Published:Updated:

ஆபாச இணையதளங்கள் முடக்கப்படுமா?

அவசரப்படுத்தும் சுப்ரீம் கோர்ட்... அமைதி காக்கும் மத்திய அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் எதையும்  செய்துகாட்டிவிடக்கூடிய தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால்,

ஆபாச இணையதளங்கள் முடக்கப்படுமா?

அதுவே நம் தலைமுறையினருக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. உதாரணமாக, இணையம். அறிவு விருத்திக்காக இணையத்துக்குள் வந்தவர்கள் கொஞ்சம் சறுக்கினால், ஆபாசங்களுக்குள் போய்விடக்கூடிய ஆபத்து.

''இந்தியாவில் பரவி வரும் ஆபாச இணைய தளங்களால் நிறைய வன்முறைகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடக்கின்றன. எனவே, ஆபாச இணைய தளங்களை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்'' என்று இந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கம்லேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில்தான் அதிரடி முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர் ராவ் ஆஜராகி வாதாடுகையில், ''நாட்டில் மொத்தம் நான்கு கோடி ஆபாச இணையதளங்கள் உள்ளன. ஓர் ஆபாச இணையதளத்தை அரசு முடக்கினால், அதுபோல மற்றொரு இணையதளம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நாட்டிலேயே ரகசியமாக செயல்படும் ஏராளமான கம்ப்யூட்டர் சர்வர்கள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக உள்ளது. இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக இணையதளங்களும் வெளிநாட்டில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. ஆபாச இணையதள விவகாரத்தில், வெளிநாட்டில் இருந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சர்வர்களை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வழிமுறை பின்பற்றப்படும்'' என்றார்.

நீதிபதிகள் குறிப்பிடும்போது, ''சட்டத்தைவிட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டமும் தேவைப்படுகிறது. இணையதளங்களில் ஆபாசம் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில், சட்டமும் தொழில்நுட்பமும் அரசு நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழி கண்டறியப்பட வேண்டும். ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான விதிகளையும் வழிமுறைகளையும் விரைவில் கண்டறிய வேண்டும். இதற்கான அறிக்கையை ஆறு வார காலங்களுக்குள் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளதா என தொழில்நுட்ப வல்லுநர் சைபர் சிம்மன் என்பவரிடம் கேட்டபோது, ''இன்று ஆபாச பக்கங்களைச் சிறுவர்கள்கூட எளிதாகப் பார்க்க முடியும் என்ற அளவில் இணையம் வளர்ந்துவிட்டது. கூகுளில் சென்று தமிழில் எந்த வார்த்தை கொடுத்து தேடத் துவங்கினாலும் ஆபாசம் அடங்கிய இணைப்புகளே அதிகம் தென்படுகின்றன. இதுபோன்ற இணையதளங்கள் பலவற்றின் சர்வர்கள் இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் ஆபாச வீடியோக்களைப் பார்க்க 'அடல்ட்’ வயதினருக்கு உரிமை உள்ளது. இதனால் அரசு அனுமதி பெற்று பல வெளிநாடுகளில் ஆபாச இணையதளங்கள் இயங்குகின்றன. அப்படியே முடக்கப்பட்டாலும் மாற்று டொமைன்களில் அவை உடனடியாக இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வு, உலக அளவில் பிரபலமான இணைய தேடுபொறிகளைக் கேட்டுக்கொண்டால் மட்டுமே, ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து ஆபாச இணையதளங்கள் தேடப்படும் சங்கேத வார்த்தைகளை இனம் கண்டு அவற்றை தடுக்க முடியும். ஆனால், முழுவதுமாக அந்த இணையதளங்களை முடக்க இயலாது. எந்த ஒரு நாட்டிலும் முடக்கப்பட்ட இணையதளங்களை மீண்டும் இயக்க வழியுள்ளது. இவற்றால்தான் அனைத்துவிதமான பாலியல் குற்றங்களும் நடைபெறுகின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இதுபோன்ற இணையதளங்களுக்குக் கணிசமான பங்குண்டு. எனவே, அரசு இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்'' என்றார்.

ஆபாச இணையதளங்கள் முடக்குவதற்கான முக்கியத்துவம் குறித்து அரசியல் பிரமுகரும் பெண்ணியவாதியுமான ஜோதிமணி, ''இதுபோன்ற இணையதளங்களை முடக்குவது மிகவும் முக்கியமான, ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை. இந்த சமுதாயத்தில் பெண்கள்மீது பலவிதமான வன்முறைகள் கையாளப்படுகின்றன. அதில் இது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வன்முறையாகக் கருதப்படுகிறது. காலம்காலமாக 'ஏ சர்டிபிகேட்’ படங்களை சினிமாவுக்குச் சென்று பார்த்து வந்த மக்களுக்கு, இணையம் ஆபாசத்தை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டது. இதைக் கையாள எந்த வயதுவரம்பும் இல்லை. ஆண்களுக்குத் தவறு செய்யும் நோக்கம் உருவாக இவை வழிவகுக்கின்றன. பெண்களை ஒரு உடலாகவும் இச்சைப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்கள் பலர் உள்ளனர். அவர்களால்தான், இதுபோன்ற வன்முறைகள் நடக்கின்றன. ஆபாச இணையதளத்தை முடக்குவது இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மட்டுமே.

பாலியல் வன்முறைகளை முழுவதுமாகத் தடுக்க குழந்தைகளின் ஆரம்ப வயதிலேயே இதற்கான கல்வியை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். பெண்களைச் சமமாக நடத்தக் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான், நம் நாட்டில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் முழுமையாகத் தடுக்க முடியும்'' என்றார்.

இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவுதான் வருங்கால தலைமுறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அரசின் முடிவு என்ன?

- மா.அ.மோகன் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு