி.எஸ்.டி, நீட், மாட்டிறைச்சி... என்று அடுத்தடுத்து பி.ஜே.பி பட்டாசு வெடித்துவரும் வேளையில், 'நாட்டாமை' எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தால் எப்படி? இதோ நமது கேள்விகளுக்கு இங்கே பதில் அளிக்கிறார் நடிகர் விஜயகுமார்.

''சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சியில் ஈடுபாடு காட்டவில்லையே... தமிழக பி.ஜே.பி-யில் தற்போது எந்தப் பதவியில் இருக்கிறீர்கள்?''

''நாட்டின் நிலைமையையும் கட்சியின் கோட்பாடுகள் - குறிக்கோள்களையும் தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் ஒவ்வொரு குடிமகனின் கடமை (?). 

அரசியல் ரீதியாகப் பார்த்தால், தேர்தல் நேரத்தில்தான் இதனைப் பேச வேண்டுமே தவிர, மீத நேரங்களில் பேசுவது நேரத்தையும் காலத்தையும் வீணாக்குவதாகும். தமிழக பி.ஜே.பி-யில் நானும் ஓர் அங்கத்தினராக இருக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி பொறுப்புகள் எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. பொறுப்புகள் குறித்து நானும் கவலைப்படவில்லை''. (சிரிக்கிறார்)

''ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், நீட் விவகாரங்களில், மத்திய பி.ஜே.பி குறித்து தமிழகத்தில் நிலவிவரும் எதிர்மறை கருத்துகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?''

''மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்தான் சட்டங்களை இயற்றமுடியும். ஒவ்வொரு மாநிலத்துக்குமான தனித்தனிச் சட்டங்களை இயற்றமுடியாது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுப் பெறுவதென்பது அங்கே ஆட்சி வகிக்கும் கட்சிகளைப் பொறுத்தது. அதாவது, ஒரு குடும்பத்தினர் உணவு விடுதிக்குச் சென்றால்கூட, ஒருவருக்கு சைவம் பிடிக்கும், இன்னொருவருக்கு அசைவம் பிடிக்கும். அவரவருக்கு என்ன பிடிக்கிறதோ அதனை ஆர்டர் செய்து சாப்பிடவேண்டும்.''

''100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், 'மாட்டிறைச்சிக்குத் தடை' விதிப்பது சரிதானா?''

''மாடுகளை வெட்டக்கூடாது, வதை செய்யக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்து (!). 'எங்கள் மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் அதனால், இங்கே மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது' என்று சம்பந்தப்பட்ட மாநிலமே கேட்டுப்பெறுவது அவர்களது கடமை.''

''நீட் தேர்வினால், கிராமப்புற மாணவர்களது மருத்துவப் படிப்பு பாதிக்கப்படுகிறதே...?''

''ஏற்கெனவே சொன்ன பதில்தான். நீட் தேர்வுக்கு எங்கள் மாணவர்கள் இன்னும் தயாராகவில்லை; திடீரென்று நீட் தேர்வை புகுத்துவது பிரச்னையாக இருக்கிறது. எனவே எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுப் பெறுவதில் தவறே கிடையாது.''

''நீட் தேர்விலிருந்து விலக்களிக்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல், மத்திய பி.ஜே.பி அரசு காலதாமதம் செய்துவருகிறதே...?''

''ஒரு கடிதம் எழுதினாலோ, ஒப்புதல் பெறவேண்டி தீர்மானத்தை அனுப்பினாலோ அது உரிய இடத்துக்குப் போய் சேர்ந்துவிட்டதா என்று கண்காணிக்கவேண்டியது மாநில அரசின் கடமைதானே...? சட்ட திட்டங்களை இயற்றுவது மட்டும் முக்கியமல்ல.... அதனைப் பின்பற்றுவதும் ரொம்ப முக்கியம்!''

''தமிழக அரசே, மத்திய பி.ஜே.பி அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே...?''

''தமிழ்நாடு மட்டுமல்ல... எல்லா மாநிலங்களுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நீங்கள் சொல்வதுபோல், குற்றச்சாட்டாகக் கூறினால், அதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா?''

''நடிகர் கமல்ஹாசன், அ.தி.மு.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறாரே... திரைத்துறையைச் சேர்ந்தவர் என்ற வகையில் அவரது கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் குற்றச்சாட்டுகள் எழும். இப்படியான தவறுகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டவும் செய்யலாம். அதேசமயம் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தையும் கொடுத்து நிரூபிக்க வேண்டும். ஆதாரத்தை திரட்ட முடியவில்லை என்றாலும்கூட, அங்கே ஊழல் நடைபெறவில்லை என்று அர்த்தமல்ல.... உதாரணத்துக்கு ஒரு கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சரியான சாட்சியங்கள் இல்லையென்றால், வழக்கில் இருந்து அவரை விடுவித்து, வழக்கையும் முடித்துவிடுகிறார்கள். அப்படியென்றால், உண்மையிலேயே அவரைக் கொலை செய்தது யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே பதில் இல்லை....''

''அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டை நீங்கள் மறுக்கிறீர்களா...?''

''நான் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது. அவ்வளவுதான்.''

''மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசனின் கூற்றை ஆதரிக்கிறார். ஆனால், தமிழிசை சவுந்தரராஜனோ எதிர்க்கிறார். இது என்ன நிலைப்பாடு?''

''கருத்தை சொல்வது கமல்ஹாசன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழக அரசு. ஆக, இது அவர்களது பிரச்னை. இதில் நான் புதிதாக ஒரு கருத்து சொல்லி பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை.''

''தமிழக அரசைக் கடுமையாக எதிர்க்கும் கமல்ஹாசன், மத்திய பி.ஜே.பி அரசின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறதே?''

''கமல்ஹாசன் தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறார். அதனால், தமிழக அரசு குறித்து கேள்வி எழுப்புகிறார். தமிழக அரசு ஏதோ ஒருவகையில், கமல்ஹாசனைப் புண்படுத்தியிருக்கிறது. அதனால்தான், பாதிக்கப்பட்ட அவர் 'தவறு நடக்கிறது; இது மோசம்' என்றெல்லாம் சொல்கிறார். 
இந்திய அரசியல் பற்றி அவர் இதுவரையிலும் பேசவில்லை. அப்படிப் பேசினால், ஒருவேளை சொல்வாரோ என்னமோ... தெரியவில்லை.''