Published:Updated:

ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

Published:Updated:
ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புத் தேதியை குறிக்க... 17 வருடங்கள் உருண்டோடி இருக்கின்றன. சென்னை டு பெங்களூரு பயணத்தின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

 8.1.1997 தேதியிட்ட ஜூ.வி இதழில் இருந்து சில பக்கங்கள் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1996 டிசம்பர் 7-ம் தேதி. போயஸ் கார்டன் முன்பு காக்கிகள் படை குவிக்கப்பட்டது. கலர் டி.வி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளினார்கள். அதன் பிறகு அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்துகொண்டிருந்தன. அதில் சொத்துக் குவிப்பு வழக்கும் ஒன்று.  

சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தியது லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸ். வழக்கை புலனாய்வு செய்த நல்லம்ம நாயுடு தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரமனோகரன், பெண் இன்ஸ்பெக்டர் வசந்தா, ஸ்டெனோ மீனாட்சி ஆகியோர் அடங்கிய டீம் ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை அப்போது ஜெயலலிதா சமாளித்ததே ஒரு சாதனைதான். ஐந்து நாட்கள் நடந்த அந்த விசாரணையில் முதலில் ஜெயலலிதாவின் இளமைப் பருவம்... பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விவரம்... சினிமா என்ட்ரி போன்ற அடிப்படை கேள்விகள் கேட்கப்பட்டன. அடுத்து சசிகலா குடும்பத்தினர் விவரங்கள், போயஸ் கார்டனுக்கு வந்து சென்றவர்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

''போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பித்துக் கட்டியது எப்படி? ஹைதராபாத் தோட்டத்தில் புதிய பங்களா கட்டியது எப்படி?'' என்ற கேள்விகளுக்கு, ''அதெல்லாம் ஆர்க்கிடெக்ட்டிடம் கேட்டால்தான் தெரியும்!'' என்று பதில் வந்தது.

''சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மகாபலிபுரம் சாலையில் புதிய பங்களாக்களைக் கட்டினார்களே... அது எப்படி என்று தெரியுமா?'' என்ற கேள்விக்கு, ''எனக்குத் தெரியாது... அதை சசிகலாவிடம் கேளுங்கள்'' என்றாராம். ''எந்தெந்த கம்பெனிகள் நடத்தினீர்கள்? சசிகலாவோடு எந்தெந்த கம்பெனிகளில் பார்ட்னர்?'' என்ற கேள்விகளுக்கும் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்விகளுக்கும், ''பணம் வந்தது சசிகலாவுக்குத்தான் தெரியும். ஏன், எதற்கு என்று எல்லாம் ஞாபகம் இல்லை... செக்கில் கையெழுத்துக் கேட்டால்... போடுவேன்!'' என்றார்.

ஐந்து நாட்கள்... 1,000 கேள்விகள்... அசராத ஜெயலலிதா!

''இந்த வருமானம் எல்லாம் பிசினஸ் செய்து வந்ததா..?''

''ஆம்.''

''சசிகலா 24 மணி நேரமும் உங்களோடுதானே இருந்தார். அவர் எப்படி, என்ன பிசினஸ் செய்தார்?''

''எனக்குத் தெரியாது.''

''உங்கள் வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளும் வெள்ளிச் சாமான்களும் எப்படி கிடைத்தன?''

''சில நகைகள் மைசூர் மகாராஜா என் தாத்தாவுக்குக் கொடுத்தவை. பிறகு, எம்.ஜி.ஆரும் எனக்குக் கொடுத்தார். இது தவிர, எனக்குப் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர்களும் தந்தார்கள்.''

''பரிசுப் பொருட்களாக வந்தால், முதல்வர் என்ற முறையில் அதை அரசாங்கத்திடம்தானே ஒப்படைக்க வேண்டும்?''

''எந்த பொலிட்டீஷியன் பரிசுப் பொருளை வாங்கவில்லை? எம்.ஜி.ஆர் வாங்கவில்லையா?''

கட்சிக்காரர்களின் பெயர்களில் வந்த டிமாண்ட் டிராஃப்ட்டுகள் பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது. சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பிரமுகர் ரூ.50 லட்சம் பரிசு தந்ததாகக் கணக்கு. ''இவர்களால் இப்படிப்பட்ட தொகைகளைக் கொடுக்க முடியுமா?'' என்ற கேள்விக்கு ''அவர்கள் நன்கொடை வசூல் செய்து, எனக்குப் பரிசாகக் கொடுத்து இருக்கலாமே!'' என்று பதில் சொன்னார் ஜெயலலிதா.

இந்த டி.டி-க்களைத் தவிர, பார்சலாக வந்த பரிசுகள், அமெரிக்க டாலர்கள் பரிசு... இவை பற்றி கேள்வி கேட்க, ''பார்சல் வந்தது... அதன் உள்ளே வெள்ளி, தங்கம் இருந்தது எல்லாம் பிரித்த பிறகுதான் தெரியும். டாலர் அனுப்பியது யார் என்று தெரியவில்லை'' என்றார்.

''25,000 முதல் லட்சம் ரூபாய் வரை விலை மதிப்புள்ள 10 ஆயிரம் புடவைகளை எதற்காக வாங்கினீர்கள்? எப்படி வாங்கினீர்கள்?'' என்ற கேள்விக்கு ''எல்லாமே கிஃப்ட்தான்!'' என்றார். அடுத்து வாட்ச் பற்றி கேட்டபோதும், அதே பதில்!

ஜெயலலிதாவும் சசிகலாவும் நகைகளை அணிந்துகொண்டு இருக்கும் போட்டோ வெளியானபோது தமிழகமே அசந்துபோனது. அந்த நகைகள் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டன. சசிகலா அணிந்திருந்த நகைகள் எங்கேயும் கிடைக்கவில்லை. அதுபற்றி அதிகாரிகள் கேட்க, ''அந்த அம்மாவிடமே போய்க் கேளுங்கள்...'' என்று கோபமாகப் பதில் சொன்னார் ஜெயலலிதா. கடைசி தினங்களில் பொறுமை இழந்து, ''நீங்க எல்லாம் கருணாநிதி ஆளுங்க...'' என்று அதிகாரிகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

''10 லட்ச ரூபாய் உங்க கணக்கில் வருகிறது என்றால், அது எங்கே இருந்து வந்தது என்பதுகூட உங்களுக்கு ஞாபகம் இருக்காதா...?'' என்ற கேள்விகளுக்குக்கூட ''அப்போது நான் சி.எம். ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு இருந்த வொர்க் பிரஷரில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை'' என்றார்.

வளர்ப்பு மகன் திருமணச் செலவுக்கு ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் செலவு ஆனது எனக் கணக்கிட்டது போலீஸ். இதில் 'ரூ.30 லட்சம்தான் தன்னுடையது. மற்றவை பெண் வீட்டாரும் மற்றவர்களும் செய்தது...’ என்று பதில் சொன்னாராம் ஜெயலலிதா.

''கிஃப்டாக வந்தது... எம்.ஜி.ஆர். கொடுத்தது... சசிகலாவுக்குத்தான் விவரம் தெரியும்... ஞாபகம் இல்லையே... தெரியாது'' என்ற பதில்கள்தான் ஜெயலலிதாவிடம் இருந்து வந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism