Published:Updated:

பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிப்பு!

இரா.மோகன்
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிப்பு!
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிப்பு!

ராமேஸ்வரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மெய்யம்புளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 115 மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில் முனியம்மாள் என்பவர் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் கடந்த 10 நாள்களாகப் பணிக்கு வரவில்லையாம். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளி வளாகத்தில்  உள்ள கழிவு நீர்த் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த 3 மாணவர்கள் கழிவு நீர்த் தொட்டியைத் திறந்து பினாயிலை ஊற்றியுள்ளனர். இதேபோல் அங்கிருந்த கழிப்பறையினை பினாயில் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதன் பின் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் மூவருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டதுடன், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தாய் பாண்டி லெட்சுமி கூறுகையில் ''கடந்த வாரம் பள்ளிக்கூடம் போய் வந்த என் மகனுக்குத் திடீரென மயக்கம் வந்தது. அதனைத் தொடர்ந்து வாந்தியும்  வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. இதேபோல் எனது மகனுடன் படிக்கும் மேலும் 2  பேருக்கும் இதுபோன்று ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்தோம். அப்போதுதான் பள்ளியில் உள்ள கழிவு நீர்த் தொட்டியைத் திறந்து பினாயில் ஊற்றிய சம்பவம் எங்களுக்குத் தெரியவந்தது.  இதுபற்றி வெளியே தெரிந்தால் எங்க பிள்ளைகளின் படிப்பு பாதிக்குமோ என்ற அச்சத்தினால் புகார் எதுவும் செய்யவில்லை" என்றார்.

இதுகுறித்து அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ''பள்ளிக்கு வரும் பிள்ளைகளை எங்களது சொந்தப் பிள்ளைகளாகவே கருதி அவர்களைப் பாதுகாப்பாக நடத்தி வருகிறோம். சம்பவம் நடந்த அன்று கழிவு நீர்த் தொட்டியிலிருந்து வாடை வந்தது உண்மை. ஆனால், எங்களுக்குத் தெரியாமலேயே அந்த மாணவர்கள் கழிவு நீர்த் தொட்டியின் மூடியைத் திறந்துள்ளனர். இது எங்கள் கவனத்துக்கு வந்தவுடன்  அந்த மாணவர்களை அழைத்து இனி இதுபோன்று செய்யக்கூடாது எனக் கண்டித்து அனுப்பினோம். பள்ளி முடிந்த பின் என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியாது" என்றனர்.