Published:Updated:

முத்துவுக்கு முன் பிறந்த ’முத்து’... முரசொலி எனும் காலக்கண்ணாடி!

முத்துவுக்கு முன் பிறந்த ’முத்து’... முரசொலி எனும் காலக்கண்ணாடி!
முத்துவுக்கு முன் பிறந்த ’முத்து’... முரசொலி எனும் காலக்கண்ணாடி!

முத்துவுக்கு முன் பிறந்த ’முத்து’... முரசொலி எனும் காலக்கண்ணாடி!

ன்றைய தஞ்சை மாவட்டம், திருவாரூரில் பிறந்த தட்சணாமூர்த்தி தன் பள்ளிக்காலம் முதலே திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அரசியல் ஆர்வத்தோடு எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1940-ம் ஆண்டு தன் 16 வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன்முதலாக 'பழனியப்பன்'  நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அரங்கேற்றம் நடந்த அன்று பெரு மழையின் காரணமாக கூட்டம் வரவில்லை. 

நாடகத்துக்காக 200 ருபாய் செலவிட்டிருந்த நிலையில் வசூலானது வெறும் 80 ரூபாய் மட்டுமே. மீதி 120 ரூபாய்க்காக நாடகம் நடந்த அன்றே கடன்காரர்கள் நாடக கொட்டகையை முற்றுகையிட்டு பிரச்னை கிளப்ப , சிக்கலிலிருந்து அவரை திராவிட நடிகர் கழகத்தினர்  காப்பாற்றினார்கள். தங்கள் மன்றத்திற்காக 'பழனியப்பன்' நாடகத்தின் உரிமையை நுாறு ரூபாய் விலை கொடுத்து பெற்று 'சாந்தா' என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் நடத்த ஆரம்பித்தனர். இதனால் தொடர்ந்து தட்சணாமூர்த்திக்கு நாடகத்தின் மூலம் வருவாய் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நாடக வருவாய் அவருக்கு எழுத்துப்பணியின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடகங்களை எழுத தலைப்பட்டார். 'பழனியப்பன்' என்ற அந்த நாடகம் 'நச்சுக்கோப்பை' என்ற பெயரில் பல வருடங்கள் நடத்தப்பட்டது. தட்சணா மூர்த்திக்கும் நாடக உலகில் நல்ல பெயரையும் புகழையும் தந்தது. இப்படி சிக்கல்களை உளியாக்கிக்கொண்டு தானே சிலையாக உருவாகியவர் அந்த இளைஞர். அவர் வேறுயாருமல்ல; கலைஞர் மு.கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் அவரது எழுத்துக்கேடயமாக இருந்து அவரை பாதுகாத்தது முரசொலி இதழ்.

வயதில் நுாற்றாண்டைக்கடக்கவிருக்கும் அவரோடு அவரின் முதல் குழந்தையான முரசொலியும் முக்கால் நுாற்றாண்டை கொண்டாடுகிறது. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காதபேறு!   

முரசொலி கட்சிப்பத்திரிகை என்றாலும் அது ஒரு வரலாற்றை எதிரொலிக்கும் காலப் பெட்டகம். கட்சிப்பத்திரிகையாக அதன் பார்வையில் நிறை, குறைகள் இருக்கலாம். ஆனால் அது தமிழகத்தின் 75 ஆண்டுகால வரலாறு என்பதை எவரும் மறுக்கமுடியாது. முரசொலியைப்பார்க்காமல் கலைஞரின் பொழுது புலராது. முத்துவுக்கு முன் கருணாநிதி பெற்றெடுத்த முத்து முரசொலி. 

இந்தி திணிப்பை எதிர்த்திருக்கிறது. நேருவை எச்சரித்திருக்கிறது. அண்ணாவை அரவணைத்திருக்கிறது. அரிதார அரசியலை ஒரு காலத்தில் ஆதரித்திருக்கிறது. மற்றொரு காலத்தில் அதை அடித்துத் துவைத்திருக்கிறது. முரசொலி கருணாநிதியின் மனசாட்சி. அவரது அரசியல் நடவடிக்கைகளின் அந்தரங்கக் காதலி. விருப்பங்களின் காதலன். வீறுகொண்ட அவரது அரசியல் கோபத்திற்கு வடிகால். கருணாநிதியின் வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் கண்ணாடி. இத்தனை நீளம் தேவையில்லை; கருணாநிதி என்றால் முரசொலி. முரசொலி என்றால் கருணாநிதி, அவ்வளவுதான். 

முரசொலி பற்றிய மேலும் சுவாரஸ்யங்கள்...

1942-ம் ஆண்டு“முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி, அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி 'முரசொலி' என்ற மாத இதழை துவக்கினார். மாத இதழ் என்றாலும் அது ஒரு துண்டறிக்கை போன்றே வெளியிடப்பட்டது. 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கட்டுரைகள் எழுதினார் கருணாநிதி. உலகப் போர் நடந்த காலகட்டம் என்பதால் நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியாத நிலையில் பெரும்பாலும் கிராப்ட் தாள்களில் அச்சிடப்பட்டன. 

முரசொலியில் வெளியான சேரன் கட்டுரைகள் அண்ணாவுக்கு கருணாநிதியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படக் காரணமானது. அண்ணா நடத்திவந்த 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தார் கருணாநிதி. அது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா 'இளமைப்பலி' எழுதிய எழுத்தாளரை காண விரும்பி, அவரை அழைத்து வரச் செய்தார். நடு வகிடெடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு இந்த தோற்றத்துடன் தன் முன் வந்து நின்ற கருணாநிதியை உச்சிமோந்து பாராட்டினார் அண்ணா. 

28.5.1944 அன்று திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்த பெரியார், அதில் நடத்தப்பட்ட  ‘பழனியப்பன்’ நாடகத்தை பார்வையிட்ட பின் கருணாநிதியையும் முரசொலி ஏட்டையும் பாராட்டியதோடு 'மிகச்சிறந்த பணி' என்று கருணாநிதியைத் தட்டிக்கொடுத்தார். பெரியாருடன் நட்பு ஏற்படக் காரணம் முரசொலி. இதன் எதிரொலியாக குடியரசு பத்திரிகையில் அவரை உதவி ஆசிரியராக பணிக்குச் சேர்த்துக்கொண்டார். 

கருணாநிதி 1946-ம் ஆண்டின் மத்தியில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபோதுதான் பெரியாரின் நண்பரான  இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமியுடன் பழக்கம் உருவானது. இதுதான் 'ராஜகுமாரி' படத்தில் உதவி வசனகர்த்தாவாக வாய்ப்பு பெற்றுத்தந்தது. 
முரசொலியின் தலைப்பின் மீது  ஆரம்ப நாள்களில் ‘V’ என்று போடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. 

திராவிட இயக்கங்களால் காலம் முழுவதும் விரட்டப்பட்ட கட்சி காங்கிரஸ். அந்தப் பேரியக்கத்தை வீழ்த்தித்தான் தி.மு.க அரியணை ஏறியது. ஆச்சர்யம் என்னவென்றால்  ஆரம்ப நாள்களில் முரசொலி துண்டறிக்கையை அச்சிட்டது, திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணா பிரஸ் உரிமையாளர் கூ.ழு. நாராயணசாமி என்பவர். இவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். 

கருணாநிதியின் நண்பரான தென்னன் செயலாளராக இருந்து முரசொலி வெளியீட்டுக்கழகம் சார்பில் நிதித் திரட்டப்பட்டு முரசொலி வெளியானது. நிதிக்கேற்ப நூறு முதல் ஆயிரம் பிரதிகள் வரை அச்சிடப்பட்டன.

சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி கருணாநிதி எழுதிய ஒரு கட்டுரையால் சிதம்பரத்தில் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அப்படி ஓர் பரபரப்பை ஏற்படுத்தியது அக்கட்டுரை. 

நாடக ஆர்வத்தினால் கருணாநிதி கொஞ்சநாள் முரசொலியில் கவனம் செலுத்தாததால் சில காலம் முரசொலி சரிவர வெளியாகவில்லை. 14-1-1948 முதல் மீண்டும் வெளிவந்தது. 

‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியது முரசொலிதான். மாத இதழாக இருந்து வார இதழாக ஆனபோது 8 பக்கங்களுக்கு ஓரணா விலை நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பு இதழாக சில சமயங்களில் 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.

முரசொலியில் அன்றைய திராவிட இயக்க முன்னோடிகள் பலரும் எழுதினர். இயக்கம் சாராத விஷயங்களையும் கருணாநிதி அவ்வப்போது துணிச்சலாக எழுதிவிடுவார். இதனால் அண்ணாவுக்கும் அவருக்கும் சிறுசிறு மனக்கசப்புகள் வந்ததுண்டு. 1948 துாத்துக்குடி மாநாட்டின்போது  அப்போது கட்சியில் எழுந்த ஒரு பிரச்னைக்காக நடிகர் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையான தொனியில் தாக்கிப் பேசினார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, எம்.ஆர்.ராதாவை தாக்கி எழுதினார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

முரசொலியில் கலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிகளைத் துாண்டும். சேரன் என உணர்ச்சிமிகு கட்டுரைகள் எழுதுவார். கரிகாலன் என்ற பெயரில் கேள்வி- பதில் எழுதுவார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஆட்சியாளர்களை ஆட்டம் கொள்ளச்செய்யும் விஷயங்களை 'சிலந்தி' என்ற பெயரில் எழுதுவார். சிலந்திக்கட்டுரைகள் முரசொலியில் இடம்பெற்றால் அது அன்றைய அரசியலில் பரபரப்பை உருவாக்கிவிடும். 

மிசா காலத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்தது. குறிப்பாக முரசொலியை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப்பார்த்தார்கள் அதிகாரிகள். அப்போது மிசாவில் கட்சிக்காரர்கள் யார் யாரெல்லாம் கைது ஆனார்கள் என்ற தகவல்கள் சரிவரத் தெரியாமல் குழம்பிக்கிடந்தனர் தொண்டர்கள். கருணாநிதி ஓர் உபாயம் செய்தார். முரசொலியில்'அண்ணாவின் நினைவு அஞ்சலிக்கு வர இயலாதவர்கள்" என சூசகமாக மிசாவில் கைதானவர்களின் பட்டியலை அதில் வெளியிட்டார். இதழ் வந்தபின் 'வடைபோச்சே' என அதிகாரிகள் அதிர்ச்சியாகி நின்றனர். 

முரசொலியை தொண்டர்கள் தி.மு.க-வின் கெஸட் என்பார்கள். அந்த அளவுக்கு தி.மு.க பற்றிய தகவல்களுக்கு முரசொலியை அதிகாரபூர்வ ஆவணமாக கருதுவார்கள். 

பெரியார் தொண்டர்களை 'நண்பர்களே' என்றார். அண்ணா, 'தம்பி' என்றார். இவர்களுக்கு ஒருபடிமேல் சென்று 'உடன்பிறப்பே' என்றார் கருணாநிதி. முரசொலியில் 'உடன்பிறப்பே' என அவர் தீட்டும் கடிதங்கள் தி.மு.க தொண்டர்களுக்கு அத்தனை நெகிழ்ச்சியைத் தரும். அந்தக் கடிதங்களை தொண்டர்கள் வாய்விட்டு கருணாநிதியின் பாணியிலேயே ஏற்ற இறக்கத்துடன் சத்தம்போட்டுப் படிப்பதில் அலாதி இன்பம் காண்பார்கள். 

1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து வெளியேறிய பின் கிட்டதட்ட அவரது மரணம் வரை அவருக்கு எதிராக ஒரு எழுத்துப்போரையே நடத்தினார் கருணாநிதி. ஆச்சர்யமாக இந்த காலகட்டத்தில் 2 முறை எம்.ஜி.ஆர் குறித்து கருணாநிதி உருகி எழுதியதுண்டு. அது 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயம். 'நலம் பெற்றுவாருங்கள் முதல்வரே' என எம்.ஜி.ஆருடனான தனது 40 ஆண்டுகால நட்பை சிலாகித்து எழுதினார். அடுத்து எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது உருக்கமாக இரங்கல் எழுதினார். ஆனால், இவையிரண்டுமே வாக்குகளை குறிவைத்து கருணாநிதி நடத்திய அரசியல் என விமர்சனம் எழுந்தது. 

ஒருமுறை எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் புகாரின் அடிப்படையில் கருணாநிதி மீது விசாரணை நடத்த சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது. இதன் அலுவலகம் சென்னையில் 'காஞ்சி இல்லம்' என்ற இல்லத்தில் இயங்கியது. அப்போது கருணாநிதியை வழக்கில் சிக்கவைக்க நீதிபதி சர்க்காரியாவிடம் ஒருசிலர் பேரம் பேசுவதாக கருணாநிதிக்கு தகவல் வந்தது. மறுநாள் வந்த முரசொலியில் 'காஞ்சி'யில் 'நீதிதேவன் மயக்கம்' என அரைப்பக்கம் விளம்பரம் வெளியானது. நீதி தேவன் மயக்கம் என்பது அண்ணாவின் புகழ்பெற்ற நாடகம். ஆச்சர்யம் என்னவென்றால் அன்று காஞ்சிபுரத்தில் அப்படி ஒரு நாடகம் கிடையாது. முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின் நண்பருமான காஞ்சி சி.வி.எம். அண்ணாமலை குழப்பத்துடன் கருணாநிதியை தொடர்புகொண்டு.“ என்னங்க அப்படி ஒண்ணு நடக்கறதா தகவல் இல்லையே விளம்பரம் வந்துருக்கே“ என்றாராம். அப்போது விஷயத்தைச் சொல்லி சிரித்த கருணாநிதி, “விளம்பரம் போட்டாச்சு...வேற வழியில்லை. இன்னிக்கு சொன்ன டயத்துல நாடகம் நடத்துங்க” என்று சிரித்தபடி போனை வைத்தாராம்.. 

கருணாநிதி நினைவுடன் இருந்தவரையில் அவரது  அனுமதியின்றி முரசொலியில் ஒரு வார்த்தையும் அச்சில் ஏறாது. அத்தனை கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் அவர் கூர்ந்துகவனிப்பார். வெளி ஊர்களில் இருந்தாலும் அவரது கவனம் முரசொலி மீது இருக்கும். முக்கிய விஷயங்களைப் படித்துக்காட்டச்சொல்லி திருத்தங்கள் சொல்வார். முக்கிய கட்டுரைகளை ஒன்றுக்கு இருமுறை படித்து திருத்தம்போடுவார். 

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரம். அந்த  அமைப்பின்  தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் மரணமடைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை தாங்க முடியாமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதினார். முதல்வராக இருந்துகொண்டு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் எழுதுவது சட்டவிரோதமாகிவிடும். அது ஆட்சியை பலிவாங்கிவிடும் என பலர் அச்சுறுத்தியபோதிலும் தன் மனதுக்குப் பட்டதை உடனே செய்தார் கருணாநிதி. அப்படி எந்த விபரீதமும் நிகழவில்லை. அத்தனை துணிச்சல்காரர் கருணாநிதி.
 
மிசா காலத்தில் தணிக்கை முறையைக்கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டிக்கும்விதமாக வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு நல்லது. மோர் உடற்சூட்டைக் குறைக்கும் என பரபரப்பான அரசியல் பத்திரிகையில் பகடி செய்திருந்தார். 

முரசொலியில் இன்றும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் உழைப்பை போற்றும்வகையில் அவர்களின் நினைவுநாளில் கருணாநிதியின் இரங்கல் இடம்பெறும். தி.மு.க-வின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர், கருணாநிதிக்கு முன் தான் இறந்துவிடவேண்டும். அப்போதுதான் அவர் கையால் எனக்கு இரங்கற்பா எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என ஒரு மேடையில் உருகினார். கருணாநிதிக்கும் முரசொலியும் தொண்டர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் அது!

“கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராஜாஜி  ராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடருக்கு எதிர்வினையாக கருணாநிதி ‘மூக்காஜி’  என்ற பெயரில் முரசொலியில் ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பில் கடும் விமர்சனம் எழுதினார். நகைச்சுவை இழையோடிய இந்தத் தொடரை அந்நாளில் ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.

கருணாநிதி என்கிற படைப்பாளி தன் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்திய களம் முரசொலி. கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் சாதித்த அத்தனை விஷயங்களுக்கும் முரசொலியே முன்னோடி.

எம்.ஜி.ஆர் கருணாநிதியோடு பெரும் மனவருத்தத்தில் இருந்த ஒரு நேரம், தம் வீட்டிலும் அலுவலகத்திலும் முரசொலியை வாங்கக்கூடாது என அதிரடி உத்தரவு போட்டிருந்தார். ஒருமுறை வெளி ஊர் சென்றுவிட்டு தி.நகர் அலுவலகத்துக்கு திரும்பிவந்தார். அப்போது அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் முகரசொலியைப் படித்துக்கொண்டிருந்தார். கோபமான எம்.ஜி.ஆர் அந்த ஊழியரை அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் 3 மாதங்களுக்குப்பின் மீண்டும் அவரை அழைத்துக்கொண்டது வேறு கதை. 

ஒரு கட்சிப்பத்திரிகை கட்சியின் தொண்டர்களோடு இத்தனை உணர்வுபூர்வமான பந்தத்தில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. முரசொலியில் வெளியாகும் 'உடன்பிறப்பே' என்ற கலைஞரின் கடிதம் எத்தனை மோசமான நோயிலிருந்தும் தொண்டரை எழுந்து போராட்டக்களத்துக்கு வரவழைத்துவிடும் சக்தி வாய்ந்தது.

தன் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சென்று சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கருணாநிதி. 60 களில் அண்ணா தன் திராவிட நாடு கொள்கையை கைவிட்டபோது, அதற்கான நியாயமான காரணங்களை அன்றைய பொதுக்குழு ஒன்றில் எழுதிப்பேசினார். கிட்டதட்ட 200 பக்கம் கொண்ட அந்தப் பேச்சினை கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டு முரசொலியில் வெளியிட்டார்.  அண்ணாவின் கைப்பட எழுதிய பிரதியின் போட்டோ நகலோடு அது வெளியானது. பின்னர் அதை நுாலாகவும் வெளியிட வைத்தார். அன்றைய தலைமுறை திராவிட நாடு கொள்கையில் அண்ணாவின் நிலைப்பாட்டை நேர்மையாக புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு தலைவரின் பொறுப்பான ஒரு செயல் அது.

வயதும் உடல்நிலையும் கருணாநிதியை தொண்டர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியிருக்க 12 பக்க முரசொலிதான் இன்றைக்கும் அவர்களின் உள்ளத்தில் கருணாநிதியின் நினைவை எழுதிக்கொண்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு