
2009-2013 ஆகிய ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 38,868.
2013-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,363.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2013-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 923. இவற்றில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 65 சதவிகிதம் பேர்.
1971-ம் ஆண்டுக்கும் 2012-ம் ஆண்டுக்கும் இடையில் இந்தியாவில் பாலியல் வன்கொடுமை 902 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
2012-ம் ஆண்டின் நிலவரப்படி நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 1,00,727
மேற்கண்டவை 'தேசிய குற்ற ஆவணக் காப்பகம்’(National Crime Records Bureau) வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்கள். இவை வெறும் எண்கள் அல்ல. 'பாரத மாதா’, 'தாய்மண்’ என்றெல்லாம் வார்த்தைகளில் பாசாங்கு செய்யும் இந்த நாடு, தன் பண்பாட்டு வாழ்வில் எத்தனை கீழ்த்தரமாக சீரழிந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள். 2013-ம் ஆண்டின் கணக்கை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 33 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டை மட்டும் பார்த்தால் ஒரு நாளைக்கு மூன்று சிறுமிகள் சிதைக்கப்படுகின்றனர். இதை படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட இந்த தேசத்தின் ஏதோ ஒரு மூலையில், உங்கள் மகளின் வயதுகொண்ட ஒரு சின்னஞ்சிறுமி யாரோ ஒரு காமுகனால் சிதைக்கப்படுகிறாள்.

அவன் 'யாரோ ஒருவன்’ இல்லை என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம். 94 சதவிகித வழக்குகளில் குழந்தைகளின் உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள்தான் இத்தகைய குற்றத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட குழந்தையுடன் தொடர்ந்து பேசிப் பழகி, கவனித்து, அதன் பலவீனம் என்ன, எதைச் சொன்னால் குழந்தை தன் சொல்பேச்சு கேட்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் மட்டும் அல்ல... வயதுவந்த பெண்கள் பாதிக்கப்படுவதும் தெரிந்தவர்களின் மூலம்தான். 2013-ம் ஆண்டில் மும்பை நகரத்தில் பதிவான 391 பாலியல் குற்ற வழக்குகளில் 14-ல் பெற்றோர்தான் குற்றவாளிகள். 19 வழக்குகளில் உறவினர்களும், 43 வழக்குகளில் அருகாமை வீட்டில் உள்ளவர்களும் 313 வழக்குகளில் தெரிந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
''சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒரு பொது விசாரணை நடத்தினோம். அதில் ஒரு பெண் பகிர்ந்துகொண்ட செய்தியைக் கேட்டு நடுங்கிப் போனோம். பெற்ற தந்தையே தன் மகளைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி வந்துள்ளார். அதன் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் மூன்றாவது குழந்தை தனக்குப்

பிறக்கவில்லை என்று அந்த அப்பனுக்கு சந்தேகம். இதனால் அந்தக் குழந்தை பால் குடிக்கக் கூடாது என்பதற்காக, இந்தப் பெண்ணின் மார்பகத்தையே பிளேடால் அறுத்துள்ளான். இதை அந்தப் பெண் மேடையில் விவரித்தபோது, அரங்கில் இருந்த அத்தனை பேரும் ரத்தம் உறைந்து போனோம்'' என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் உ.வாசுகி.
அண்மையில் பெங்களூரு பள்ளியில் படித்த ஆறு வயதே ஆன சின்னஞ்சிறுமியை அந்தப் பள்ளியின் ஸ்கேட்டிங் ஆசிரியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆசிரியர், இதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்காக இன்னொரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. அதைக்கூட விசாரிக்காமல் பள்ளியில் சேர்த்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மகாராஷ்டிராவின் கர்ஜத் நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களை அதன் தாளாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதும் ஆபாசப் படங்களைப் பார்க்க வைத்ததும் வெளியாகி உள்ளது.
ஆசிரியர்களை மிகவும் மதிக்கும் பண்பாடு கொண்ட இந்தியாவில், சொல்லப்போனால் நவீன தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அஞ்சி நடுங்குபவர்களாக பெற்றோர்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற குரூர மனநிலை அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
''இதில் ஆசிரியர்களை மட்டும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. மொத்த நமது சமூகச் சூழலும் பாலியல் வெறியூட்டுவதாக உள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள், இணையம்... என எங்கு திரும்பினாலும் பாலியல் வக்கிரம் தலைவிரித்து ஆடுகிறது. அதை செயல்படுத்திப் பார்க்கத் தகுந்த இடம் தேடி அலைகிறார்கள். சிறுமிகள் எதிர்த்துப் பேச மாட்டார்கள் என்பதாலும், அவர்களை

எப்படியும் அடக்கிவிட முடியும் என்று எண்ணுவதாலும், அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்'' என்கிறார் எழுத்தாளர் இமையம்.
டெல்லி நிர்பயா பிரச்னைக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கவனம் பெற்றன. அதன் பலன் ஜீரோ. உதாரணம், நிர்பயா பிரச்னை நடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 585. இது 2013-ம் ஆண்டில் 1,441 ஆக அதிகரித்துள்ளது. இரு மடங்குக்கும் அதிகம். மொத்த நாடும் வெறிபிடித்து அலைகிறதா அல்லது இத்தனை காலமும் தொடர்ந்து நடந்துவந்த இத்தகைய சம்பவங்கள் இப்போதுதான் வெளியில் வரத் துவங்கியுள்ளனவா என்று தெரியவில்லை. மொத்தத்தில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற ஒரு நாடாக இது மாறியுள்ளது.
நிர்பயா பிரச்னைக்குப் பிறகு அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 'நிர்பயா நிதி’ என்ற பெயரில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார். கடந்த பிப்ரவரியில் மேலும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 2,000 கோடி ரூபாய் அந்த நிதியில் இருக்கிறது. இதில் இருந்து 1,404 கோடி ரூபாயை சி.சி.டி.வி கேமரா அமைக்கவும், ஜி.பி.எஸ் கண்காணிப்புக் கருவி அமைக்கவும் செலவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெண்கள், ஆபத்து காலத்தில் தங்களது செல்போனில் இருந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை வடிவமைக்க 321 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய 'ஆபத்து கால அலாரம்’ கூகுள் ஆப்ஸிலேயே (Google Apps) இலவசமாக கிடைக்கும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு சதவிகிதம் கூட தீர்வுக்கு உதவாது என்கிறார்கள் பலரும். ஏனெனில், தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரங்களின்படி, 94 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள், அறிமுகமானவர்கள். எனில், ஜி.பி.எஸ் கருவியாலும் சி.சி.டி.வி. கேமராவாலும் என்ன பலன்?
''உண்மையில் அரசு செய்ய வேண்டியது மிகவும் எளிமையான விஷயங்கள்தான். இப்போது கண்காணிப்பு என்ற பெயரில் தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்துள்ளனர். இது குற்றவாளிகளுக்குச் சாதகமாக உள்ளது. இதற்குப் பதிலாக தெருக்களில் மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க வேண்டும். தள்ளுவண்டி வியாபாரிகளும், காய்கறி கடை வியாபாரிகளும் தொடர்ந்து நடமாடும்போது மக்கள் வந்து சென்றுகொண்டிருப்பார்கள். குற்றங்கள் குறையும்'' என்று அறிக்கை அளித்துள்ளது டெல்லியின் 'ஒன்றுபட்ட போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான நிலையம்’(the unified traffic and transportation infrastructure centre). இதையேதான் வழிமொழிகிறார் மும்பையில் பெண் டிரைவர்களை மட்டுமே வைத்து கால்டாக்ஸி நிறுவனம் நடத்தும் ப்ரியதர்ஷினி. ''தெருக்களில் பெண்களின் நடமாட்டம் எப்போதும் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்'' என்கிறார்.
ஒரு பக்கம் 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்’ குறித்த வசனங்கள் சிலாகிக்கப்படும் இதே சமூகத்தில்தான், அதன் மறுபக்கம் மிகவும் அவலமாகவும் இருக்கிறது. இத்தகைய செய்திகள் வெளிவரும்போது எல்லாம் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பரிதவித்துப் போகிறார்கள். பெற்றப் பிள்ளைக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றம் கொஞ்சம், பெண் பிள்ளைக்கு ஒரு பிரச்னை என்றால் அது குடும்ப கௌரவத்தையும் கெடுக்கும் என்ற அச்சம் மீதி... எல்லாம் சேர்ந்து பெண்ணின் சுதந்திரத்தை பறித்து, கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி, மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுகிறார்கள் பெண்கள்.
- பாரதி தம்பி