''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்! | Will Mannarkudi family step out of Politics?

வெளியிடப்பட்ட நேரம்: 21:58 (12/08/2017)

கடைசி தொடர்பு:21:58 (12/08/2017)

''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்!

தினகரன் - சசிகலா

முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும்  நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும்,  கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள்.

பன்னீருக்குப் பதிலாக சசிகலா குடும்பத்தினால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு எதிராகத் திரும்புவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் எந்தத் தினகரன் வெற்றிக்காக... வீதிவீதியாக யார் எல்லாம் களம் இறங்கினார்களோ, அவர்கள்தான் இப்போது தினகரனுக்கு எதிராகக் கச்சைக்கட்டி கொண்டு நிற்கிறார்கள். 

அதிகாரத்தின் எந்தப் பதவியிலும் இல்லாமலேயே, தமிழகத்தின் ஆட்சியையும், அதிகாரத்தையும் தங்கள் விரல்நுனியில் வைத்திருந்த மன்னார்குடி உறவுகளால் இப்போது ஓர் அதிகாரியைக்கூட மாற்ற முடியாத நிலைக்குத் தமிழக அரசின் நிர்வாகம் அவர்கள் கையைவிட்டுப் போய்விட்டது. “ சசிகலா குடும்பத்திலிருந்து ஒருவர்கூட ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கக்கூடாது” என்ற ஒரே அஜென்டாவைத்தான் பி.ஜே.பி. தரப்பு வேதவாக்காக எடப்பாடிக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. முதல்வர் என்ற உச்சாணியில் எடப்பாடி உட்கார்ந்ததும், அவரை ஏற்றிவிட்ட ஏணியான சசிகலா குடும்பத்தையே இப்போது எட்டிஉதைக்கத் தயாராகிவிட்டார். தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டுக்குப் பழனிசாமி வருவதற்கு முன்பே,அவர்களை எதிர்த்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நிதானமாக யோசித்து, பிறகு அதற்கான மாற்று ஏற்பாடுகளை இந்த ஆறு மாதங்களில் செய்துவிட்டுத்தான் தினகரன் தரப்புக்கு எதிராகக் கோதாவில் இறங்கியிருக்கார் பழனிசாமி.

தினகரனுக்கு எதிராக இப்போது நேரடியாகக் களத்தில் நிற்கும் பழனிசாமி தரப்பு, சசிகலா விஷயத்தில் மென்மையான போக்கை இன்னும் கடைப்பிடித்துவருகிறது. எடப்பாடி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில்கூட, “சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி இன்னும் தேர்தல் ஆணையத்தில் முடிவில் இருக்கிறது” என்று மட்டும் சொல்லியுள்ளார்கள். 

இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள், “தினகரனை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் எடப்பாடி தரப்புக்கு இல்லை. ஆனால், ஒருகட்டத்தில் எடப்பாடிக்கு வந்த நெருக்கடிகளால் அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மத்திய அரசு பன்னீருடன் காட்டிய நெருக்கம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆட்சியில் மன்னார்குடி உறவுகளின் தலையீடுகள் வெளியே தெரியாமல் அதிகரிக்க ஆரம்பித்தன. இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் மத்திய அரசு மோப்பம்பிடித்த பிறகு, எடப்பாடிக்கு பிரஸர் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், கொங்குமண்டலத்தின் முக்கியப் புள்ளிகளும், 'எதற்காக நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டுப் போகவேண்டும்' என்று தூபம் போட்டபிறகுதான் எடப்பாடியின் மனநிலையும் மாறியது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த எடப்பாடி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலையை  மூன்று மாதங்களுக்குப் பின்பே பார்க்க ஆரம்பித்துவிட்டார். இப்போதுகூட, தினகரன் பின்னால் நிற்பதாகச் சொல்லும் 37 எம்.எல்.ஏ-க்களில் முப்பது பேர் எடப்பாடியுடனும் நல்ல நெருக்கத்தில் உள்ளார்கள்” என்கின்றனர்.

மன்னார்குடி


தங்களால் சீட் வாங்கியவர்கள் தங்களுக்கு விசுவாசம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மன்னார்குடி தரப்பு ஆதரவாளர்கள்  எடப்பாடிக்கு எதிராகக் களத்தில் இறங்கினார்கள். ஆனால், ''பின்னால் நிற்போம், ஆட்சியைக் கலைக்க நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்”என்று தினகரன் பின்னால் நிற்கும் எம்.எல்.ஏ-க்களே சொல்ல ஆரம்பித்ததும்தான் தங்கள் கட்டுப்பாட்டில் கட்சி இனி இருக்காது என்ற முடிவுக்கு தினகரன் வந்துள்ளார்.

 ஒருவேளை தன்னிடம் இருக்கும் ஒற்றை இலக்க எம்.எல்.ஏ-க்களைவைத்து ஆட்சியை ஆட்டம்காண வைக்கலாம் என்று தினகரன் திட்டமிடுவது தெரிந்துதான், பழனிசாமி தரப்பு வழிய சென்றே பன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்துள்ளது. துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி சென்ற பன்னீர் மற்றும் பழனிசாமியிடம் அங்கேயே பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. ''கட்சியை ஒருவரும், ஆட்சியை ஒருவரும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தை நெருங்கவே விடாதீர்கள்'' என்று சொல்லியுள்ளார்கள். அதற்கு இரண்டு பேரும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.

தினகரன் தஞ்சாவூரில் ஆவேசமாகப் பேட்டி கொடுத்ததன் காரணமே இதுதான். தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து இவர்கள் மாறிவிட்டார்கள் என்ற முடிவுக்கு மன்னார்குடி வந்துவிட்டதால், கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில்தான்  பொதுக்கூட்டத்தைப் பிரமாண்ட அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

“மன்னார்குடி உறவுகளுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை தங்கள் பக்கம் எப்படியும் கணிசமான எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுவந்துவிடாலம் என்பதுதான். பதினைந்து எம்.எல்.ஏ-க்களின் வில்லத்தனம் மன்னார்குடி குடும்பத்திடம் உள்ளதாம். அதை வெளியிட்டால், அவர்களின் அரசியல் எதிர்காலமே காணாமல் போய்விடும் என்று சம்பந்தபட்டவர்களிடம் பேசியுள்ளார்கள். நாங்கள் சொல்லும்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள். எடப்பாடியை மாற்ற நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதற்கு, நீங்கள் ஆதரவு கொடுங்கள். பிறகு நடப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மன்னார்குடி தரப்பு முடிவு செய்துள்ளது.

ஆனால், மன்னார்குடியின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பன்னீரும், பழனிசாமியும் இணைந்தால் அவர்களுக்கு வேலை இருக்காது. ஆனால், நான்கு ஆண்டு இந்த ஆட்சி  நீடித்தால், அதன்பிறகு நடப்பதை இப்போது கணிக்க முடியாது” என்கிறார்கள் மன்னார்குடிக்கு நெருக்கமானவர்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் போகத் தயாராகவே இருக்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.