காவி அடி...! கழகத்தை அழி...! பா.ஜ.க மீது 'நமது எம்.ஜி.ஆர்' பாய்ச்சல்!

அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். இன்று வெளியான அந்தப் பத்திரிகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து "காவி அடி ... கழகத்தை அழி..." என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளது.

 

அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாக உள்ளது. இதில், டெல்லியில் நேற்று முகமிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி, அணிகள் இணைவது தொடர்பாக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இன்று வெளியான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து கவிதை வடிவில் வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க பின்வழியாக ஆட்சியைப் பிடிப்பதாகவும், ஆளுநர்களை அரசியல் ஏஜென்ட்டுகளாக மாற்றி, அமலாக்கப்பிரிவு, வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தலை குனிய வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குழி தோண்டி புதைத்தவர்கள், உச்சநீதி மன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று அக்கிரமங்கள் நடத்தியவர்கள் என்று பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் பின்னர், மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததை, கருப்பு பணத்தை ஒழித்ததாகக் கதை விடுபவர்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளது. 

இறுதியாக, இவர்கள் செய்ததெல்லாம் அவர்களுக்கு ’சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி இன்னல் தந்ததும்தான்’ என முடித்துள்ளார்கள். பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளிவந்த இந்தச் செய்தி பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!