Published:Updated:

'டார்கெட்' சென்னை!

பாகிஸ்தான் ஆபரேசனில் தமிழக இளைஞர்கள்

'டார்கெட்' சென்னை!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த நபர் சிங்கப்பூர் சென்றார். தன்னோடு கல்லூரியில் படித்த சக நண்பர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து சிரியாவில் போர் நடத்திவரும் தீவிரவாதிகளுக்கு உதவ அனுப்பி வைத்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் அரசு, அந்த நபரை நாட்டைவிட்டு விரட்டி, தமிழகத்துக்கே அனுப்பிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் அந்த நபர் தங்கியிருந்தாக கடைசியாக போலீஸுக்குத் தகவல்.

 மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் மேற்காசிய நாடுகளுக்கு வேலைக்குப் போயிருக்கிறார். போன இடத்தில், அமெரிக்க ராணுவத்துக்கு தளவாடங்களை சப்ளை செய்யும் ஓர் அமெரிக்கருடன் பழக்கம். பிறகு, நம்மூர்க்காரர் திரும்பி வந்துவிட்டார். அதன் பிறகும், அந்த அமெரிக்கருடன் தொடர்பு நீடித்திருக்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும்படி நம்மூர்க்காரருக்கு அமெரிக்கர் ஐடியா கொடுத்ததோடு, பண உதவியும் செய்திருக்கிறார். அந்த அமெரிக்கர் சமீபத்தில் தமிழகம் வந்துபோனதை லேட்டாக தெரிந்துகொண்ட உளவுத் துறையினர், 'இதெல்லாம் உண்மைதானா?' என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர்.  

சென்னை அண்ணா நகரில் ஒரு டிராவல்ஸ் ஏஜென்டை திடீரென போலீஸ் பிடித்தது. வெளியே சொல்லப்பட்ட விஷயம்... வேலைவாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி செய்தவரை கைது செய்திருக்கிறோம். உண்மையில், இவர்கள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்குப்போன இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது. இங்கிருந்து வேலைவாய்ப்பு என்கிற போர்வையில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். போன இடத்தில் சிலரை தேர்ந்தெடுத்து அல்கொய்தா இயக்கத்தினர் அழைத்துப்போய் ஆயுதப் பயிற்சி தருகிறார்களாம். அப்படிப் பயிற்சி முடித்ததும், இந்தியாவுக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்களாம். இவர்கள்தான் இங்கே நாசவேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற விவரங்களை உளவுத் துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தமிழகத்தை ரத்தக்களறி ஆக்க இலங்கையும், பாகிஸ்தானும் ரகசிய கூட்டணி அமைத்து செயல்பட்டுவருகின்றன. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா என்கிற இருவர் வெளிப்படையாக தமிழகத்துக்குள் உளவாளிகளை அனுப்பி வருகிறார்கள். திருச்சியில் பிடிபட்ட தமீம் அன்சாரி என்பவர் இந்தியாவின் முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்து அனுப்பியதை போலீஸார்

'டார்கெட்' சென்னை!

கண்டுபிடித்தனர். அடுத்து, சென்னையில் பிடிபட்ட ஜாகீர் உசேன் தனது வாக்குமூலத்தில் பாகிஸ்தான் அதிகாரி சித்திக்குடன் தனக்கு இருந்த நெருக்கத்தைத் தெரிவித்தார். போலீஸ் பதிவேட்டிலும் இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் முக்கியத் தலைவர் அறிவித்துள்ள நிலையில், அவர்களின் முதல் அட்டாக்... 'தமிழகத்தின் கடலோரப் பகுதிதான்’ என்ற திடுக்கிடும் தகவல் மத்திய உளவு நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தப் பகுதியில் கடல்வழி தாக்குதல் நடத்த எந்த நேரமும் தயாராகக் காத்திருக்கிறார்கள். இதேபோல, இந்தியாவின் முக்கிய இடங்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் பயங்கர திட்டத்தை அரங்கேற்ற தன்னை தயார் செய்துவந்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்ட அருண் செல்வராசன் சொல்லியிருக்கிறார்.

போலி ஆவணங்களைக் கொடுத்து சென்னையில் விமானப் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பதும் தற்போது போலீஸுக்குத் தெரியவந்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்கள், துறைமுகங்கள், சென்னையின் முக்கிய இடங்களைப் பற்றிய முழு வரைபடங்கள், புகைப்படங்களை கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் உட்கார்ந்துகொண்டு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவன அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். இந்த விவரங்களை வைத்து ஸ்கெட்ச் போட்டுத் தாக்குதல் நடத்த தற்கொலைப் படையினரை அனுப்புவதுதான் அவர்களின் திட்டம். இதற்கான தகவல்களை சேகரிக்கும் உளவுப் பணியில் கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிவீசி பலரையும் ஈடுபடுத்தி வருகிறார்கள். அவர்களில் கடைசியாகப் பிடிபட்ட அருண் செல்வராசன் ஏழாவது ஆள்! இவரைப்போல, மேலும் எத்தனை பேர்களை உளவாளிகளாக அனுப்பியிருக்கிறது ஐ.எஸ்.ஐ என்பதுதான் புதிராக இருக்கிறது. ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற தீவிரவாத அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் மூளைச்சலவை நடக்கிறது. இணையதளம், இன்டர்நெட்டின் சில வெப்-சைட்டுகள் மூலம் ரகசிய சங்கேத பாஷைகளில் பிரசாரம் நடக்கிறது. இப்படித்தான் இவர்களுக்குள் தகவல் பரிமாறுகின்றனர். இங்குள்ள ஏஜென்ட்கள் பணத்தைக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்கள். இந்த வகையில், தீவிரவாதிகள் நடத்தும் போரில் தங்களையும் இணைத்துக்கொள்ள இங்கிருந்து ஏராளமான இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் கிளம்பிப் போகிறார்கள். தமிழகத்தின் சில ஊர்களில் இருந்து வெளிநாடுகளில் வேலைபார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு தீவிரவாதிகளுடன் போரில் ஈடுபட ஈராக்குக்கு இளைஞர்கள் பலர் போயிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாகச் சொல்லி ஈராக் நாட்டில் போரில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. இங்கிருக்கும் பெற்றோர்களுடன் சிலர் தொடர்பில் இல்லாமல் இருப்பார்கள். அல்லது பொய்யான காரணங்களைச் சொல்லுவார்கள். பெற்றோர்தான் அவர்களை தீர விசாரிக்கவேண்டும்'' என்கிறார். அவரிடம் நாம், ''தமிழகத்தில் எந்தெந்த ஊரில் இருந்து அப்படிச் சென்றிருக்கிறார்கள்?'' என்று கேட்டோம். ''சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாது. பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தின் கடலோர ஊர்களில் சில தீவிரவாதிகள் பிடிபட்டு வருவதை கவனியுங்கள். திருவள்ளூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் பிடிபட்டவர்களில் ஒரு சிலர் கடலூர் மாவட்டத்தினர். ராஜஸ்தானில் சதி வேலைகளில் ஈடுபட்டு கடலூர் பக்கம் தங்கியிருந்த ஒரு பிரமுகரை வடநாட்டு போலீஸ் பிடித்துச் சென்றது. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்'' என்றார்.

''பிடிபட்டவர்கள் ஏற்கெனவே நம் நாட்டின் முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்திருப்பார்களே... அவற்றை வைத்து அவர்கள் தாக்குதல் முயற்சிக்கு ஆயத்தமாகியிருப்பார்களே?'' என்று கேட்டோம்.

''ராணுவ நிலைகள், அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவற்றின் உட்புறங்களில் யாரும் புகைப்படம் எடுக்க முடியாது. வெளியில் இருந்தபடி, படம் எடுத்திருக்கிறார்கள். உள்ளே வேலை செய்கிறவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்றனர். அதற்குள்ளாகவே, அவர்களை நாங்கள் பிடித்துவிட்டோம். மேலும், எத்தனை பேர்களை அனுப்பியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழக மீனவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். அவர்கள் உதவியுடன் எவ்வித தீவிரவாத ஊடுருவலையும் முறியடிப்போம். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற யாராக இருந்தாலும் தேசிய புலனாய்வுப் படை, மத்திய உளவுத் துறை, மாநில க்யூ பிரிவு ஆகிய போலீஸாருக்கு ரகசியத் தகவல் தரலாம். மக்கள் கண்பார்வையில் எந்தத் தீவிரவாதிகளும் தப்பிக்க முடியாது என்பது எங்கள் கணிப்பு'' என்றார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது!

- கனிஷ்கா

சிக்கலில் சினிமா பிரபலங்கள்!

அருண் செல்வராசன் சென்னையில் 'ஐஸ்ஈவன்ட்’ என்கிற பேனரில் தனியார்களுக்கு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தவர். அதில் கலந்துகொண்ட தமிழக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் யார் யார் என்று ஆல்பங்களை வைத்து போலீஸார் லிஸ்ட் எடுத்துள்ளனர். அருண் செல்வராசனின் வெப்-சைட்டில் வி.ஐ.பி-களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். தவிர, தனது செல்போனில் 'ஆட்டோ ரெக்கார்டர்’ என்கிற சாஃப்ட்வேரையும் போட்டிருக்கிறார். 200 கால்கள் வரை பதிவு செய்யும் அதிநவீன வசதி கொண்டது அது. அதைக் கைப்பற்றி இரவு பகலாக பேசிய விவரங்களை போலீஸார் கேட்டுவருகிறார்கள். ''பிஸினஸ் தொடர்பு இருந்தால் பரவாயில்லை. அதைத்தாண்டி சிலர் தொடர்பு வைத்திருந்தது தெரிகிறது. அந்தத் தொடர்பு பற்றி தீவிரமாக விசாரிக்கிறோம்''என்கிறது போலீஸ்.

அடுத்த கட்டுரைக்கு