Published:Updated:

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் சரத்யாதவ்!

கு.ஆனந்தராஜ்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் சரத்யாதவ்!
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் சரத்யாதவ்!


பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியமைத்ததால், அதிருப்தியடைந்த சரத் யாதவ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவும் மெகா கூட்டணி அமைத்து பீகார் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டனர். இக்கூட்டணி வெற்றிபெற்றதால், நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் ஊழல் புகாரில் சிக்கியதால், அவர் தாமாக முன்வந்து பதவி விலகக் கெடு விதித்தார் நிதிஷ் குமார். ஆனால், அதற்கு தேஜஸ்வி முன்வராததால், கடந்த வாரம் கூட்டணியை முறித்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். 

அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றதுடன், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தையும் நிரூபித்தார் நிதிஷ் குமார். பா.ஜ.க-வுடன் இணைந்து ஆட்சியமைத்த நிதிஷ் நடவடிக்கையால், அவரது கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக, தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமாரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை நடத்த சரத் யாதவ் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 17-ம் தேதி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பே, மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை நடத்த சரத் யாதவ் திட்டமிட்டுள்ளார். மேலும், நடந்தவுள்ள மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரணியில் இருக்கும் கட்சியின் தலைவர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனால் பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.