Published:Updated:

ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

Published:Updated:
ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

அழகிய ஜம்முகாஷ்மீர் சிதைந்துகிடக்கிறது. பெரும் மழையின் காரணமாக ஜீலம் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம், ஸ்ரீநகர் பள்ளத்தாக்கையே வெள்ளக்காடு ஆக்கிவிட்டது. பாலங்கள் நொறுங்கிவிட்டன; சாலைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் குளிரிலும், பசியிலும், இருளிலும் தவிக்கிறார்கள். மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர நிகழ்வு இது. அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் பரிதவிக்கிறார்கள். இதுவரை மரண எண்ணிக்கை 460-ஐ தாண்டிவிட்டது. வெள்ளம் விளைவித்த சேதத்தின் மொத்த மதிப்பு சுமார் 6,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைந்து முடுக்கிவிட முடியாதவாறு தொடர்மழை பெய்வதால், நிலைமை இன்னும் சிக்கல்!

 தேசத்தின் பேரழிவுகளில் ஒன்றாக மாறியிருக்கும் ஜம்மு-காஷ்மீர் துயரத்தைத் துடைக்க வேண்டியது, இந்திய மக்களாகிய நமது கடமை. நாட்டின் வட எல்லையில் நிகழ்ந்திருக்கும் இந்த அழிவில் இருந்து அதிவேகமாக மக்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக மொத்தம் 137 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதில் இருந்தே, அழிவின் பிரமாண்டம் புரியும். ராணுவத்தின் துணிவான மீட்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்தாலும், இத்தகைய பெரும் துயரில் இருந்து விரைந்து விடுபட எல்லோரும் இணைந்து பங்கு ஆற்றவேண்டியது நமது தார்மிகக் கடமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது’ என்று மத்திய அரசு  அறிவித்திருக்கிறது. ஜீலம் நதிப் படுகையில் நிகழ்ந்திருக்கும் இந்தத் துயரத்தைத் துடைக்க... காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, அமராவதி நதிப் படுகைகளில் வசிக்கும் நாமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். விகடன் குழும நிறுவனங்களின் பங்காக 10 லட்சம் ரூபாயை, காஷ்மீர் நிவாரண நிதிக்காக வழங்குகிறோம்.

விகடன் குழும வாசகர்களும், ஜம்மு-காஷ்மீர் மீட்புப் பணியில் பங்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம். காவிரி டெல்டா வறட்சி, சுனாமி, தானே புயல் போன்ற பேரிடர் தருணங்களின்போதெல்லாம், தேசத்தின் இன்னல்களைத் தீர்க்க ஓடோடி வந்து உதவும் பெருந்தன்மையான வாசகர்களே விகடனின் வரம். இதோ, இப்போது நம் முன்னே இருப்பதும் அதே போன்றதொரு தருணமே. எத்தனை இடர்கள் வந்தாலும் எதிர்த்து நின்று, மீண்டு வரும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு. இணைந்து நிற்போம்;

மீண்டு வருவோம்!

பரிதவிக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் வாசகர்கள், நேரடியாக, ‘Prime Minister's National Relief Fund’ என்ற பெயரில், வரைவோலை(Demand Draft) / காசோலை (Cheque) எடுத்து 'பிரதமர் அலுவலகம், சௌத் ப்ளாக், புதுடெல்லி - 110 011’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது https://pmnrf.gov.in/payform.php  என்ற இணையதளம் வாயிலாகவும் உதவலாம்!

கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் நமதாகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism