அ.தி.மு.க இணைப்புக்கு இறுதி எச்சரிக்கை... நாள் குறித்த பி.ஜே.பி!

பன்னீர்செல்வம்- பழனிசாமி

“நீங்களாக அணிகளை இணைத்துவிடுங்கள், இல்லையென்றால் நாங்கள் இணைப்போம்” என்ற இறுதி எச்சரிக்கை பி.ஜே.பி தரப்பிலிருந்து  அ.தி.மு.க வின் இரண்டு அணிகளுக்கும் வந்துள்ளதால், முடிவு எடுக்க முடியாமல் திணறிவருகிறார்கள் அணித்தலைவர்கள். 
அ.தி.மு.க-வை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டத்தில் பி.ஜே.பி ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டது.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர் செல்வம் பி.ஜே.பி-யிடம் விசுவாசம் காட்டத் துவங்கினார். அ.தி.மு.கவில் போர்க்கொடி தூக்கிய பன்னீரை ஆட்சியில் மீண்டும் அமர வைப்பதற்கு தனது  முழு அதிகாரத்தையும் தமிழக ஆளுநரை வைத்து செய்துபார்த்தது பி.ஜே.பி தரப்பு. ஆனாலும், பன்னீரால் தொடர்ந்து முதல்வர் ஆசனத்தில் அமரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், பன்னீரை வைத்து ஆட்சியையும், கட்சியையும் ஆட்டுவிக்கும் முயற்சியிலிருந்து பி.ஜே.பி பின்வாங்கவில்லை. 

அதேசமயம் பன்னீர் செல்வம் இடத்திற்கு வந்த பழனிசாமியும், பி.ஜே.பி-க்கு இணக்கமாக போவதையே விரும்பினார். பி.ஜே.பி தரப்பிலிருந்து வரும் உத்தரவுகளை சிரத்தையோடு செய்து முடித்தார். ஆனால், பழனிசாமி ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருந்ததை பி.ஜே.பி தரப்பு விரும்பவில்லை. டெல்லி சென்ற பழனிசாமியிடம் பி.ஜே.பி தரப்பு “அந்த குடும்பத்தின் ஆதிக்கம் உங்கள் ஆட்சியில் இருந்தால். எதிர்காலத்தில் எங்கள் தரப்பு உதவி உங்களுக்கு கிடைக்காது. பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே எங்கள் ஆதரவு தொடரும்” என்ற ரீதியில் பழனிசாமியிடம் கூறி பீதியை ஏற்படுத்தியது. வராது வந்த மாமணியாக தனக்கு கிடைத்த முதல்வர் பதவியை விட சசிகலா  குடும்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற முடிவுக்கு வந்தார் பழனிசாமி. சசிகலா குடும்பத்திற்கு காட்டவேண்டிய விசுவாசத்தை பி.ஜே.பி.க்கு காட்ட ஆரம்பித்தார் அவர். தாங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டதில் பி.ஜே.பி மேலிடம் மகிழ்ச்சி அடைந்தது. அதேசமயம் அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தால், முழுப் பலனையும் அறுவடை செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்த பி.ஜே.பி, இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்று தங்கள் கோரிக்கையை இரண்டு அணிகளுக்கும் தெரிவித்தது. 
தங்கள் தரப்பிலிருந்து மந்தியஸ்தம் செய்ய முக்கிய பிரமுகர் ஒருவரையும் டெல்லி மேலிடம் தமிழகத்தில் நியமித்தது. அவர் இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அணிகள் இணைப்பிற்காக குழுக்களும் அமைக்கபட்டன. ஆனால், அதற்குள் சிறையில் இருந்த தினகரன் வெளியேவந்து கட்சியை தான் வழிநடத்தப் போவதாக அறிவத்தார். இது இரண்டு அணிகளின் இணைப்பிற்கு முட்டுக்கட்டை போட்டது. பழனிசாமி தரப்பு சசிகலாகுடும்பத்தை ஒதுக்கிவிட்டதாக அறிவித்ததும் தினகரன் தலைமையில் தனி அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த சிக்கலைத் தீர்த்து, அ.தி.மு.க-வை ஒன்று சேர்ப்பதே பி.ஜே.பி.க்கு நெருக்கடியான விஷயமாக மாறிபோனது.

தினகரனுக்கு சட்டரீதியாக நெருக்கடி கொடுத்து ஒதுக்கிவிட்டாலும், இரண்டு அணிகளும் மனம் ஒத்து இணைந்தால் மட்டுமே தங்களுக்கு சாதகம் என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்துவிட்டது. சமீபத்தில் டெல்லிக்கு சென்று இரண்டு அணிகளின் தலைவர்களும் மோடியை சந்தித்தார்கள். அப்போது “இரண்டு அணிகளும் இணைவதற்கான வேலையை தீவிரப்படுத்துங்கள்” என்று மோடி இரு தரப்பினரிடமும் அறிவுறுத்தினார். ஆனாலும் தொடர்ந்து இரண்டு அணிகளும் முரண்டு பிடித்துவருவதால், பி.ஜே.பி வேறு முகத்தை இரண்டு அணிகளிடமும் காட்டத் துவங்கியுள்ளது. 

மோடி - பழனிசாமி

இதனிடையே இரண்டு அணிகளுக்கும் டெல்லியில் இருந்து சில தினங்களுக்கு முன் உத்தரவு ஒன்று வந்துள்ளது.“அதில் வரும் 15-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் இணைவதற்காக முடிவினை எடுத்துவிடுங்கள். கட்சியை ஒருவரும் ஆட்சியை ஒருவர் கவனித்துக்கொள்ளுங்கள். இனியும் காலதாமதம் செய்ய  வேண்டாம். இனி இதே நிலை நீடித்தால், இரண்டு அணிகளை எப்படி இணைக்கு வேண்டும் என்ற யுக்தி எங்களுக்கு தெரியும்” என்ற தொனியில் டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளது. 

இந்த உத்தரவினால் இரண்டு அணிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சுற்றுப்பயணத்தில் இருக்கும் முதல்வர், விரைவில் இரண்டு அணிகள் இணைப்பிற்கான குழுவை நியமிக்க உள்ளார். தினகரன் தரப்பு ஒருபுறம் கொடுத்துவரும் நெருக்கடியை முறியடிக்க இரண்டு அணிகளும் இணைவது  எடப்பாடி அணிக்கும் அவசியமாக உள்ளதால் இன்னும் சில தினங்களில் எடப்பாடி பழனிசாமியே இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கோட்டையில் செய்திகள் உலவ ஆரம்பித்துள்ளது. அமித்ஷாவின் தமிழக விசிட்டிற்கு முன்பே அணிகள் இணைப்பிற்காக பூர்வாங்கப் பணிகள் துவங்கிவிட்டால், அமித்ஷாவின் தமிழக வருகையில், அ.தி.மு.கவை எந்த வகையில் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்துவிடும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!