Published:Updated:

வாதம் எதிர்வாதம்...

வாதம் எதிர்வாதம்...

வாதம் எதிர்வாதம்...

வாதம் எதிர்வாதம்...

Published:Updated:
வாதம் எதிர்வாதம்...

ஒரு தலைமுறையை தாண்டி நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி வாதத்தில் வைக்கப்பட்ட 'நறுக்குகள்’ இங்கே...

அரசு தரப்பு வாதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியாரா - ரூ.4,01,131.00, மாருதி 800 - ரூ.60,435.00, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

389 ஜோடி செருப்புகள் - ரூ.2,00,902.45. 914 சில்க் புடவைகள் - ரூ.61,13,700.00. 6,195 சில்க் இல்லாத புடவைகள் - ரூ.27,08,720.00. பழைய புடவைகள் ரூ.4,21,870.00. 28 கிலோ தங்க நகைகள். 1000-க்கும் மேற்பட்ட வைர கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573.27.  

1987-ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் ரூ.7.5 லட்சமும், வங்கி இருப்பு ரூ.1 லட்சமும் மட்டுமே இருந்தன. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957. இது 1996-ல் 66,44,73,573 ஆக உயர்ந்தது. இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குகூட சம்பளம் வாங்காமல் மாதம் 1 ரூபாய் வீதம் 5 வருடத்துக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார்.

வாதம் எதிர்வாதம்...

ஜெயலலிதா தரப்பு வாதங்கள்!

விவசாயம் செய்ததிலும் கட்டடங்கள் வாடகைக்கு விட்டதிலும்தான் வருமானம் கிடைத்தது.  

1991-1996 வரை முதல்வராக இருந்தபோது 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கினார்.  

சுதாகரன் திருமணத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதற்காக, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சிவாஜி குடும்ப திருமணம் என்பதால், கட்டணம் வாங்கவில்லை'' என குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.

ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தி.மு.க-வுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு இது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் ஜெயலலிதாவுக்கு உறவினர்களும் அல்ல. சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல. சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சுதாகரனின் திருமணத்துக்கான செலவுகள் முழுவதையும் செய்தார்.

தனிமனித சுதந்திர பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டில் 5 நாட்கள் ஆய்வு என்ற பெயரில், மீடியாக்களை அனுமதித்து படம் பிடித்து வெளியிட்டது தவறு.

கம்பெனிகளின் சொத்துகளாக ரூ.18 கோடியைக் காட்டுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா, ஜெ. பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் என்ற இந்த இரண்டு கம்பெனிகளில் மட்டும்தான் பார்ட்னராக இருக்கிறார். இதுதவிர வேறு எந்த கம்பெனிக்கும் தொடர்பு கிடையாது.

இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு.

கைப்பற்றப்பட்ட 12 ஆயிரம் புடவைகளை ஆறரை மணி நேரத்தில் கணக்கீடு செய்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு புடவைக்கு 2 விநாடி ஒதுக்கி எப்படி கணக்கீடு செய்ய முடியும்?

சுதாகரன் திருமணத்தைப் பார்க்காமல், விவரங்களைக் கேட்காமல், கற்பனையிலேயே மதிப்பீடு செய்து மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.  

ஜெயலலிதாவுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அவர்கள் வந்து போவார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு புடவைகளும் ஜெயலலிதாவுடையது என்று எப்படிச் சொல்ல முடியும்?

கைப்பற்றப்பட்ட செருப்புகளில் ஜென்ஸ், லேடீஸ் செருப்புகள் கலந்திருக்கின்றன. நிறைய ஒற்றை செருப்புகளையும் சேர்த்துக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஒற்றை செருப்பை யார் அணிவார்கள்?  

திருமண போட்டோக்களைக்கூட பார்க்காமல் திருமணத்துக்குப் போட்ட பந்தல் செலவு ரூ.5,21,23,532.00 என்றும், சாப்பாடு மினரல் வாட்டர் செலவு ரூ.1,14,96,125.00 என்றும் சுதாகரனின் திருமண உடைகளுக்கு ரூ.1,26,000.00 எனவும் கணக்கிட்டு இருப்பது தவறு.

சுதாகரன் திருமணத்தின் செலவுகளை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செய்தார்களே தவிர, இத்தகைய செலவுகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.

சுதாகரன் திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதற்காகத்தான் ஜெயலலிதா அழைக்கப்பட்டார். அவர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும், அலங்கார வளைவுகளையும் பேனர்களையும் வைத்ததோடு சில இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தனர்.  

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வந்த வருமானத்தையும் பிறந்தநாளுக்கு வந்த பரிசுப் பொருட்களையும் வருமானத்தில் காட்டாமல் அவரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் தவிர்த்து இருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் 12-க்கும் மேற்பட்ட உயர் ரக நாய்கள் இருந்தன. அந்த நாய்களுக்கு பாண்டிபஜாரில் இருந்து தினமும் 8 கிலோ மட்டன் வாங்கி வருவதாக ஜெயராமன் என்பவர் சாட்சி அளித்திருக்கிறார். இத்தகைய செலவுக்கும் ரசீது இல்லை.

சசிகலா தரப்பு வாதம்!

  ஜெயலலிதாவும் சசிகலாவும் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் பங்குதாரர்கள். மேலும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே சசிகலா பல பிசினஸ்களை நடத்தி வந்தார்.

ஜெயலலிதாவின் பணத்தில்தான் சசிகலா கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதற்கு காரணமாகச் சொல்வது இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதுதான். அதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது.

சசிகலா நல்ல வசதியான குடும்பத்தில் செல்வச்செழிப்போடு வளர்ந்தவர். பூர்வீகமாகவே 250 ஏக்கர் நிலமும், மன்னார்குடியில் இரண்டு மருந்துக் கடைகளும் இருந்தன. இதில் கிடைத்த வருமானத்திலும், அவர் பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் கிடைத்த வருமானத்திலும் சொத்துகளை முறையாக வாங்கினார்.

கங்கை அமரனை மிரட்டி பையனூர் பங்களாவை வாங்கவில்லை. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் உரிமையாளர்கள் மற்றும் குணபூசணியை ஏமாற்றி 900 ஏக்கர் கொடநாட்டை உரிமையாக்கிக்கொள்ளவில்லை.

வாதம் எதிர்வாதம்...

கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதற்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.

ஜெயலலிதா வீட்டில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் குடியிருந்தார்கள். என்னுடைய மனுதாரர் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டதோடு அவருடைய திருமணத்துக்குப் பிறகு வீட்டில் குடியிருந்தார். இது சமூகத்தில் வழக்கமான ஒன்றுதான்.

சசிகலா காளான் வளர்த்தார். அதில் கிடைத்த வருமானத்தை ஜெயலலிதாவுக்குக் கடனாகக் கொடுத்தார்.  

பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங் 1991-ல் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தார். அதனால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டது. இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் பன்மடங்கு லாபங்கள் ஈட்டின. அந்த நேரத்தில் சசிகலா பங்குதாராக இருந்த நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

வாதம் எதிர்வாதம்...

இளவரசி, சுதாகரன் தரப்பு வாதங்கள்!

உண்மையில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அல்ல இது. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துக்காக பொதுவாழ்க்கையில் உள்ள ஜெயலலிதாவையும் அவரது நண்பர்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு. ஜெயலலிதாவின் நண்பர்கள் பினாமிகளும் அல்ல.

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்திருந்தால் ஊழல் தடுப்பு போலீஸார் அவரிடமே விசாரித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவருடைய நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக சுதாகரன், இளவரசியை குற்றவாளிகளாக இந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஜெயலலிதாவுக்கு இளவரசி மற்றும் சுதாகரன் ரத்த சம்பந்தமான உறவோ, தொழில் தொடர்பான பார்ட்னர்களோ கிடையாது. இவர்களுக்கிடையே பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஒரு குடும்பம் என்பது ரத்த உறவினர்கள் சேர்ந்து இருந்தால் மட்டுமே குடும்பம் கிடையாது. நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம்தான். அப்படித்தான் ஜெயலலிதாவும் மனுதாரர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism