Published:Updated:

நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம் தான்!

சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம்..

சொத்துக்குவிப்பு வழக்கில் இது சசிகலா தரப்பிலான வாதங்கள் வைக்கப்படும் நேரம். அவரின் வழக்கறிஞர் மணிசங்கர், தன் இறுதி வாதத்தை எடுத்து வைத்து வருகிறார். இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அமீத் தேசாய். அவர்  நீதிபதி

நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம் தான்!

குன்ஹாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், ''இந்த வழக்கில் சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதத்தை நான் எடுத்து வைக்க வந்திருக்கிறேன். எனக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஜூலை 30, 31 ஆகிய இரண்டு தினங்கள் வாதிட அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

அதற்கு நீதிபதி குன்ஹா, ''தற்போது சசிகலாவின் வாதத்தை வழக்கறிஞர் மணிசங்கர் நடத்தி வருகிறார். அவர் ஒப்புக்கொண்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை'' என்றார். உடனே மணிசங்கர், ''எனக்கு ஆட்சேபனை இல்லை'' என்றதை அடுத்து, இரு நாட்கள் வாதத்தை வைத்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அமீத் தேசாய்.

சுதாகரன், இளவரசி ஆகிய இருவரின் வழக்கறிஞரான அமீத் தேசாய் வாதத்தில் இருந்து...

பினாமிகள் அல்ல!

''இந்த வழக்கு உண்மையில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததான வழக்கு அல்ல. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துக்காக பொது வாழ்க்கையில் உள்ள ஜெயலலிதாவையும் அவரது நண்பர்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு.  ஜெயலலிதா,  சசிகலா,  சுதாகரன்,  இளவரசி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் போட்ட தமிழக ஊழல் தடுப்பு போலீஸார், எஃப்.ஐ.ஆர் போட்டது முதல்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை ஊழல் தடுப்புச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவசரகதியில் விதிமுறைகள் மீறி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயகம் மலர்ந்த பிறகு 1980-ம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெரும்பாலும் தொழில் தொடங்கி நடத்தவில்லை. 1980-க்குப் பிறகு மக்கள் பிரதி

நிதிகள், ஆட்சிப் பொறுப்பில் உள்ள பொது ஊழியர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அதுபோல, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து, அதை மற்ற குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி மூலம் பல கம்பெனிகளில் பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளதாக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆவணங்களையும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. சாட்சியங்களும் உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் இவர்கள் ஜெயலலிதாவின் நண்பர்கள், பினாமிகளும் அல்ல.''

நல்ல நண்பர்களும் குடும்பமே!

''வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளைச் சேர்த்து இருந்தால், ஊழல் தடுப்பு போலீஸார் அதுகுறித்து அவரிடமே விசாரித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவருடைய நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக என் மனுதாரர்கள் சுதாகரன், இளவரசியை குற்றவாளிகளாக இந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரருக்கும் ரத்த சம்பந்தமான உறவோ, தொழில் தொடர்பான பார்ட்னர்ஷிப்போ கிடையாது. இவர்களுக்கு இடையே பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் சேர்ந்து இருப்பது மட்டுமே குடும்பம் கிடையாது. நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம்தான். அப்படித்தான் ஜெயலலிதாவும் என் மனுதாரர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம் தான்!

என் மனுதாரர்களுக்கு தனியே பல நிறுவனங்கள் இருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பணம் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. ஆகவே என் மனுதாரர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 409, 120 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டது தவறு.''

குற்றப்பத்திரிகை தவறாகக் கையாளப்பட்டுள்ளது!

''இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நான்குபேர் மீதும் குற்றப்பத்திரிகையில் பதிவுசெய்யப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் தவறாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 1:  ஜெயலலிதா 1.7.91 முதல் 30.4.96 வரை முதல்வராக இருந்தபோது கணக்கில் காட்டப்படாத அதிகப்படியான சொத்துகளைச் சேர்த்து அதனை  சசிகலா, சுதாகரன்,  இளவரசி பெயரில் மாற்றி சொத்துகள் வாங்கியதாகவும், இவர்களால் தொடங்கப்பட்ட 32 கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அவை அனைத்தும்  ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

ஆனால், இவர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடுவதைப்போல 32 கம்பெனிகள் மட்டும் எங்களுடையது அல்ல. நாங்கள் வருமானவரித் துறையில் 35 கம்பெனிகளைக் குறிப்பிட்டு இருக்கிறோம். இதில் இருந்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தவறு என்பது புலப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியே விசாரித்துதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் யாரிடமும் விசாரிக்காமலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.  

குற்றச்சாட்டு 2: ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகப்படியான சொத்துகளைச் சேர்க்க  சசிகலா,  சுதாகரன்,  இளவரசி மூன்று பேரும்  உறுதுணையாக இருந்து கூட்டு சதித்திட்டம் தீட்டி சொத்துகள் ஈட்டியதாகவும், அதனால் இந்த  மூவரும் குற்றம்செய்யத் தூண்டியவர்கள் என்ற முறையில் இவர்கள் மூவரும் கூட்டு சதிகாரர்கள் என்று இந்திய தண்டனைச் சட்டம் 107 (குற்றம் செய்யத் தூண்டுதல்) 120(பி) (கூட்டு சதி) என்று ஊழல் தடுப்பு போலீஸார் பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஆனால் 1956-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த லில்லிஷாலி வழக்கில் இதே சட்டப் பிரிவின் கீழ் பதிவுசெய்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த வகையில் குற்றம் செய்யத் தூண்டினார்கள், எப்படியெல்லாம் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்கள் என்ற விவரத்தை தெளிவாகக் குறிப்பிடப்படாததால் அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதேபோல இந்த வழக்கிலும் குற்றம் செய்யத் தூண்டியதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ள என் மனுதாரர்கள் எப்படி குற்றம் செய்யத் தூண்டினார்கள், எந்தெந்த சொத்துகளைக் கூட்டு சதித் திட்டம் தீட்டி வாங்கினார்கள், யார் யாரெல்லாம் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று எதுவும் குறிப்பிடாததால், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

குற்றச்சாட்டு 3:  ஜெயலலிதா ஈட்டிய அதிகப்படியான சொத்துகள்  சசிகலா, சுதாகரன்,  இளவரசி பெயரில் முதலீடு செய்ததும், 32 கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களைத் தொடங்கி நான்கு பேரும் 66 1/2 கோடி முதலீடு செய்துள்ளதற்கு சரியான கணக்குகள் ஒப்படைக்காததால், இவர்கள் மீது 13(1) இ ஊழல் தடுப்புச் சட்டம் புரிந்தவர்களாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், ஜெயலலிதா அதிகப்படியான சொத்துகளை ஈட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அந்தச் சொத்துகளை இவர்கள் மூவர் பெயரில் கம்பெனிகள் வாங்கப்பட்டது என்பதற்கு எந்த ஆவணங்களோ, சாட்சியங்களோ கோர்ட்டில் ஊழல் தடுப்பு போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. 32 கம்பெனிகளுக்கு யார் யார் பங்குதாரர்கள், இயக்குநர்கள் என்பதையும், அந்த நிறுவனங்களில் பெயரில் எந்தெந்த சொத்துகள் எவ்வளவு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே, இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடும் குற்றசாட்டுகளை நீக்க வேண்டும்'' - இவ்வாறு தனது வாதத்தை எடுத்து வைத்தார் அமீத் தேசாய்.

மீண்டும் ஓரிரு நாட்களில் வந்து தனது வாதத்தை நிறைவு செய்யவிருக்கிறார் அமீத் தேசாய். இப்போது சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தனது வாதங்களைத் தொடர்ந்து வருகிறார்.  

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அடுத்த கட்டுரைக்கு